மனங் கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி – 5

மனங் கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி – 5

அலைபேசி தொலைந்து போன வருத்தத்தில் இரவு தூங்கினாலும் அதிகாலை 3.00 மணிக்கு மீண்டும் விழிப்பு வந்தது.

எழுந்து படுக்கையில் அமர்ந்து ஒரு சிறிய பிரார்த்தனையை செய்து விட்டு கடவுளுக்கு சித்தமானால் அது மீண்டும் கிடைக்கட்டும் என்று நினைத்து கொண்டு மீண்டும் படுத்து விட்டேன்.

அந்த அலைபேசியை யாராவது கண்டு எடுத்தால் கூட பயோமெட்ரிக்ஸ் லாக்கில் இருப்பதால் அதை கண்டெடுத்தவர் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்தால் கூட அதிலிருந்து யாருடைய எண்ணை யும் எடுத்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்க கூட முடியாது.

அப்போது ஒரு யோசனை தோன்றியது.
அந்த எண்ணிற்கு தாய்லாந்து ரோமிங் பேக்கை ரீசார்ஜ் செய்து இன்டர்நேஷனல் ரோமிங் ஆக்டிவேட் செய்தால் அந்த எண்ணுக்கு என்னால் தொலைபேசியில் அழைக்க முடியும்.

ஒருவேளை அது நல்லவர்கள் கைகளில் கிடைத்திருந்தால் அந்த அழைப்பு வரும் பொழுது அதை அவர்கள் எடுத்து தகவல் சொல்ல வாய்ப்பு இருக்குமே என்றும் யோசனை வந்தது.

பொதுவாக எனக்கு ஏதாவது சில விஷயங்களில் முடிவு எடுக்க வேண்டிய ஒரு நிலை வரும் பொழுது இது போன்ற அதிகாலை இரண்டரை மணி மூன்று மணிக்கு விழிப்பு வரும். அப்போதுதான் சரியான யோசனைகள் கிடைக்கும்.

முயற்சித்து பார்க்கலாம் என்று காலை விடிந்தவுடன் 3 நாட்களுக்கான தாய்லாந்து ரோமிங் பேக்கை ரூபாய் 495 க்கு online ல்
ரீசார்ஜ் செய்தேன்.

அதன்பின்பு ஒரு பத்து நிமிடம் கழித்து அந்த எண்ணுக்கு என்னுடைய அலைபேசியில் இருந்து அழைப்பு செய்தேன்.

உடனே ரிங் போனது. ஆனால் யாரும் அதை அட்டென்ட் செய்யவில்லை.
மீண்டும் மீண்டும் டயல் செய்து பார்த்தேன். ஆனால் யாரும் அந்த ஃபோனில் இருந்து பதில் கொடுக்கவில்லை.

அப்போதுதான் யோசித்தேன் ஒருவேளை இது தீயவர்கள் கையில் கிடைத்திருந்தால் அவர்கள் உடனடியாக அந்த சிம் கார்டை எடுத்து தூக்கி எறிந்து இருப்பார்கள்.
ஆனால் எப்போது ரிங் போகிறதோ அது நல்லவர்கள் கைகளில் தான் கிடைத்திருக்கும் என யூகித்தேன்.
எனவே தொலைந்து போன அந்த போன் மீண்டும் கிடைக்கும் என்பதில் ஒரு சிறு துளி நம்பிக்கை ஏற்பட்டது.

இன்று காலையில் டைகர் பார்க் என்னும் இடத்திற்கும் அதன் பிறகு பட்டாவின் ஃப்ளோட்டிங் மார்க்கெட் என்னும் இடத்திற்குமாக இரண்டு இடங்களுக்கு அழைத்துச் செல்ல இருப்பதால் காலை 9 மணிக்கு வாகனம் வந்து விடும் என்று முந்தைய நாளே அறிவிப்பு செய்தி telegram ஆப்பில் அளிக்கப்பட்டு இருந்தது.

எனவே விரைவாக எழுந்து குளித்து புறப்பட்டு காலை 8:15 மணிக்கு ரெஸ்டாரண்டுக்கு வந்து விட்டோம்.

நேற்றைப் போலவே இன்றும் உணவு வகைகள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் நேற்று போல் இன்று நிம்மதியாக சாப்பிட முடியவில்லை.
காரணம் இந்த தொலைபேசி தொலைந்து போனதுதான்.

விரைவாக காலை உணவை முடித்துக் கொண்டு லாபியில் வந்த அமர்ந்தோம்.
சிறிது நேரத்தில் வாகனமும் வந்துவிட்டது.

இன்றும் ஒரு புதிய வாகனம் புதிய ஓட்டுநர்
எங்களை சரி பார்த்துக் கொண்டு வாகனத்தில் ஏற்றி நேராக அரை மணி நேர பயண தூரத்தில் உள்ள டைகர் பார்க் எனும் இடத்திலே எங்களை இறக்கி விட்டு அங்கே டிக்கெட் கவுண்டருக்கு சென்று டிக்கெட் வாங்கி எங்களிடத்தில் கொடுத்துவிட்டு ஓட்டுனர் தான் வெளியில் காத்திருப்பதாக கூறினார்.

அங்கே எங்களுக்கு இரண்டு மணி நேர கால அவகாசம் அளிக்கப்பட்டது.

டைகர் பார்க்குக்குள் சென்றால் நிறைய புலிகளை கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

அதைப் பார்க்கும்போது சிறுவயதில் சென்னை மூர் மார்க்கெட்டுக்கு பின்புறம் இருந்த ஒரு உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட விலங்குகளை பார்த்த நினைவு வந்தது.

அதன் பிறகு தான் வண்டலூர் உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டு மிருக காட்சி சாலை வண்டலூர் சென்றது.

