உலக இயற்கை தினம் இது உலக இயற்கை அமைப்பால் (World Nature Organization – WNO) 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. காலநிலை மாற்றம் போன்ற சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். எதிர்கால சந்ததியினருக்காக நமது கிரகத்தைப் பாதுகாக்க, மரம் நடுதல், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த நாள் ஊக்கப்படுத்துகிறது. உலக இயற்கை தினத்தின் முக்கிய அம்சங்கள் நோக்கம் (Purpose): நமது சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் சவால்கள், குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்து மக்களின் கவனத்தைக் கொண்டுவருதல், மற்றும் இயற்கையைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும் ஒரு கூட்டு நடவடிக்கைக்குத் தூண்டுதல். செயல்பாடுகள் (Activities): தனிநபர்களும் நிறுவனங்களும் இந்த நாளைக் கீழ்க்கண்டவாறு அனுசரிக்கின்றனர்: காடுகளை மீண்டும் உருவாக்க மரம் நடுதல். காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை (Sustainability) குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை ஏற்பாடு செய்தல். மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் போன்ற சூழலுக்கு உகந்த நடைமுறைகளை (Eco-friendly practices) ஊக்குவித்தல். அமைதியான பேரணிகளில் பங்கேற்றல் மற்றும் சமூக ஊடகங்களில் #WorldNatureDay போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி உலகளாவிய முயற்சிகளைப் பகிர்ந்து கொள்ளுதல். கருப்பொருள் (Themes): 2025-ஆம் ஆண்டின் கருப்பொருள் “Connecting People and Plants, Exploring Digital Innovation in Wildlife Conservation” (மக்களையும் தாவரங்களையும் இணைத்தல், வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் புதுமைகளை ஆராய்தல்) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருப்பொருள், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதோடு, டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வனவிலங்குகளையும் உயிரினங்களையும் பாதுகாக்கும் முறைகளை வலியுறுத்துகிறது.
எலியாஸ் ஓவே காலமான தினமின்று! எலியாஸ் ஓவே (Elias Howe, Jr ஜூலை 9, 1819, அக்டோபர் 3, 1867) ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தையல் இயந்திரத்தைக் கண்டறிந்ததன் மூலம் நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். கைகளால் தைத்துக்கொண்டிருந்த நிலை மாறி எந்திரத்தால் தைக்கலாம் என்ற நிலையைக் கொண்டு வந்தவர் தாமசு செயிண்ட் என்ற அறிஞர் ஆவார். ஆனால் அவர் அதற்குரிய காப்புரிமையைப் பெற்றும் அதன் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து ஈடுபடாமல் இறந்து போனார். 1790 லிருந்து பல பேர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 80 பேருக்கு மேல் ஐசாக் சிங்கர் உட்பட இந்த முயற்சிகளில் படிப்படியாக ஈடுபட்டு வந்திருக்கின்றனர். ஆனால் 1846 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் நாள் இதற்கான காப்புரிமையை முதன் முதலாகப் பெற்றவர் எலியாசு ஓவே என்பதால் தையல் எந்திர வரலாற்றில் முதல் கண்டுபிடிப்பாளராக இவருடைய பெயர் பதிவாயிற்று.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி லஞ்ச ஊழல் குற்றம் புரிந்ததற்காக கைது செய்யப்பட்ட நாளின்று 1977 ம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்த பிறகு ஆட்சிக் கட்டிலில் ஏறிய மொரார்ஜி தேசாய் அரசு இந்திரா காந்தியைப் பழி வாங்கத் துடித்து ஒரு பக்கம் ஷா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. மற்றோர் பக்கம் ஊழல் வழக்கில் இந்திரா காந்தியைக் கைது செய்ய முடிவு செய்தது அதனபடி 1977 ம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி 104 ஜீப்புகளை தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுப்புமாறு இரண்டு நிறுவனங்களை நிர்ப்பந்தப் படுத்தியதாகவும், ஒரு எண்ணெய் டிரில்லிங் ஒப்பந்தத்தை விலை குறைவாக சொல்லப் பட்டிருந்தாலும், அமெரிக்க நிறுவனத்துக்கு மாறாக ஃபிரெஞ்ச் நிறுவனத்துக்கு கொடுத்ததாகவும் கூறி இந்திரா காந்தியைக் கைது செய்தது. ஆம்..இந்திரா காந்தியை இதே அக்டோபர் 3 ம் தேதி மாலையில் சிபிஐ டெல்லியில் கைது செய்தது. ஆனால் அடுத்த நாளே நீதிமன்றம் இந்திரா காந்தியை விடுதலை செய்து விட்டது. கைது நடவடிக்கையை ஹரியானாவில் தான் செய்ய முடியும், டெல்லியில் செய்ய முடியாதென்ற காரணத்தால் (தொழில்நுட்ப காரணம்) இந்திரா காந்தி விடுதலையானார்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு நாள் “தலைநகர் சென்னை” என இன்று நாம் போற்றிக்கொண்டாடும் சென்னை, ஒருநாள் நம்மை விட்டு செல்லும் நிலை வந்தபோது, பெரும்போராட்டங்களை நடத்தி, அதை நமக்கு மீட்டுக் கொடுத்த பெருமைக்குரிய தலைவர், ம.