சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

நமது நாட்டின் 79-வது சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் சில புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு விருதுகளை வழங்குவார்.

முன்னதாக கோட்டை முன்பு நடக்கும் பிரமாண்ட அணிவகுப்பையும் அவர் பார்வையிடுகிறார். இதற்காக கோட்டையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும், பாதுகாப்புக்காக 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரதின விழா நடைபெறும் சென்னை கோட்டை பகுதி 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இன்று இரவில் இருந்து கொண்டுவரப்படுகிறது.
