உலக கொரில்லா தினமின்று மனிதனுக்கு மிக நெருங்கிய உயிரினம் கொரில்லா. வாலில்லாத மனித குரங்கு இனம். இதன் டி.என்.ஏ., 95 முதல் 99 சதவீதம் மனிதனை ஒத்துள்ளது. பரிமாண வளர்ச்சி தத்துவத்தில், சிம்பன்சி போல் மனிதனுக்கு நெருங்கிய இனம். இது மனிதக் குரங்கு என்றும் அழைக்கப்படுகிறது மேற்கு ஆப்பிரிக்க வெப்ப மண்டலக் காடுகளில், 1847ல் இது கண்டறியப்பட்டது; கறுப்பு வண்ணத்தில் பெரிய உருவம் கொண்டது. இலை, தழை மற்றும் சிறு பூச்சிகளை உணவாகக் கொள்ளும். மிகவும் கூச்ச மனப்பன்மை கொண்டது. முகம் பளப்பளப்புடன் அடர் கருப்பு நிறத்தில் இருக்கும்; முகம், மார்பு, உள்ளங்கை, உள்ளங்கால் தவிர, உடம்பெல்லாம் பஞ்சு போன்று மயிர் அடர்த்தியாக இருக்கும். வயதான ஆண் கொரில்லாவின் தலையில், சேவல் கொண்டை போல் முகடு காணப்படும். பின்முதுகில் வெள்ளை நிறத்தில் முடி நரைத்து இருக்கும். கொரில்லாவின் ஆயுள், 50 ஆண்டுகள். குடும்பத்தில், ஒரு ஆண் கொரில்லாவுடன், சில பெண் கொரில்லாக்கள் காணப்படும். குட்டியை ஈன்று, மூன்று மாதம் வரை பாதுகாத்து பராமரிக்கும் பெண் கொரில்லா. கொரில்லாக்கள் மனிதர்களைப் போலச் சிரிக்கவும் செய்யும். சத்தம் போட்டு அழும். ஆனால், அழும்போது கண்ணீர் வராது. கொரில்லாக்கள் மதியம், இரவில் சில மணி நேரம் தூங்கும் பண்புடையவை. தூங்குவதற்கு வசதியாகச் சிறிய மரங்களில் படுக்கைகளைத் தயார் செய்துகொள்ளும். படுக்கைகள் மெத்தை போன்று இருக்கும்.இளம் வயது கொரில்லாக்களுக்கு உணவு சேகரிக்கும் முறை, குட்டிகளைப் பராமரித்தல், தங்கும் வீடு கட்டும் முறை போன்றவற்றை மூத்த கொரில்லாக்கள் கற்றுக் கொடுக்கும்.
இந்திய அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா காலமான தினமின்று ராஜஸ்தானின் போக்ரான் பாலைவனத்தில் நாட்டின் முதல் அணு குண்டு சோதனையை முன்னின்று நடத்திய விஞ்ஞானி இந்திய அணு சக்திக் கமிஷனின் தலைவராகவும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராகவும் ராஜ்யசபாஎம்பியாகவும் இருந்த ராமண்ணா சிறந்த கல்வியாளர், பியானே இசைப்பதிலும் ஆர்வம் கொண்டவர். வி.பி.சிங் பிரதமரானபோது இவரை பாதுகாப்புத்துறை இணையமைச்சராக்கினார். நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வென்றார். பெங்களூரில் உள்ள உயர் கல்விக்கான தேசிய மையத்தின் கெளரவ இயக்குனராக இருந்து வந்தார் ராஜாராமண்ணா. பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். அணு ஆராய்ச்சி தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தவர்.
