கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி மார்த்தாண்டம் நகரில்நடைபெற்ற போராட்டத்தில் பங்கு கொண்ட 9 பேர் திருவாங்கூர் சமஸ்தான காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்த நாள் அதனைத்தொடர்ந்து மொழிவாரி கமிஷன் பரிந்துரையின்படி 1956 ஆம் ஆண்டு கன்னியாகுமரி, பீர்மேடு தூவாலை, அகத்தீஸ்வரம், விளவங்கோடு செங்கோட்டை முதலான பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டன.
எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. காரணம் அவர் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலில் துணிச்சலுடன் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பதற்றத்தில் தள்ளியவர். அவர் வேறு யாருமல்ல குதிராம் போஸ்தான். அவரைப் போல் லட்சக்கணக்கான வீரர்களின் தியாகத்தால்தான் இன்று இந்தியாவில் சுதந்திரக் காற்று வீசுகிறது. ஜவஹர்லால் நேரு பிறந்த அதே 1889-ம் ஆண்டில் தான் போஸூம் பிறந்தார். டிசம்பர் 3 அன்று வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள ஹபிப்பூர் என்னும் சிறு கிராமத்தில் பிறந்தார். போஸை விட நேரு 20 நாள் மூத்தவர். இருவரின் மனதிலும் இந்தியா முக்கிய இடம் பிடித்திருந்தது. உயிர் இருக்கும்வரை தேசத்திற்காக உழைத்தார் நேரு. உயிரைத் தேசத்திற்காகத் தந்தார் குதிராம் போஸ். போஸின் அப்பா திரிலோகநாத் பாசு. அம்மா லக்சுமிபிரியா தேவி. பதினோரு வயதிலேயே விடுதலை வேட்கை ஏற்பட்டது அவருக்கு. மக்கள் கூடுமிடங்களில் துண்டுப் பிரசுரம் கொடுப்பதே குதிராம் போஸின் வேலை. அந்தத் துண்டுப் பிரசுரங்களில் ஆங்கில அரசின் அத்துமீறல்களும் அட்டூழியங்களும் விவரிக்கப்பட்டு இருக்கும். தேசம் விடுதலையடைய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கும். ஒருமுறை கண்காட்சி ஒன்று நடந்துகொண்டிருந்தபோது வழக்கம் போல் போஸ் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தார். ஆங்கில அரசின் காவலர் ஒருவர் அவரைப் பிடிக்க யத்தனித்தார். ஆனால் விநாடிக்குள் அவரிடமிருந்து தப்பித்துவிட்டார் போஸ். அதுமட்டுமல்ல, ‘தைரியமிருந்தால் வாரண்ட் இல்லாமல் என்னைக் கைதுசெய்து பாருங்கள்’ எனத் துணிச்சலுடன் சவால்விட்டுச் சென்றார். 1902-03-ல் அரவிந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோரின் உரைகளைப் போஸ் கேட்டார். அந்த உரைகள் அடிமைப்பட்டுக் கிடந்த தேசத்தின் ஆன்மாவை மீட்கத் துடித்த போஸுக்கு வேகமேற்றியது. அவருக்குப் பதினைந்து வயதானபோது 1905-ல் வந்து சேர்ந்தது வங்கப் பிரிவினை. ஆங்கிலேயரின் பிரித்தாளும் மூளையில் உதித்த பிசாசுத் திட்டம் அது. வங்காளத்தை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் இஸ்லாமியரையும் இந்துக்களையும் பிளவுபடுத்தச் செயல்படுத்திய திட்டம். இதற்கெதிராக வெகுண்டெழுந்த இளைஞர் கூட்டத்துடன் இணைந்துகொண்டார் போஸ். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடிய ஜுகுந்தர் இயக்கத்தில் சேர்ந்து போராட்டங்களில் பங்குகொண்டார். 1908-ல் குதிராம் போஸும் பிரபுல்ல சாகியும் முஸாபர்பூருக்கு மாற்றுப் பெயர்களில் அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கு வங்காள மாகாணத்தின் மாஜிட்டிரேட்டான கிங்க்ஸ் போர்டை அரசியல் காரணத்திற்காகக் கொலைசெய்ய வேண்டியிருந்தது. 