குட்டிப்புலிகளுக்கு பால் கொடுப்பதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்பட்டது.
அந்த குட்டி புலியுடன் நாம் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் எங்களில் யாருக்கும் அப்படிப்பட்ட ஆர்வம் இல்லை. எங்களது பேக்கேஜில் அது இடம்பெறவில்லை.
எனவே நாங்கள் அதற்கான டிக்கெட்டை தனியாக பணம் கொடுத்து வாங்கவில்லை.

அதன் பிறகு புலிகளை பார்த்துக்கொண்டே அப்படியே நடந்து சென்றோம்.

புலிகள் வைக்கப்பட்டிருந்த கூண்டு பகுதிகளில் பல நிறங்களில் பல்வேறு விதமான அரிய வகை பூச்செடிகளையும் குரோட்டன்ஸ் செடிகளையும் வைத்து பராமரித்து இருந்தது பார்ப்பதற்கு மனதிற்கு இனிமையாக இருந்தது.

அடுத்த வரிசையில் ஓரிடத்தில் புலியை தொட்டு பார்ப்பதற்கு கட்டணம் என்று அங்கே பலர் அந்த கட்டணத்தை செலுத்தி புலியை தொட்டுப் பார்த்தார்கள்.
பார்ப்பதோடு மட்டுமல்ல புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் எங்களது அய்ட்டனரியில் இடம்பெறவில்லை.
எங்களில் யாருக்கும் அதிலும் ஆர்வமில்லை.
எனவே நாங்கள் அதற்காக தனியாக டிக்கெட் எதுவும் வாங்கவில்லை.

புலிக்கு அருகில் ஒருவர் கையில் சிறிய கோலை வைத்துக்கொண்டு நிற்கிறார்.
புலி ஒரு மேடையில் படுத்து இருக்கிறது. அங்கே செல்பவர்கள் அந்த புலியை தொடுகிறார்கள்.
ஒன்று இரண்டு பேர் வால் பகுதிக்கு சற்று மேலாக கை வைக்கும் போது புலி சட்டென திரும்பி பார்க்கிறது.
உடனே அந்த கோலுடன் நிற்பவர் புலியை சற்று மிரட்டி அப்படியே அமர வைக்கிறார்.
அதோடு மட்டுமல்ல சுற்றுலா பயணிகளை வாலை மட்டும் தொடுமாறு அறிவுரை வழங்குகிறார்.

தாய்லாந்து சுற்றுப்பயணம் முடிந்து நாங்கள் சென்னை வந்து ஒரு பத்து நாட்களுக்குள் ஒரு செய்தியை வாசித்தேன்.

இவ்வாறு புலியை தொடும்பொழுது புலி திடீரென அந்தத் தொட்ட நபரை தாக்கி அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதை பத்திரிக்கை செய்தியாக வாசித்தேன்.

அந்த செய்தியை எங்களது குடும்ப குரூப்பில் பகிர்வு செய்தேன்.
உடனே என் தங்கை என்னை தொலைபேசியில் அழைத்து நல்ல வேலை நாம் அந்த புலியை தொடும் அந்த வேலையை செய்யவில்லை என்று சந்தோஷப்பட்டார்.

ஆனால் உண்மையில் ஏன் எங்களுக்கு அதில் ஆர்வம் இல்லை என்றால் அந்த புலி இருக்கிற இடம் நாற்றமடிக்கிறது.
நாற்றமடிக்கிற அந்த புலியை நாம் தொட்டு பார்க்க வேண்டுமா.
அப்படி ஒரு போட்டோ தேவையா என்று நாங்கள் நினைத்துதான் அதில் ஆர்வம் இல்லாமல் விட்டு விட்டோம்.

அதன் பிறகு டைகர் சபாரி என்னும் ஒரு நிகழ்வு அங்கே இருந்தது.

முதலில் நாங்கள் பார்த்தது கூண்டுக்குள் புலியும் நாம் வெளியிலும் இருந்தோம்.

இப்போது நாம் கூண்டுக்குள்ளும் புலி சுதந்திரமாகவும் திரியும் வகையில் அந்த டைகர் சபாரி இருந்தது.

எனக்கு அதில் சற்று ஆர்வம் ஏற்பட்டது. எனவே நான் 300 தாய் பாட் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு அவர்கள் அழைத்துச் செல்லும் வாகனத்தில் ஏறினேன்.

அந்த வாகனமானது இரும்பு கம்பிகளால் சில பகுதியும் மற்றெல்லா பகுதிகளும் கண்ணாடியால் மூடப்பட்டு பாதுகாப்பாக இருந்தது.

புலிகள் தங்குமிடத்திலே இடையில் சிறிய சாலை வளைந்த வளைந்து போகுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனம் மெதுவாக நகர்ந்து சென்று அந்த புலிகள் படுத்திருக்கும் இடம் மற்றும் நடமாடும் இடம் எல்லாம் என்னை அழைத்துச் சென்றது.
நான் மட்டுமே அந்த வாகனத்தில் இருந்தேன்.

அப்போது சில இடங்களில் புலிகளுக்கு அருகில் அந்த வாகன செல்லும்போது என்னையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

சரியாக 20 நிமிடத்தில் அந்த வாகனம் அந்த இடம் முழுவதையும் சுற்றி வந்து வெளியில் கேட்டில் வந்து என்னை விட்டு விட்டது.

அதன் பிறகு நாங்கள் மூவரும் டைகர் பார்க்கை விட்டு வெளியில் வந்தோம். ஓட்டுநர் எங்களுக்காக தயாராக காத்துக் கொண்டிருந்தார்.

மொத்தத்தில் அங்கு இரண்டு மணி நேரம் செலவிட்டோம்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!