நாட்டு நலப்பணித் திட்ட தினம் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த வி . கே . ஆர் . வி . ராவ் (V.K.R.V.Rao) அவர்களால் 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று நாட்டு நலப்பணித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது . இதனை நாட்டு நலப்பணித் திட்ட தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது மத்திய மாநில அரசுகள் நிதிஉதவியுடன் செயல்படுத்தப்படும் நாட்டு நலப் பணித் திட்டம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் வாழ்வியல் திட்டம் என்றால் மிகையாகாது.ஆசிரியர், பாடப் புத்தகங்கள், கரும்பலகை, தேர்வு, வகுப்பறை இப்படித்தான் மாணவர்களின் கல்விப் பயணம் பயணிக்கிறது. அதையும் தாண்டி களத்தில் நின்று சமூகத்தை உற்று நோக்கும் யதார்த்த வாழ்வியலை இத்திட்டம் முன்வைக்கிறது.’தனக்காக இல்லாமல் பிறருக்காக முடிந்ததை செய்ய வேண்டும்’ என்ற கருத்தாக்கத்தை இத்திட்டம் முன்மொழிகிறது. நான் அல்ல நீ, எனக்காக அல்ல உனக்காக எனும் பொதுநலன் சார்ந்த தன்னலமற்ற சேவையே இத்திட்டத்தின் மையப்புள்ளி. அடிப்படை வாழ்வியலுக்காக அன்றாடம் போராடும் எத்தனையோ முகம் தெரியாத மனிதர்களை உள்ளடக்கிய இச்சமூகத்தை இனம் காட்டி, அவர்கள் இன்னல்களை தீர்க்க வழியமைத்துக்கொடுக்கும் அன்பும் பாலமாக இத்திட்டம் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. ரோடு அமைத்தல், குளங்களை துார்வாருதல், கல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுத்தல், மரம் நடுதல், ஊனமுற்றோருக்கு உதவுதல், சுற்றுப்புறத்தை துாய்மையாக்குதல், கிராமங்களை தத்தெடுத்தல், மருத்துவ உதவி செய்து கொடுத்தல், முதியோருக்கு உதவிடுதல், கோயில்களை சுத்தப்படுத்துதல், கலை நிகழ்ச்சி நடத்துதல் போன்ற பொதுநலன் சார்ந்த செயல்பாடுகளை இத்திட்டம் உள்ளடக்கியது.பொதுநலன் சார்ந்த பண்புகளை இளம் வயதில் மாணவர்களின் மனதில் பதியம் போட்டு நீர் ஊற்றி வளர்த்து அவன் கல்வி நிலையத்தை விட்டு வெளியே செல்லும்போது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு ஆளுமையாக மாற்றம் செய்யும் உன்னத பணியை இத்திட்டம் செய்கிறது.
நாத்திகம் ராமசாமி நினைவு நாளின்று! கடலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரின் இறுதி ஊர்வலம் ஆதிக்கசாதியினரின் தெரு வழியாக கொண்டு செல்லக்கூடாது என்று சாதி வெறியர்கள் தடுத்த போது அந்த அநீதிக்கு எதிராக களத்தில் நின்று போராடி வென்று காட்டினார். இதை பெரியார் மனதாராப் பாராட்டினார். இராமாயணத்தின் பாத்திரங்களை அம்பலப்படுத்தி எழுதியதற்காக அன்றைய காங்கிரசு அரசால் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இராமசாமிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தது. இதை பெரியாரே நீதிமன்றத்தில் கட்டினார். 1958 செப்டம்பர் 18ஆம் தேதியன்று பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்காக நாத்திகம் பத்திரிகையை துவங்கினார். இவ்விதழ் அவர் சாகும் வரை கடந்த 51 ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது. ஆரம்பத்தில் தினசரியாக இருந்து, பின்னர் பத்திரிகை வார இதழாக தொடர்ந்து வெளிவந்திருக்கிறது. எனவே நாத்திகம் இராமசாமி என்பது தன் செயல்பாட்டால் அவர் ஈட்டிக்கொண்ட காரணப்பெயர். 51 வருடங்களாக நாத்திகம் பத்திரிகையை அவர் பல நட்டங்களுக்கிடையில் விடாது நடத்தி வந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, அனைத்து மதங்களையும் விடாது அம்பலப்படுத்துதல், சினிமா, டி.வி, பண்பாட்டு சீரழிவுகளை சாடுதல் போன்றவற்றை உள்ளடக்கிய அவரது இந்த எழுத்துப்பணி இறக்கும் வரை வரை இடைவெளியில்லாமல் நிறைவேறியது.