1908 ஏப்ரல் 30 அன்று தங்கள் திட்டத்தைச் செயல்படுத்த நாள் குறித்தனர். அவர் வழக்கமாகச் சென்றுவரும் ஐரோப்பா கிளப்பிலிருந்து வெளியே வரும்போது குண்டுவீசத் திட்டமிட்டிருந்தனர். திட்டப்படி கிங்ஸ் போர்டின் வண்டி மீது குண்டை வீசிவிட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்ட எண்ணத்தில் தப்பிவிட்டனர். ஆனால் நடந்ததோ வேறு. அன்று வண்டியில் கிங்ஸ் போர்டு வந்திருக்கவில்லை. வழக்கறிஞர் பிரிங்கிள் கென்னடி என்பவரின் மனைவியும் மகளும் மட்டுமே அதில் வந்திருந்தனர். போலீஸ் குதிராம் போஸையும் பிரபுல்ல சாகியையும் தேடியது. பிரபுல்ல சாகி போலீஸாரிடம் மாட்டியபோது தற்கொலை செய்துகொண்டார். மே ஒன்றாம் தேதி குதிராம் போஸ் கைதுசெய்யப்பட்டார். கொலைக் குற்றத்திற்காகவும் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த தற்காகவும், குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதுக்காகவும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். நாட்டுக்காக வாழ்வதைப் போன்றே நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்வதிலும் குதிராம் போஸுக்கு மகிழ்ச்சியே இருந்தது. 1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று தூக்குமேடை ஏறினார். தூக்குக் கயிறு அவரது கழுத்தை இறுக்கினாலும் புகழ்மாலை அவர் மார்பில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது.
ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறதுக்கு முன்னாடி, நாம் எப்பவும் ‘மைக் டெஸ்டிங், ஒன் டூ த்ரீ’ன்னு சொல்லிட்டுத்தான் பேசுவோம். இது ரொம்பச் சாதாரணமான ஒரு விஷயம். ஆனா, இதே ஒரு விஷயத்தை ஒரு நாட்டு அதிபர் செஞ்சப்போ, உலகம் முழுவதும் ஒரு நிமிஷம் உறைந்துபோச்சுன்னா நம்புவீங்களா? 1984, ஆகஸ்ட் 11… அமெரிக்காவில் அப்போ நடக்கவிருந்த எலெக்ஷனை முன்னிட்டு, அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் ஒரு ரேடியோ நிகழ்ச்சிக்குத் தயார் செஞ்சிட்டு இருந்தார். ரேடியோ நிகழ்ச்சியில் பேசுறதுக்கு முன்னாடி, எல்லாரும் பேசுற மாதிரி ‘ஹலோ, மைக் டெஸ்டிங்…’னு சொல்லி தனது குரலைச் சோதிச்சுப் பார்க்கணும்னு நினைச்சார். அவர் ரொம்ப கேஷூவலா, ஒரு காமெடி பண்ற மாதிரி பேசினார். என்ன பேசினார் தெரியுமா? “எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்” அப்படின்னு சொன்னார். இது ஒரு ஜோக்கா, தன்னோட குரலைச் சோதிக்கிறதுக்காகச் சும்மா சொன்ன வார்த்தைகள். ஆனா, அது ஒரு பெரிய வரலாற்றுச் சம்பவமா மாறும்னு அவர் எதிர்பார்க்கல. ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவர் சும்மா பேசின இந்த பேச்சு வானொலியில் ஒலிபரப்பாகிவிட்டது. இதைக் கேட்ட அமெரிக்கர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உலகப்போர் ஆரம்பித்துவிட்டதான்னு பயந்துபோனாங்க. செய்தித் தொடர்பாளர்கள், ராணுவ அதிகாரிகள் என எல்லோரும் பரபரப்பாயிட்டாங்க. அதிபர் என்ன பேசினாரோ, அது அப்படியே அமெரிக்கா முழுவதும் பரவி, ஒரு பதட்டத்தை உருவாக்குச்சு. ஒரு நிமிஷம், உலகமே உறைந்துபோன மாதிரி இருந்துச்சு. அதற்குப் பிறகுதான், அதிபர் ரீகன் ஒரு குரல் பரிசோதனைக்குத்தான் இப்படி இல்லாத ஒன்றை பேசினார் என்பது வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. அதிபர் ஒரு ஜோக் சொன்னார், அது தற்செயலாக ஒலிபரப்பாகிவிட்டது என்று அறிந்ததும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஒரு அதிபரோட ஒரு சாதாரண ஜோக், உலகத்தையே உலுக்கிப் பார்த்த ஒரு நிகழ்வு. இந்தச் சம்பவம் அமெரிக்க வரலாற்றில் ஒரு மறக்க முடியாத பக்கமா பதிஞ்சிருக்குது.
