இன்றைய முக்கிய நிகழ்வுகள் (அக்டோபர் 04)

உலக விலங்கு நாள் இந்த சர்வதேச நிகழ்வு விலங்குகளின் நலனை உறுதி செய்வதையும், இயற்கையில் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக விலங்குகள் தினம் முதன்முதலில் மார்ச் 24, 1925 அன்று ஜெர்மனியின் பெர்லினில் சினாலஜிஸ்ட் ஹென்ரிச் சிம்மர்மேனின் முயற்சியால் கொண்டாடப்பட்டது. 1931 ம் ஆண்டு மே மாதம் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் நடந்த சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு காங்கிரஸ் மாநாட்டில், அக்டோபர் 4 ந் தேதி உலக விலங்குகள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4-ல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2003 ம் ஆண்டு முதல், இங்கிலாந்தை மையமாக கொண்ட விலங்குகள் நல தொண்டு, நேச்சர்வாட்ச் அறக்கட்டளை சர்வதேச விலங்குகள் தின கொண்டாட்டத்தை நடத்தி வருகிறது. இந்த நாள் பொதுவாக அழிந்து வரும் நமது உயிரினங்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பது மட்டுமல்லாமல், அவற்றை எவ்வாறு மீட்பது என்பதையும் கற்றுக்கொடுக்கிறது. உலக விலங்கு தினம் படிப்படியாக ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறி வருகிறது, இது விலங்கு பாதுகாப்பு இயக்கத்தை ஒன்றிணைத்து ஊக்குவிக்கிறது. விலங்குகள் மீட்புக் கூடங்களுக்கு ஏதாவது பங்களிப்பது, விலங்குகள் நலப் பிரச்சாரங்களைத் தொடங்குவது மற்றும் பலவற்றின் மூலம் மக்கள் இந்த நாளை நினைவுகூறுகின்றனர். விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளின் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