தமிழ் நாடகங்களின் தந்தை என்று அழைக்கப்படும் பம்மல் சம்பந்த முதலியார் நினைவு நாள் இவர்தான் தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர் முதன்முதலில் புஷ்பவல்லி என்ற சமூக நாடகத்தை 1883ல் எழுதி நடித்தார். 1891ல் சென்னையில் சுகுணவிலாச சபா என்ற அமெச்சூர் நாடகசபையைத் தோற்றுவித்து நாடகங்களை எழுதி தாமே நடித்து பிற அறிஞர்களையும் நடிக்க வைத்த சான்றோர் இவர். நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார். அதிலும் அதுவரை நாடக நடிகர்கள் என்பவர்கள் கேலிக்குரியவர்கள் ,நாகரீகமற்றவர்கள் என்னும் எண்ணத்தை மாற்றும் வகையில் தனது நாடகங்களில் பெரும் தனவான்களையும்,முக்கிய பிரமூகர்களையும் நடிக்க வைத்து ,பெரும் மனிதர்களும் திரண்டு பார்க்கும் வகையில் உருவாக்கினார். அந்த சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் போன்ற சமூகத்தில் பெருமனிதர்களாக உயர்பதவிகள் வகித்தவர்களும் பம்மல் முதலியாரின் நாடகங்களில் நடித்தார்கள். ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடங்கங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார். Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அமலாதித்யன், நீ விரும்பியபடியே, மகபதி, சிம்மளநாதன், வணிபுர வாணிகன் என்ற பெயர்களில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். பம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழக அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
நாட்டியப் பேரொளி பத்மினி நினைவுநாளின்று கடந்த பல ஆண்டுகளாகவே சினிமாவுக்குள் நுழையும் நடிகர் நடிகைகளுக்கு ஆடத் தெரிந்திருக்கவேண்டும் என்கிற நிலை இல்லை. அவ்வளவு ஏன்… மொழி தெரிந்து பேசுகிறார்களா என்பது கூட முக்கியமில்லை. ஆனால், முன்னொருக் காலத்தில், ஒருவர் நடிக்க வருகிறாரென்றால், அவருக்கு ஆடத் தெரிந்திருக்க வேண்டும். அட்சரம் பிசகாமல் வசனம் பேசத் தெரிந்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட, நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி, ஆடி, பேசி, அற்புதமான நடிப்பையும் வழங்கியவர்களில், தனியிடம் பிடித்தவர்… பத்மினி. நாட்டியப் பேரொளி பத்மினி. ஆம்.. ‛சாதுர்யம் பேசாதேடி… என் சலங்கைக்கு பதில் சொல்லடி…’ எந்த சலங்கைக்கும் பதில் சொன்ன பத்மினி. அதனால் தான் அவர் நாட்டிய பேரொளி. நடனம்… நடனம்… நடனம்… என வாழ்நாள் முழுவதையும் நடனத்திற்கு அர்ப்பணித்தவர். தமிழ் சினிமாவின் கிளாசிக் பக்கங்களில் பரதமும், பாவமும் நிறைந்த நடிகையாய் பத்மினிக்கு என்றும் இடம் உண்டு. திறமைக்கேற்ற அழகு, அழகுக்கேற்ற அறிவு என அனைத்திலும் தேர்ந்தவர். இன்று காலமான தினம். . மறைந்தாலும், படைப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பத்மினி போன்ற படைப்பாளிகள் என்றும் நினைவு கூறத்தக்கவர்கள். அந்த வரிசையில் இன்று பத்மினியை ரீவைண்ட் செய்கிறோம். இன்றைக்கு வடக்கில் இருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். ஆனால், அன்றைக்கு தென்னகத்தில், கேரளாவில் இருந்தும் ஆந்திரத்தில் இருந்தும் பல நடிகைகள், வந்து