பொ.சி என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். தேசியத்தைப் போற்றினார்., தமிழின் பெருமை காக்க பாடுபட்டார். விடுதலைக்குப் பின் இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது தமிழின் தகுதியை தமிழினத்தின் சிறப்பை எடுத்துரைப்பதில் நாட்டம் காட்டினார். அதற்காகவே தமிழரசுக் கழகம் என்ற அமைப்பை காங்கிரஸ் கட்சியில் இருந்த ம.பொ.சி 1946 ம் ஆண்டில் ஏற்படுத்தினார். அவருடைய அமைப்புக்கு, திரு.வி.க., காமராஜ், ஜீவானந்தம், பாரதிதாசன், ‘கல்கி’ போன்ற அறிஞர்கள் ஆதரவு காட்டினர். வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், கப்பலோட்டிய தமிழனைப் பற்றியும் முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி). ஆம்.. ம.பொ.சி, தான் எழுதிய ‘கப்பலோட்டிய தமிழன்’ என்னும் நூலை தன் நண்பர் அச்சகத்தில் எழுத்து எழுத்தாகக் கோர்த்து அச்சிட்டார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியும், வீரபாண்டிய கட்டபொம்மனும் ம.பொ.சி-யின் எழுத்து மூலமே தமிழ் சமூகத்துக்கு அறிமுகம் ஆனார்கள். 1962-ல் ம.பொ.சி எழுதிய ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவருடைய ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூலே இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய பங்கை எடுத்துரைத்த முதல் நூல்.சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்கிற வேட்கையில் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார். சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை, நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் ‘சிலம்புச் செல்வர்’ என்னும் பட்டத்தை ம.பொ.சிக்கு வழங்கினார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியின் கொடி, ‘கடல், கப்பல், மூன்று சிங்கங்கள், இரண்டு மீன்கள்’ கொண்டதாக இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச்சின்னம் மாற்றப்பட வேண்டிய அவசியம் வந்தது. இதற்கான குழுவில் இருந்த ம.பொ.சி தனது தமிழரசு கழகத்தின் கொடியில் இருந்த சேர, சோழ, பாண்டியரின் சின்னமான ‘வில், புலி, மீன்’ சின்னங்களை சென்னை மாநகராட்சி கொடியிலும் பொறிக்க பரிந்துரைத்தார். இன்றுவரை ம.பொ.சி பரிந்துரைத்த கொடியே சென்னை மாநகராட்சியின் கொடியாக திகழ்கிறது. ம.பொ.சியின் தீவிரமான திருத்தணி எல்லைப் போராட்டத்தின் விளைவாகத்தான், திருப்பதி போன்று திருத்தணியும் ஆந்திரர் களின் ஆளுமைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சென்னை மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் ம.பொ.சியே. 29.11.1955-ல் தனது தமிழரசு கழகக் செயற் குழுக் கூட்டத்தில் முதன்முதலில் ம.பொ.சி தான், “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறோம். தமிழ்நாடு என்று பெயரிடப் பட வேண்டும்” என்று தீர்மானத்தை நிறை வேற்றினார். பொங்கல் திருநாளை தமிழினத்தின் தேசியத் திருநாளாகக் கொண்டாட முதன் முதலில் ஏற்பாடு செய்தவர் ம.பொ.சி. 1946-ம் ஆண்டு ஜனவரி 14-ல் சென்னை கோகலே மண்டபத்தில் முதல் தமிழர் திருநாள் கொண்டாடும் பழக்கத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே. இப்படி தமிழ்நாட்டின் வரலாற்றில் முத்திரை பதித்த ம.பொ.சி தமிழக வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத மாமனிதராக விளங்குகிறார்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் கடம்பினி கங்குலி காலமான நாளின்று தெற்காசியாவின் முதல் பெண் மருத்துவரும், பிரிட்டிஷ் பேரரசின் முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவர் என்ற பெருமையைப் பெற்ற கடம்பினி கடந்த ஜூலை 18, 1861 ஆம் ஆண்டு பிஹார் மாநிலம் பகல்பூரில் பிறந்தார். இவருடைய தந்தை, தந்தை பள்ளித் தலைமை ஆசிரியர். பிரம்ம சமாஜ சீர்திருத்தவாதியாக இருந்தார். பெண் கல்வியை தீவிரமாக ஆதரித்தார். அதனாலேயே மகளையும் நன்கு படிக்க வைத்தார். தந்தை காட்டிய வழியில் கடம்பினி நன்றாக கல்வி கற்றார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், கொல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இத்தேர்வில் வென்ற முதல் பெண் இவர்தான். இங்கு இவரும், சந்திரமுகி பாசு என்பவரும் பட்டப்படிப்பை முடித்து இந்தியாவில் மட்டுமல்லாது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முதல் பெண் பட்டதாரிகள் என்ற பெருமையைப் பெற்றனர். இவர் கடந்த 1884 ஆன் ஆண்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இந்தியாவில் மருத்துவக் கல்லூரியில் இணைந்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி எட்டாக்கணியாக இருந்த நிலையில், பெண்ணாக இவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தேசிய அளவில் கவனம் பெற்றது. கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டு அவர் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கணவரும் சீர்திருத்தவாதி. அதனால் மனைவியின் கல்விக்கு உற்ற துணையாக இருந்தார். 