உலக விண்வெளி வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. சமூக தேவைகளுக்கான விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடு பூமி என்கிற கிரகத்தில் வசிக்கும் மனிதர்களிடம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனித மேம்பாட்டிற்காக தங்கள் பங்களிப்பை கொடுத்து வரும் உலக விண்வெளி வார கழக வாரியத்தின் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக 1999ஆம் ஆண்டு ஐ.நா பொதுசபையால் இத்தினம் அறிவிக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி தான் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1 விண்ணில் செலுத்தபட்டது. பின்னர், அக்டோபர் 10, 1967ஆம் ஆண்டு விண்வெளியை நாடுகள் பயன்படுத்திக்கொள்வதற்கான விதிமுறைகளுடன் விண்வெளி ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த இரண்டு நாட்களையும் நினைவு கூறும் வண்ணம், இரண்டு நாட்களுக்கும் இடையிலான வாரம் விண்வெளி வாரமாகக் கொண்டாடப்படும் என்று டிசம்பர் 6,1999 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், பெண்ணியவாதி…. பன்முக ஆளுமை சரளாதேவி நினைவு நாளின்று! ஒடிசா மாநிலத்தின் சட்டமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்பட்ட முதல் பெண், சரளாதேவி. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஒடிசாவிலிருந்து சேர்ந்த முதல் பெண்; ஒடிசா சட்டமன்றத்தின் முதல் பெண் சபாநாயகர்; கட்டாக் கூட்டுறவு வங்கியின் முதல் பெண் இயக்குநர்; உட்கல் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் செனட் உறுப்பினர்… இப்படிப் பல பெருமைகளுடன் இந்திய வரலாற்றில் கம்பீரமாக நிற்பவர், சரளாதேவி. உட்கல் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக இருந்தபோது, கல்வித் துறையில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் மகத்தானவை. இன்றைய தேதிவரை நம் தேசத்தில் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புஉணர்வு முழுமையாக ஏற்படவில்லை. தமிழகம் போன்ற நன்கு வளர்ந்த மாநிலங்களிலும் பெண்களைப் படிக்கவும் வேலைக்கு அனுப்பவும் மறுக்கும் குடும்பங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், போன நூற்றாண்டிலேயே பெண்களின் கல்விக்காக யூஜிசி வரை சென்று போராடியவர் சரளாதேவி. அனைவருக்கும் கல்வி எனும் கோரிக்கையுடன் பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் திடப்படுத்தும் கல்வி முறை தேவை என்பது அவருடைய கருத்து. அதில் தன்னால் முடிந்த பங்கை வாழ்நாள் முழுக்க ஆற்றிவிட்டுச் சென்றவர் சரளாதேவி. “கடவுள் என்பவர் பெண்களுக்கானவர் அல்ல; அவர் முழுவதும் ஆண்களின் சொத்தாகவே இருந்துவருகிறார். அதனால்தான், மதமும் அதன் சம்பிரதாயங்களும் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவநம்பிக்கையை ஏற்படுத்திவிட்டன” எனத் துணிச்சலுடன் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சொன்னவர் சரளாதேவி. `என் புரட்சிகரமான வாழ்க்கை’ (The Story Of My Revolutionary Life) எனும் தலைப்பிலான கட்டுரையில், தன் பால்யம் குறித்து எழுதும்போது இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அன்றைய சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்ட பல செல்வ செழிப்பான தலைவர்கள்போல சரளாதேவி வசதியானவர் இல்லை. ஆனாலும், சிறு வயதிலிருந்தே கல்வி மீது தீராத காதலுடன், இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பெண்ணியச் செயற்பாட்டாளராக தன்னை வளர்த்துக்கொண்டவரிவர் பொதுத்தளத்தில் மட்டுமன்றி, இலக்கியத்திலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர், சரளாதேவி. அவருக்கு முன்பு எழுதிக்கொண்டிருந்த பெண் எழுத்தாளர்கள், ஆன்மிகம், காதல், இயற்கை போன்ற தலைப்புகளில்தாம் எழுதிவந்தனர். ஆனால், ஒடிசாவில் அரசியல் பார்வைகளை இலக்கியத்துக்குள் கொண்டுவந்த முதல் பெண் படைப்பாளி, சரளாதேவி. கவிதை, புனைவு, நாடகம் எனப் பரந்துபட்ட எழுத்துத் துறைகளில் ஆர்வம் செலுத்தினார். அவரது சிறந்த எழுத்தாற்றல் வெளிப்பட்டது, கட்டுரைகளில்தாம். எந்த வடிவத்தில் எழுதினாலும், ஆழமான பார்வையும் சமரசமற்ற கருத்துகளும் அவரது எழுத்தில் இருக்கும். இத்தனை சிறப்புகளும் பன்முகத்தன்மையும் படைத்த ஆளுமையாக விளங்கிய சரளாதேவி, வரலாற்றின் பக்கங்களில் போதுமான அளவு கொண்டாடப்படவில்லை என்பது வேதனையான உண்மை.

பகுத்தறிவாளர் பசவ பிரேமானந்த் நினைவு நாள் இன்று. பசவ பிரேமானந்த் (Basava Premanand, பிப்ரவரி 17, 1930 – அக்டோபர் 4, 2009) உலகெங்கும் அறியப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளரும் இறைமறுப்பாளரும் ஆவார். கேரளத்தின் கோழிக்கோட்டில் பிறந்தார்.1940களில், பிரேமானந்த் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற பள்ளிப்படிப்பை விட்டார். அடுத்த ஏழு ஆண்டுகள் சாந்திநிகேதன் போன்ற கல்வியமைப்பையொத்த ஸ்ரீ்டீலா குருகுலத்தில் படித்தார். 1975 வாக்கில் சத்திய சாயி பாபாவுடன் மோதி அவரது இறைத்தன்மையை பொய்மை என நிறுவுவதில் முழுநேரம் ஈடுபட்டார். அவர் தமது மந்திரவாத ஆற்றல்களை பயன்படுத்தி அத்தகைய இறைமாந்தரால் செய்துகாட்டுவதாகக் கூறப்படும் விந்தைகளை அறிவியல் வழியே செய்ய முடிவதைக் காட்டி விளக்கினார். குரு உடைப்பாளர்கள் (Guru Busters)என்ற பிரித்தானிய ஆவணப்படத்தில் பிரேமானந்த் மனித ஆற்றலுக்கு மீறியதாகக் கருதப்படும் உடலை அந்தரத்தில் மிதப்பது, உடலைத் துளைப்பது மற்றும் உயிருடன் புதைந்திருப்பது, விபூதி வரவழைப்பது, லிங்கம் வரவழைப்பது, முதுகில் அலகு குத்தி காரை இழுப்பது, தகதகக்கும் தீ குழிக்குள் நிதானமாக நடந்து செல்வது போன்ற விந்தை செயல்களை செய்து காட்டியுள்ளார். 1982ஆம் ஆண்டில் மகாராட்டிர லோக் வித்யான் நடத்திய விஞ்ஞான் யாத்ரா (அறிவியலுக்கான நடை)யிலும் 1987ஆம் ஆண்டில் பாரத் ஜன் விஞ்ஞான் ஜாதாவிலும் பங்கு கொண்டு பகுத்தறிவு பரவலுக்கு வழிவகுத்தார்.

