செங்கிஸ்கான் மாண்ட நாளின்று! ‘செங்கிஸ் கான்’… 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுக்க அச்சத்தை விதைத்த பெயர். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா கண்டம் வரை படையெடுத்துச் சென்று, பல தேசங்களைச் சூறையாடியவர். ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத் தலைவனின் மகனாகப் பிறந்து, மற்ற இனங்களையும் இணைத்து ஒரு வலிமையான படையை உருவாக்கி, வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகச் சந்தித்து வளர்ந்தவர், ஒரு கட்டத்தில் நிகரற்ற பேரரசனாக உருவெடுத்தார். பிரமாண்ட மாட்டு வண்டியில் – நகரும் கூடாரத்தில் – அமர்ந்து செங்கிஸ் கான் நடுநாயகமாக வர… வெடிமருந்துகளை வீசி எதிரிக் கோட்டைகளை நிலைகுலையச் செய்து வீழ்த்தும் குதிரைப்படையினர் அவரைச் சூழ்ந்திருப்பார்கள். ‘செங்கிஸ் கான் படையெடுத்து வருகிறார்’ என்ற ஒற்றை வரித் தகவலே பல நாடுகளை வீழ்த்தியது; பல மன்னர்களை மணிமுடி துறக்கச் செய்தது; பல படைகளை ஓடச் செய்தது. அவர் உருவாக்கிய மங்கோலியப் பேரரசு அளவுக்கு, இந்தப் பூமியின் பெருநிலப் பரப்பை வேறு எந்த இனமும் ஆண்டது இல்லை. அவரது போர்முறைகள் போலவே, மரணமும் மர்மங்களின் கலவை. அவர் எப்படி இறந்தார் என்பதிலிருந்தே மர்மம் தொடங்குகிறது. 1227-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி செங்கிஸ் கான் இறந்தார். அப்போது அவருக்கு வயது 65 என்று சிலர் சொல்கிறார்கள்; முதுமையின் தள்ளாட்டத்தில், 72 வயதில் இறந்தார் என்றும் சொல்கிறார்கள். எந்த வயதில் இறந்தார் என்பது போலவே, அவர் எப்படி இறந்தார் என்பதும் மர்மம். சீனாவின் மேற்கு ஜியா பேரரசோடு போர் புரிந்து வெற்றி பெற்றபோது, போரில் ஏற்பட்ட காயத்தால், யின்சுவான் என்ற இடத்தில் தன் குதிரையிலிருந்து விழுந்து இறந்தார் என்கிறார்கள். ‘மங்கோலியர்களின் ரகசிய வரலாறு’ எனும் பழைமையான நூல், ‘வேட்டைக்குச் சென்றபோது ஏற்பட்ட காயத்தால் செங்கிஸ் கான் இறந்தார்’ என்கிறது. வரலாற்றுப் புகழ்பெற்ற வெனிஸ் யாத்ரீகரான மார்க்கோ போலோ, ‘கடைசிப் போரின்போது செங்கிஸ் கான் உடலில் துளைத்த அம்பு ஒன்றினால் ஏற்பட்ட காயம் ஆறவே இல்லை. அதில் நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் இறந்தார்’ என எழுதியிருக்கிறார். ‘கடைசிப் போரில் மேற்கு ஜியா நாட்டின் இளவரசியை செங்கிஸ் கான் அபகரித்து வந்தார். ஓர் அந்தரங்கமான தருணத்தில் அவள் குறுவாளால் செங்கிஸ் கானைக் குத்திக்கொன்றாள்’ என 17-ம் நூற்றாண்டு வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்கிறது. மின்னல் தாக்கி இறந்ததாகவும் சொல்கிறார்கள். உயிரோடு இருந்தபோது பல அரசர்களின் சிம்ம சொப்பனமாக இருந்த செங்கிஸ் கான், இறந்த பிறகு தன் கல்லறை யார் கண்ணிலும்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இதற்காகத் தன் மகன்களிடமும் நெருக்கமான தளபதிகளிடமும் சத்தியம் வாங்கியிருந்தார். ‘‘என் கல்லறையில் ஆறு பூனைகளை உயிரோடு புதையுங்கள். அவற்றின் குரல்கள், மரணத்துக்குப் பிறகான பயணத்தில் என்னை வழிநடத்தட்டும்’’ என்று கேட்டிருந்தார். பூனைகளை