தமிழகத்தில் கொடி நாட்டினார்கள். அந்த வகையிலும், பத்மினி தனித்துவத்துடன் பட்டொளி வீசிப் பறக்கவிட்டார். கேரளாவின் சின்ன கிராமம்தான், பத்மினிக்கு பூர்வீகம். பத்மினியை பின்னாளில் தனித்துச் சொன்னார்கள். நாட்டியப் பேரொளி என்றார்கள். ஆனால் அவரின் பால்யத்தில், திருவாங்கூர் சகோதரிகள் என்றுதான் சொல்லுவார்கள். லலிதா, பத்மினி, ராகினி என மூன்று சகோதரிகளும் நடனத்திலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கினார்கள். இந்த மூவரிலும் உயர்ந்து நின்று முதலிடம் பிடித்தார் பத்மினி. இன்றுள்ள நடிகைகளுக்கு பிறக்கும் போது ஒரு பெயர். நாளடைவில் பிறக்கும் போது வைத்த ஒரிஜினல் பெயர் மறந்து, சினிமாவிற்காக வைத்த பெயரை தான் பலர் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், பத்மினி என்பது தான் அவரது பெற்றோர் அவருக்கு வைத்த ஒரிஜினல் பெயர். அதையே கடைசி வரை அவரும் பயன்படுத்தி வந்தார் இந்திப் படத்தில் நடிக்கச் சென்று, அங்கே இங்கே நடிக்கத் தொடங்கி, தமிழில் வரிசையாக படங்களில் நடிக்கத் தொடங்கினார் பத்மினி. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என அந்தக்காலத்தின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த படங்களெல்லாம் சூப்பர் ஹிட்டு. எம்ஜிஆருடன் நடித்தாலும் சரி, சிவாஜியுடன் நடித்தாலும் சரி, எவருடன் நடித்தாலும் சரி… அந்தப் படத்தில் பத்மினி நடிக்கிறார் என்றால், அவரின் நடனத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பாட்டாவது வைத்துவிடுவார்கள். அதேபோல், பல காட்சிகள் க்ளோஸப் ஷாட்டுகளாக வைத்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், அவரின் நடிப்புக்குத் தீனி போடும்விதமாக, ரெண்டு காட்சியாவது இடம்பெற்றுவிடும். சிவாஜியுடன் நடித்த ‘தெய்வப்பிறவி’ மாதிரியான படங்களில் இருவருக்கும் நடிப்பில் போட்டியே இருக்கும். அதேபோல் எம்ஜிஆருடன் ‘ராணி சம்யுக்தா’, ‘மன்னாதி மன்னன்’ முதலான படங்களிலெல்லாம் இருவரில் யார் அழகு என்று ரசிகர்கள் பட்டிமன்றமே நடத்துவார்கள். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘சித்தி’ படம்தான் பத்மினியின் பிரமாண்டமான நடிப்புக்கு ஆகச்சிறந்த உதாரணம். எம்.ஆர்.ராதாவுக்கு மனைவியாக, அந்தக் குடும்பத்தை சரிசெய்யும் அன்னையாக, சிற்றன்னையாக தன் நடிப்பால் அசத்தியிருப்பார் பத்மினி. ‘சபாஷ் சரியான போட்டி’ எனும் வாசகம் மிகப்பிரபலம். ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில், பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் நடனமாடுவார்கள். அந்தப் போட்டி நடனத்தின் போது சொல்லப்படும் வசனம்தான்… ‘சபாஷ் சரியான போட்டி’. எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு, கண்ணை மூடிக்கொண்டு, கற்பனையால் எழுதிய நாவல்தான் ‘தில்லானா மோகனாம்பாள்’. அந்நாவல் சினிமாவான பிறகு இந்த பத்மினி தில்லானா மோகனாம்பாள் மோகனாங்கியாகவே அறியப்பட்டார்.