விஜய்யின் பிரசார பயணம் திருச்சியில் இன்று தொடக்கம்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து விஜய் தொடங்குகிறார்.

சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக நவீன ரக பஸ்சை விஜய் பயன்படுத்த உள்ளார். இந்த பஸ்சில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இரும்பு வேலிகள் பஸ்சின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளது.

மக்கள் சந்திப்புக்காக விமானம் மூலம் விஜய் திருச்சி செல்கிறார். அவரது பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது. இதற்கிடையே, மக்கள் சந்திப்பையொட்டி இலச்சினை (லோகோ) ஒன்றை த.வெ.க. வெளியிட்டு உள்ளது. இந்த லோகோவில், உங்க விஜய் நான் வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது.

விஜய்யின் பிரசார பயணத்துக்கு 25 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி அரியலூர் உட்கோட்ட எல்லைக்குள் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும். பரப்புரைக்கு வரும் கட்சியினர் அனைவரும் காலை 11.25 மணிக்குள் பரப்புரை நடக்கும் இடமான அரியலூர் பழைய பஸ் நிலைய பகுதிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். தங்களது தலைவர் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கீழப்பழுவூர் புறவழிச்சாலையில் இருந்து கீழப்பழுவூர் திடீர் குப்பம், வாரணவாசி, தவுத்தாய்குளம், அரியலூர் கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக அரியலூர் பழைய பஸ் நிலையத்திற்கு வரும்போது சாலை வலம் (ரோடு ஷோ) நடத்தக் கூடாது. மேலும் எந்தப்பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக்கூடாது. பரப்புரை வழித்தடத்தினில் தங்கள் தலைவரின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் பரப்புரையை சிரமமின்றி பார்க்கும் வகையில் தடுப்பு அரண்களை தாங்களே அமைத்து தர வேண்டும். இதுபோன்ற நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுந்துவதற்கு காவல்துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பது உள்பட 25 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் திருச்சி. ‘செண்டிமென்ட்’ விஷயங்களில் நம்பிக்கையுடைய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வின் 2-வது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தி திருப்புமுனையை உண்டாக்கினார். பின்னர் தனது ஆட்சியின் முக்கிய திட்டமான சத்துணவு திட்டத்தையும் திருச்சியிலேயே தொடங்கி வைத்தார். திருச்சியை 2-வது தலைநகராக மாற்றப்போவதாகவும் அறிவித்தார்.

இவ்வளவு ஏன்? அறிஞர் அண்ணா முதன்முதலில் தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என முடிவெடுத்த இடமும் திருச்சி தான். திருச்சியில் நடத்துகிற மாநாடு உள்பட எந்த நிகழ்வாக இருந்தாலும் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அரசியல் கட்சிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை விஜய் திருச்சியில் இருந்து தொடங்குகிறார்.

இந்த பிரசாரம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள், த.வெ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். விஜய் பிரசாரம் செய்யப்போகும் மரக்கடை பகுதி பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பொதுக்கூட்டங்களை நடத்திய இடம். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தான் பிரசாரம் செய்தார். அந்தவகையில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு திருச்சி திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!