மட்டுமல்ல… செங்கிஸ் கான் வென்ற பொக்கிஷங்கள் பலவற்றையும் கல்லறையில் புதைக்க முடிவெடுத்தார்கள். அதோடு, அந்தக் கல்லறையை படு ரகசியமாக வைத்திருக்கவும் முடிவெடுத்தார்கள். சத்தியத்தை நிறைவேற்ற ஒரு படுபயங்கர பயணம் தொடங்கியது. செங்கிஸ் கானின் சடலத்தை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு ஆயிரம் வீரர்களும் ஏராளமான அடிமைகளும் கிளம்பினார்கள். ‘பேரரசரின் சடலத்தைப் புதைப்பதற்காக எடுத்துச் செல்கிறார்கள்’ என்று ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு, தங்கள் விதி என்ன ஆகும் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘இந்த வழியாகத்தான் செங்கிஸ் கானின் சடலத்தை எடுத்துப் போனார்கள்’ என்று சொல்வதற்குக்கூட ஆள் இருக்கக் கூடாது என முடிவெடுத்து இருந்ததால், அவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டனர். தற்செயலாக அந்தப் பாதையில் எதிர்ப்பட்டவர்களின் கதியும் இதுதான். மங்கோலியாவில் மக்கள் நெருக்கம் மிகக் குறைவு. ஓர் ஊரைத் தாண்டினால் அடுத்த கிராமம் மிக நீண்ட பயணத்துக்குப் பிறகே வரும். அதனால், சில நூறு பேரை மட்டுமே கொன்றுவிட்டு, செங்கிஸ் கானின் சடலப் பயணம் தனது இலக்கை அடைந்தது. ‘கல்லறைக்கான பள்ளத்தை அடிமைகள் தோண்டி முடித்தனர். பேரரசரின் அடக்கம் முடிந்ததும், அத்தனை அடிமைகளும் கொல்லப்பட்டார்கள். பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட அந்தக் கல்லறையை ரகசியமாக்கிவிட்டு, அதன் பின்னர் ஆயிரம் வீரர்களும் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர்’ என மங்கோலிய வரலாறு கூறுகிறது. புதிதாக மண்ணைத் தோண்டிய தடயம் தெரியக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் ஆயிரம் குதிரைகளை ஓடவிட்டு, எல்லா இடங்களையும் ஒரே மாதிரி சமப்படுத்திக் குழப்பியதாக ஒரு தகவல். இன்னொரு தகவல் இன்னும் பயங்கர மானது. ‘ஓடிக்கொண்டிருந்த ஒரு நதியைச் சில மணி நேரங்கள் வேறு திசையில் திருப்பிவிட்டு, அந்த நதியின் பழைய பாதையில் கல்லறையை அமைத்து முடித்து, நதியை பழையபடி தன் பாதையில் ஓடவிட்டார்கள்’ என்பதே அந்தத் தகவல். 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் மங்கோலியாவின் ஜியாங்கு மன்னர்களுக்கு அமைக்கப்பட்ட கல்லறைகள் விநோதமானவை. தரைக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் ஒரு குட்டி அரண்மனைபோல இதை அமைப்பார்கள். நடுநாயகமாக மன்னரின் உடல் வைக்கப்படும். அவர் அணிந்திருந்த நகைகள், பயன்படுத்திய பொருள்கள், பயணித்த தேர் எனச் சகலமும் அந்தக் கல்லறையில் வைக்கப்படும். அதன் பிறகு அதை மூடிவிட்டு, அந்தக் கல்லறை அமைந்த இடத்தில் தரைக்கு மேலே சதுரக் கற்களை வரிசையாக நட்டு வைப்பார்கள். இது அடையாளத்துக்காக. செங்கிஸ் கான் கல்லறையில் இந்த நடைமுறைகளை எல்லாம் செய்துவிட்டு, தரைக்கு வெளியில் சதுரக் கற்களை மட்டும் வைக்கவில்லை. அதனால்தான், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜியாங்கு மன்னர்களின் கல்லறைகள் எல்லாம் கிடைத்துள்ளன; செங்கிஸ் கானின் கல்லறை கிடைக்கவில்லை என்பது மட்டும் நிஜம்.