ஆம்.. தமிழ் சினிமாவின் ‛ஆல் டைம் பேவரிட்’ மூவி என்கிற பட்டியல் இருந்தால், அதில் முதல் இடம் தில்லானா மோகனாம்பாள் தான். இன்று நமக்கு பல டிவி சேனல்கள் இருக்கிறது. அன்று பொதிகை என்கிற சேனல் இருக்கும் போது, தீபாவளிக்கு முதல் நாள், விடிய விடிய நேயர்களை விழிக்க வைக்க, ப்ளே செய்யப்படும் ஒரே மூவி, ‛தில்லானா மோகனாம்பாள்’. சலிப்பு தட்டாத திரைக்கதையும், கதாபாத்திரமும் கொண்ட முழு நீள காதல், நகைச்சுவை திரைப்படம். படத்தின் பெயரிலேயே தெரியும்… பெண்ணை சுற்றிய கதை என்பது. மோகனாம்பாள் என்கிற நாட்டிய பெண்ணை மையமாக கொண்ட கதை. சிவாஜியும்-பத்மினியும் சிக்கல் சண்முகசுந்தரம்-மோகனாங்கியாக வாழ்ந்திருப்பார்கள். நாளடைவில் வந்த கரகாட்டகாரன், சங்கமம் போன்ற படங்கள் எல்லாம் தில்லான மோகனாம்பாளின் 2.0, 3.0 என்றால், அது மிகையாகாது. பத்மினி என்கிற பெயரையே பலர் மறந்து, மோகனாங்கியாக தான் பத்மினி பின்னர் அறியப்பட்டார். பத்மினியை மறந்தால் கூட, மோகனாங்கியை மறக்காது தமிழ் சினிமா ‘இரு மலர்கள்’ படத்தில், ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்ற பாடலில், சிவாஜியும் பத்மினியும் அப்படியொரு சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார்கள். சில இடங்களில், பத்மினியின் எக்ஸ்பிரஷன்கள், நம் மனங்களைக் கொள்ளையடித்துவிடும். சாவித்திரி மாமி. ‘வியட்நாம் வீடு’ குடும்பத்தலைவி. நாயகி. மூக்குத்தி டாலடிக்க, மடிசார் புடவையும் பிராமண பாஷையும் கொஞ்சம் புத்திசாலித்தனமும் நிறைய்ய வெகுளித்தனமுமாக வெளுத்து வாங்கியிருப்பார் பத்மினி. ‘சாவித்ரி… சாவித்ரீ…’ எனறு பிரஸ்டீஜ் பத்மநாபனாக சிவாஜி அழைப்பதும் அதற்கு ‘என்னண்ணா.. சொல்லுங்கோண்ணா’ என்று குழைந்துக் கொஞ்சுவதும்… ஆஹா… இருவரையும் மனசுக்குள் நிற்க வைத்து, திருஷ்டி சுற்றிப் போட்டார்கள் ரசிகர்கள். இயக்குநர் பாசில், ‘பூவே பூச்சூடவா’ படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார். அந்தப்படத்துக்கு பக்கபலமாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் இளையராஜா. கேரக்டர்களின் உணர்வுகளை, இசை வழியே ரசிகர்களுக்குக் கடத்தியிருப்பார். இன்னொருவர் பப்பிம்மா (பத்மினி). அந்தப் பாட்டி கதாபாத்திரத்தை, பூங்காவனத்தம்மாள் எனும் கேரக்டரை, அவ்வளவு அழகாக, லைவாக வாழ்ந்திருப்பார்’ என்கிறார் இயக்குநர் பாசில். பண்பட்ட நடிப்பும் ஆபாசமில்லாத நடனமும்தான் பத்மினியின் அடையாளம். கால்கள் ஆடும். கண்கள் பேசும். கைகள் அபிநயம் பிடித்து அதுவொரு பாஷைபேசும். பப்பிம்மா என்றும் பத்மினி என்றும் நாட்டியப்பேரொளி என்றும் எல்லோரும் கொண்டாடிய அந்த மகோன்னதமான நடிகை, இன்றைக்கு இல்லை. கடந்த 2006ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24ம் தேதி இறந்தார். ஆனாலும் இன்னும் நூறாயிரம் ஆண்டுகளானாலும் பத்மினியின் புகழை, ரசிகர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இன்னும் பல நூறு ஆண்டுகள் கழித்து, யார் வீட்டிலாவது, எந்தச் சிறுமியாவது, ‘நான் டான்ஸ் கத்துக்கணும்பா’ என்று சொன்னால், ‘அப்படியா, பத்மினி மாதிரி வரப்போறியா’ என்று அப்போதும் கேட்கத்தான் போகிறார்கள். ஏனெனில்… பத்மினி வரம் பெற்ற நடிகை. சாகா வரம் பெற்ற கலையரசி. இன்று செப்டம்பர் 24ம் தேதி, அந்த நாட்டியப்பேரொளி பத்மினி நினைவு நாள்.