வீரத் துறவி சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று =அக்- 4 இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர். வீரத்துறவி என்று தலைப்பில் கொடுத்துவிட்டு, இவர் ஓர் சுதந்திரப்போராட்ட வீரர் என்கிறீர்களே என ஐயப்பாடு எழலாம். ஆம்! இவர் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே சுதந்திரத்துக்காகப் போராடினார், ஆகையால் இந்தத் தலைப்பு அவருக்கு மிகவும் பொருந்தும். இவர் பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன் என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.அவர் நினைவாக அவ்வூரின் பேருந்து நிலையம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தியாகிக்குச் செலுத்தும் அஞ்சலி அது. சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 1906இல் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் ‘வந்தேமாதரம்’ எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ பாரதியார் தூண்டிவிட்டார். சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திர பால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது. அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள் பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக ‘வந்தேமாதரம்’, ‘அல்லஹுஅக்பர்’, என்று முழக்கமிடுவாராம். தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய். இதனை அவர் “கொடியதோர் வியாதி கொல்லுது என்னை” என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார். இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். “ஞானபானு” எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் ‘பிரபஞ்சமித்திரன்’ எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார். மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அதுகுறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிர வாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார். இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் ஒதுக்கப்பட்டார். மனம் உடைந்த சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார்.

கொடி காத்த குமரன் என்றழைக்கப் படும் குமாரசாமி பிறந்த தினம் இன்று = அக்-4 1932இல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின. பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது. ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது. எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது. இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 10-1-1932இல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது. தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவருமான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது. ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை. எனவே புகழ்பெற்ற தியாகி பி.எஸ்.சுந்தரம் என்பார் அவரைத் தேடி அவர் வீடு சென்றார், பின்னர் அவரது பஞ்சாலைக்குச் சென்றார். அங்கு கவுண்டர் இருப்பதைப் பார்த்தார். ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார். இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்களே ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர். சாலையில் கூடியிருந்த மக்கள் என்ன நடக்குமோ இந்த வீரர்களை போலீஸ் அரக்கர்கள் எப்படியெல்லாம் தாக்குவார்களோ என்று அஞ்சியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து போலீஸ் நிலையத்தை நெருங்கியது. அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் நாற்பது ஐம்பது போலீஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர். ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான போலீசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர். அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் வண்ணம் அடிப் பட்ட நிலையிலும், மகாத்மா காந்திக்கு ஜே, பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது. அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பு மட்டும் பிடித்த பிடி தளரவேயில்லை. வாய் ஜே கோஷம் போட்டபடி இருந்தது. குமாரசாமி எனும் அந்த வீரத்தியாகி உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் மட்டும் கீழே விழவேயில்லை. நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் போலீசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர். அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு போலீஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார். குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை. போலீசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது. அடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர். இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் போலீஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது. சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். மரண அடிபட்ட குமாரசாமிக்கு மண்டை உடைந்து ஏதோவொன்று மூளைக்குள் சென்று விட்டது. நினைவு இல்லை. ரத்தம் நிற்கும் வழியாக இல்லை. சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்த குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தன் மூச்சை நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றது. அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூணியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது? போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது. ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதே தவிர, அவன் விளைத்த வீரப் போரின் விவரத்தை யாராலும் மறைக்க முடியாது. முடியவும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!