அமெரிக்க உளவியல் நிபுணர், சமூக நடத்தைகள் ஆய்வாளர் பர்ஹஸ் ஃபிரெடரிக் ஸ்கின்னர் காலமான தினமின்று சரியான நடத்தை முறை உத்தியை (Behavioral Technique) பயன்படுத்தி, மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையை மேம்படுத்த முடியும் என்று நம்பினார். விளைவுகளைப் பொருத்தே உயிரினங்களின் நடத்தை முறைகள், எதிர்வினைகள் அமைகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். உயிரினங்களின் நடத்தையை பகுப்பாய்வு செய்து அறிய உதவும் ஆபரன்ட் கண்டிஷனிங் (Operant Conditioning) என்ற ஆய்வக சாதனத்தை மேம்படுத்தினார்.
- இதற்காக ஆபரன்ட் கண்டிஷனிங் கூண்டு ஒன்றை உருவாக்கினார். இது ‘ஸ்கின்னர் பாக்ஸ்’ எனப்படுகிறது. எலிகள், புறாக்கள் ஆகியவை வாழும் சூழலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை இதன் உதவியுடன் ஆராய்ந்தார்.
- சூழலுக்கு ஏற்ப அவை தங்களது நடத்தை முறைகளை எவ்வாறு மாற்றிக்கொள்கின்றன என்பதையும் கண்டறிந்தார். இதில் கண்டறிந்தவற்றைத் தொகுத்து ‘தி பிஹேவியர் ஆர்கானிசம்ஸ்’ என்ற கட்டுரையை வெளியிட்டார். நடத்தை உளவியல் குறித்து 21 புத்தகங்கள், 180 கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- இண்டியானா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைத் தலைவராக 1945-ல் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் கழித்து ஹார்வர்டு திரும்பினார். இறுதிவரை அங்கு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
- தனது கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட சமுதாயத்தை விவரிக்கும் ‘வால்டன் டூ’ என்ற நாவலை எழுதினார். ‘குழந்தைகளுக்குப் பொருத்தமான பரிசுகள், தண்டனைகள் வழங்கி அவர்களது பழக்க வழக்கங்களை திருத்திக்கொள்ள உதவுங்கள். அதன்மூலம், அவர்களை நல்ல குடிமக்களாக மாற்ற முடியும்’ என்று இந்த நாவலில் கூறியுள்ளார். குழந்தைகள் கற்றுக்கொள்ளும் முறை குறித்து ஆராய்ந்தார். ‘தி டெக்னாலஜி ஆஃப் டீச்சிங்’ என்ற நூலை எழுதினார்.
- சமுதாய, மனித நடத்தை முறைகள் தொடர்பான இவரது பல கோட்பாடுகள் சர்ச்சைகளைக் கிளப்பின. அதே நேரம், நடத்தை முறை உளவியல் களத்தில் மேலும் பல ஆராய்ச்சிகள் நடைபெற இவரது ஆய்வுகள் அடித்தளமாக அமைந்தன.
- இவரது பல கோட்பாடுகள் அதிகம் பயன்படுத்த முடியா மல் போனாலும் இவரது நேர்மறை வலுவூட்டும் உத்தி (Positive Reinforcement Technique) இவரை அடையாளப் படுத்தும் முக்கிய கோட்பாடாகப் புகழப்படுகிறது.
ஹீலியம் வாயு கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று, 1824ஆம் ஆண்டு இதே நாளில் தான், பாரிஸில் பிறந்த பயர் ஜூல்ஸ் சீசர் ஜேன்ஸ்சன் என்பவர் ஆங்கில ஆய்வாளரான ஜோசப் நார்மன் என்பவருடன் இணைந்து ஹீலியம் வாயுவைக் கண்டறிந்தார். ஹீலியம் காற்றை விட எடை குறைவான வாயு ஆகும். எனவே பலூன்களில் அடைத்து மேலே பறக்க விடுவதற்கு பயன்படுகிறது இதன் உருகுநிலையும் கொதிநிலையும் எல்லாத் தனிமங்களை விடவும் குறைவானதாகும். இது தாழ்ந்த வெப்பநிலை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்துக்குப் பெரிதும் உதவியாய் இருக்கின்றது.