1886-ல் ‘ஜிபிஎம்சி’ (பெங்கால் மருத்துவக் கல்லூரி பட்டதாரி) பட்டம் பெற்று, ஐரோப்பிய மருத்துவம் மேற்கொள்ள தகுதி பெற்றார். 1893-ல் லண்டன் சென்றார். அங்கு ராயல் காலேஜ் ஆஃப் ஃபிசிஷியன்ஸ், ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் கல்லூரிகளில் பயின்றார். மகப்பேறு, குழந்தை மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். தாயகம் திரும்பிய அவருக்கு நேபாள மகாராணிக்கு மருத்துவம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரது மருத்துவத்தில் மகாராணி குணமடைந்தார். இதையடுத்து அரச குடும்பத்தினரின் சிறப்பு மருத்துவரானார். மருத்துவராகவும் 8 குழந்தைகளின் தாயாகவும் சிறப்பாக வாழ்க்கையை நடத்திவந்தார். அதேவேளை, பெண்கள் முன்னேற்றத்துக்காக போராடினார். தென்னாப்பிரிக்க இந்தியர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது, அதன் மகளிர் பிரதிநிதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய முதல் பெண் என்ற பெருமை பெற்றார். மருத்துவத் தொழிலை தனது மூச்சாக மக்கள் சேவையை தனது இலக்காக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்த கடம்பினி கங்குலி தனது 62-வது வயதில் இதே அக் 3(1923)இல் இயற்கை எய்தினார்.
அக்கியோ மொரீட்டா நினைவு நாளின்று மின்னியல் துறையில் பல பொருட்களை உற்பத்தி செய்து உலகின் முன்னனி தொழில் நிறுவனமாக விளங்கும் சோனி நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். ஜப்பானியத் தொழில் முனைவர் ; மேடு இன் ஜப்பான் (Made in Japan) என்ற புகழ் பெற்ற தன்வரலாற்று நூலை எழுதியவர். தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 இல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார்.
எழுத்தாளர் மாரி. அறவாழி நினைவு நாள். . மா.சேதுரத்தினம் எனும் இயற்பெயருடைய இவர் புனைபெயராக மாரி. அறவாழி என்று வைத்துக் கொண்டார். சேலம் நகராட்சிக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்த பின்பு இந்திய அஞ்சல் துறைப் பணியில் சேர்ந்தார். அஞ்சல் துறையில் பணியாற்றிக் கொண்டே இவர் படைத்த சிறுகதைகள் நானூற்றுக்கும் மேற்பட்டவை. இவை பல்வேறு இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. இவர் நாற்பது குமுகாயப் புதினங்களையும், ஒரு வரலாற்றுப் புதினத்தையும் படைத்துள்ளார். சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நாடகத்தையும், கட்டுரைகளையும் படைத்துள்ளார். இவரது பல சிறுகதைகள் ஆங்கிலம், இந்தி,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழி இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய கோடுகளும் புள்ளிகளும்,ஆடக சுந்தரி ஆகிய இரண்டு புதினங்களும் தமிழ்நாட்டு அரசின் சிறந்த படைப்புகளுக்கான பரிசைப் பெற்றன. அறிஞர் அண்ணா ஆனந்த விகடனில் ‘கருமி’ என்ற பெயரில் வெளிவந்த இவரது சிறுகதையை செட்டிநாடு ‘தனவணிகர்’ நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டி புகழ்ந்து உரையாற்றியிருக்கிறார்.
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் காலமான நாள் இவர் வழக்கறிஞரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் 1883இல் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமியின் தந்தை ஏகாம்பர சாஸ்திரி ஒரு கோயில் பூசாரி ஆவார்.1899இல் பள்ளிப் படிப்பை முடித்த கிருஷ்ணசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞர் படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தவர். 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை அரசு வழக்கறிஞராக 18 ஆண்டுகள் திறம்பட பணியாற்றினார். ஜவஹர்லால் நேரு அழைப்பின் பேரில் இவர் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் பொறுப்பேற்றார், இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இவர் ஆற்றிய பணியினை டாக்டர் அம்பேத்கார் பாராட்டியுள்ளார். இவர் தனது ஓய்வுக் காலத்தை சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள அவருடைய வீட்டில் கழித்தார் 1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் மரணமுற்றார். இவரது மகன் மற்றும் பேரன் அனைவரும் வழக்குரைஞர்களாக பணியாற்றினார்கள்