ரா.கி.ரங்கராஜன் (குமுதம்) மறைந்த நாளிது. கல்கி அவர்கள் ராகி ர. பற்றி எழுதியது – ”இதுவரை 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். ரங்கராஜன், சூர்யா, ஹம்ஸா, கிருஷ்ணகுமார், மாலதி, முள்றி, அவிட்டம் போன்ற புனைப்பெயர்களில் எழுதினாலும் ஒவ்வொரு புனைப்பெயருக்கும் எழுத்திலோ, நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி”. முதல் பக்கத்தில் சுஜாதா அவர்கள் இவரைப் பற்றி சொன்னது… ”ஓசைப் படாமல் சாதனை படைத்த தமிழர்களில் ஒருவரான எனது இனிய நண்பர். ரா.கி.ரங்கராஜன் ஒரு கர்ம யோகி” அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக, குமுதம் வார இதழின் நிர்வாக குழுவில் பணியாற்றியவர் கதை எழுதும் கலையை இளைஞர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் அவர், “எப்படி கதை எழுதுவது?’ என்ற அமைப்பின் மூலம் எழுத்துக் கலையின் சூட்சுமங்களை வெளிச்சமிட்டுக் காட்டியவர். இவரது பல கதைகள், திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. “சுமைதாங்கி, இது சத்தியம், மகாநதி (ஆலோசகர்) வெளிவந்துள்ளன. இவரது இலக்கிய படைப்புகளில், “படகு வீடு, பட்டாம்பூச்சி’ ஆகியவை, இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு, இவர் புகழை பாடிக் கொண்டிருக்கும்.. இவர் தன் கண்களை தானமாக வழங்க விருப்பப்பட்டார். அவர் விருப்பப்படியே, மறைவுக்கு பின், கண்கள் தானமாக வழங்கப்பட்டன. எக்ஸ்ட்ரா பிட்: வினோத்’துன்ற பேர்ல சினிமா நியூஸ் எழுதினதும் அவர் தான்.
ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் இதே நாளில்தான் காலமானார்1997ல் தொடங்கி 2006ம் ஆண்டு வரை ஐநாவின் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். 1997 முதல் 2006ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார் கோபி அன்னான். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஐநாவில் உயரிய பொறுப்பினை வகிப்பது அதுவே முதல் முறையாகும். கோபி அன்னான் ஆற்றிய பணிகள் கோபி தன்னுடைய கானா நாட்டினைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகளின் சபையில் ஏழாவது பொதுச் செயலாளராக பதவி வகித்தார். தன்னுடைய பதவி காலத்தில் மிகப் பெரிய பொறுப்புகளை சிறப்பாக செய்ததன் விளைவாக அவருக்கு 2001ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் கூட சிரியாவில் நடைபெற்ற போர் குறித்து ஆய்வு செய்து பல முக்கியமான முடிவுகளை முன்னெடுக்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐநாவின் பங்களிப்பு போதிய அளவில் இல்லாத காரணத்தால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
அஞ்சல்மூலம் பொருட்களை விற்பனை செய்யும் (Mail Order) வணிகத்தைத் தொடங்கிவைத்த நிறுவனங்களுள் மிகவும் முக்கியமான ஒன்றான மாண்ட்கோமெரி வார்ட் (Montgomery Ward) நிறுவனம், தனது முதல் அஞ்சல் பட்டியலை (Mail Order Catalogue) வெளியிட்டது. இந்த நாள், அமெரிக்காவில் “தேசிய மெயில் ஆர்டர் கேட்லாக் நாள்” என்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தக் கேட்டலாக், சில்லறை வணிகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. மெயில் ஆர்டர் வணிகத்தின் தோற்றம் அஞ்சல்மூலம் வணிகம் செய்யும் முறை அமெரிக்காவிற்கு முன்பே இங்கிலாந்தில் உருவானது. இங்கிலாந்தில் 1840 இல் “யுனிஃபார்ம் பென்னி போஸ்ட் சட்டம்” இயற்றப்பட்ட பிறகு, நாடு முழுவதும் அஞ்சல் சேவைகள் விரிவடைந்தன. அத்துடன், ரயில் பாதைகளும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்றன. இந்தப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி, ப்ரைஸ் ப்ரைஸ்-ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர், 1861 இல் உலகின் முதல் நவீன மெயில் ஆர்டர் வணிகத்தைத் தொடங்கினார். கிராமப்புறங்களில் வசித்த மக்கள், நகரங்களுக்கு வந்து பொருட்களை வாங்குவதில் இருந்த சிரமத்தைக் கருத்தில்கொண்டு, அவர் இந்த வணிகத்தை ஆரம்பித்தார். வாடிக்கையாளர்கள் தேவையான பொருட்களின் விவரத்தையும், பணத்தையும் அஞ்சல்மூலம் அனுப்பினால், அவர் பொருட்களை ரயில்மூலம் அனுப்பி வைத்தார். இந்த எளிய முறை, விரைவிலேயே நாடு முழுவதும் பிரபலமானது. விக்டோரியா மகாராணி மற்றும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்ற பிரபலங்களும் அவரது வாடிக்கையாளர்களானார்கள். ரஷ்ய ராணுவம்கூட அவரிடம் இருந்து போர்வைகளை வாங்கியது. மாண்ட்கோமெரி வார்ட் நிறுவனத்தின் புதுமைகள் ப்ரைஸ் ப்ரைஸ்-ஜோன்ஸ் குறிப்பிட்ட சில பொருட்களை மட்டுமே விற்ற நிலையில், மாண்ட்கோமெரி வார்ட் நிறுவனம் அனைத்து வகையான பொருட்களையும் விற்கத் தொடங்கியது. ஒரு சில பக்கங்கள் கொண்ட அதன் முதல் கேட்டலாக், இரண்டு பத்தாண்டுகளில் 540 பக்கங்களாக வளர்ந்தது. இந்த நிறுவனம், இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. இது, அஞ்சல்மூலம் வாங்குவதை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றியது. “கிட் ஹவுஸ்” என்ற புதுமையான விற்பனை மாண்ட்கோமெரி வார்ட் நிறுவனத்தின் மிகவும் சுவாரஸ்யமான புதுமைகளில் ஒன்று “கிட் ஹவுஸ்” (Kit House) விற்பனை. இது ஒரு வீட்டுக்கான அத்தனை பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பாகும். தற்காலத்தில் உள்ள மாடுலர் ஹவுஸ் போல இல்லாமல், இது ஒரு நிரந்தர வீட்டிற்கான அனைத்து பகுதிகளையும் சரியான வடிவம் மற்றும் அளவில் தயாரித்து மொத்தமாக வழங்கியது. அக்காலத்தில் மரங்களை அறுக்கவோ, இழைக்கவோ இயந்திரங்கள் இல்லாததால், இந்த வீடுகளை விரைவாகக் கட்ட முடிந்தது. மேலும், இத்தகைய வீடுகளைப் பெறுவது, தனித்தனியாகப் பொருட்கள் வாங்குவதைவிட 30% மலிவானதாக இருந்தது. நவீன உலகில் அஞ்சல் வணிகத்தின் நிலை அஞ்சல் வணிகம் வளர்ந்து, ஏராளமான நிறுவனங்கள் இந்தத் துறையில் நுழைந்தன. ஆனால், இணையத்தின் வருகையால் பல அஞ்சல் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இருப்பினும், அமெரிக்காவில் 1881 இல் தொடங்கப்பட்ட ஹமாச்சர் ஷ்லெம்மர் (Hammacher Schlemmer) நிறுவனம் இன்றும் இத்துறையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமே, உலகில் இன்றும் செயல்பட்டு வரும் மிகப் பழமையான மெயில் ஆர்டர் நிறுவனமாகும். இந்த அஞ்சல் வணிக வரலாறு, சில்லறை வணிகம் மற்றும் தொழில்நுட்பம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அஞ்சல் சேவை மற்றும் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தித் தொடங்கிய இந்த வணிகம், தற்போது இணையம் மற்றும் மின்னஞ்சல் வழியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்து விட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. அவருடைய மரணம் மர்மமாகவே இன்னும்கூட தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1967-ல், நேதாஜி மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார் சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்து கொ ண்ட நேதாஜி அவர்கள், இந்திய மக்களின் நெஞ்சில் இன்றளவும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.
விஜயலட்சுமி பண்டிட் பிறந்த நாள் இன்று. இந்தியாவில் சில முதன்மைகளுக்கு சொந்தக்காரர் விஜயலட்சுமி பண்டிட் ! ஆகஸ்ட் 18ம் தேதி 1900ல் பிறந்தார் விஜயலட்சுமி பண்டிட். இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி. மோதிலால் நேரு-ஸ்வரூப ராணி தம்பதியினரின் மகளாவார். ஜவஹர்லால் நேருவின் தங்கை. நேருவை விட 11 வயது இளையவர். இந்தியாவில் அமைச்சர் பொறுப்பு வகித்த முதல் பெண்மணி இவர்தான். ஐ.நா.பொதுச்சபையின் முதல் பெண் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதன் மூலம் அனேக இந்திய பெண்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்ந்தவர். நம் நாடு விடுதலைப் பெற வேண்டும் என்று போராடிய பெண்களில் மிக முக்கியமானவர் விஜயலட்சுமி பண்டிட். ஒத்துழையாமை இயக்கத்தில் போராடியவர் என்ற பெருமைக்குரியவர். 1953-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவராக பணியாற்றினார். சுதந்திரம் பெற்ற பிறகு, அவர் பல நாடுகளுக்கு இந்தியாவின் தூதுவராக இருந்தார். இந்தியாவின் சார்பாக ஐக்கிய நாடுகளின் சபையைச் சார்ந்த மனித உரிமை ஆணையத்திலும் பணியாற்றியுள்ளார்.
ஆர். எஸ். சுபலட்சுமி அவர்களின் பிறந்த நாள் இன்று. சகோதரி சுபலட்சுமி (R. S. Subbalakshmi, ஆகஸ்ட்,18, 1886 – டிசம்பர் 20, 1969) என்றழைக்கப்பட்ட ஆர். எஸ். சுபலட்சுமி பெண்ணியத்திற்காகப் பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளரும் தென்னகத்தின் முதல் பட்டதாரி பெண்மணியுமாவார். எல்லாப் பாடங்களிலும் முதலாவதாத் தேறினார்.சாரதா மகளிர் சங்கம்,சாரதா வித்தியாலயம்,லேடி விலிங்டன் பள்ளி மற்றும் லேடி விலிங்டன் ஆசிரியப்பயிற்சிக்கல்லூரி ஆகிய பல நிறுவனங்களின் வழியே பெண்கல்விக்குக் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றிய இவர் , ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றிருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை ‘ A CHILD WIDOW’S STORY’ என்ற தலைப்பில் மோனிகா ஃபெல்டன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்; ‘சேவைக்கு ஒரு சகோதரி’என்ற பெயருடன் எழுத்தாளர் அநுத்தமா அதைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஐஸ் ஹவுஸ் விடுதி நடத்தி வந்தபோது அருகிலிருந்த மீனவர் குப்பங்களுக்குச் சென்று அந்தக்குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பத்தையும் அவர் வழக்கமாகக்கொண்டிருந்தார்.
டாக்டர் டி. எஸ். சௌந்தரம் – பிறந்த நாள். இந்தியாவின் தலைசிறந்த மருத்துவரும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் .டி .வி.. சுந்தரம் தென்னிந்தியாவின் பிரபலமான டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் ஆவார் டி. எஸ். சௌந்தரம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு காந்தியடிகளின் ஹரிஜன் இயக்கத்தில் இணைந்தார். காந்தியடிகள் இவரை கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தென்னிந்தியப் பிரதிநியாக நியமித்தார். இவர் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் தொடங்கிய காந்தி கிராம அறக்கட்டளை 1976 ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்ற காந்திகிராம பல்கலைக்கழகமாக மாறியது. 1952 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார். 1962 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த அமைச்சரவையில் துணைக் கல்வி அமைச்சரானார் கட்டாய இலவச ஆரம்பக்கல்வியை அறிமுகம் செய்தார். டி. எஸ். சௌந்தரம், 3 ஜனவரி 1980 முதல் 21 அக்டோபர் 1984 முடிய காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்தார் 1962 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்றார். இந்திய அரசு 2005 இல் டி. எஸ் சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டது.
ஆகஸ்ட் 18, 1951 இந்தியாவின் முதலாவது ஐ.ஐ.டி இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் (இ.தொ.க. கரக்பூர்,Indian Institute of Technology, Kharagpur, IIT KGP) துவங்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் கல்வி அமைச்சர் மவுலானா அபு கலாம் ஆசாத் தொடங்கி வைத்தார் இந்திய அரசினால் தேசிய இன்றியமையா கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கழகம் பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட, பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் முதலாவதாக நிறுவப்பட்டது. இ.தொ.க கரக்பூர் அறிவியல் மற்றும் நுட்பத்தில் தலைசிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