புகழ்பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி. சூ. நைப்பால் நினைவு நாள். வித்யாதர் சூராஜ்பிரசாத் நைப்பால், டிரினிடாடில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆவார். இவரது பாட்டனார்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தோர் ஆவர். 2001 ஆம் ஆண்டில் இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மனத்தில் உறுதியும் தெளிவும் கொண்ட நைப்பால் நூல்கள் பல எழுதினார். புதினங்களும் பயணநூல்களும் எழுதி உள்ளார். இஸ்லாமிய நாடுகளான ஈரான் இந்தோனேசியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தம் அனுபவங்களையும் கருத்துகளையும் ஒரு நூலில் எழுதினார். பல்வேறு நாடுகளின் அடிமைகள் பற்றியும் கொரில்லாப் போராட்டம் பற்றியும் அரசியல்வாதிகளின் ஊழல்கள் ஏழைகளின் ஒடுக்கப்பட்டோரின் நிலைகள் பற்றியும் தம் நூல்களில் எழுதியுள்ளார். மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் பண்பாட்டுச் சிக்கல்கள் பற்றியும் எழுதினார். இந்தியாவிலும் பயணம் செய்து மூன்று நூல்கள் எழுதினார். உலகின் 500 செல்வாக்குப் படைத்தோர் பட்டியலில் வீ எஸ் நைப்பாலும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கபட்டார்.
ஆப்பிள் நிறுவன கோ ஃபவுண்டர்! ஸ்டீவ் வோஸ்னியாக் பர்த் டே டுடே ஸ்டீவ் வோஸ்னியாக், ஃபுல் நேம் ஸ்டீபன் கேரி வோஸ்னியாக். 1950ல் இதே ஆகஸ்ட் 11ம் தேதி அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் பிறந்தார். . அமெரிக்க எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர். ஸ்டீவ் ஜாப்சுடன் சேர்ந்து, ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர். முதல் வணிக கம்ப்யூட்டரை வடிவமைச்சவர். வோஸ்னியாக் அல்லது வோஸ் என்று அழைக்கப்படுகிறார். பிற்காலத்தை முன்னமே கணிக்கக்கூடிய திறமை பெற்றவர். ஆனால் மாணவராக இருந்தபோது, குறும்புக்காராக இருந்தார். கணிதம் படித்தார். ஆனால் அவருக்கு ஆர்வமெல்லாம் எலெக்ட்ரானிக்ஸில் இருந்தது. கொலோராடோ பல்கலைக்கழகத்தில் படித்தார். பின்னர் கலிஃபோர்னியா திரும்பி உள்ளூர் கம்யூனிட்டி கல்லூரியில் படித்தார். பின்னர் பெர்க்லேவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தார். 1971ம் ஆண்டு வோஸ்னியாக் ப்ளு பாக்ஸை உருவாக்கினார். அது ஒரு கருவி. நீண்ட தூர அழைப்புகளுக்கு அதன் மூலம் கட்டணமில்லா அழைப்புக்களை பெற முடியும். அதை அவரும், ஜாப்ஸ்ம் சேர்ந்து, அதை மற்ற மாணவர்களுக்கு விற்க துவங்கினர். ஜாப்ஸ்ம், அவரும் பள்ளி தோழர்கள். 1970களின் துவக்கத்தில் வோஸ்னியாக், சான் பிரான்சிஸ்கோ பேவில் பல்வேறு சிறிய எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் பணிபுரிந்தார். 1975ல் அவர் ஹெச்.பி நிறுவத்தில் ஒரு நல்ல நிலையில் பணியை துவக்கினார். அவர் ஹெச்.பியில் பணிபுரிந்தபோது 1976ம் ஆண்டு தனது சொந்த மைக்ரோ கம்ப்பூட்டரை உருவாக்கினார். அதற்கு அவர் புதிய மைக்ரோ ப்ராசசரை பயன்படுத்தினார். ஆனால் நிறுவனம் இவரது வடிவமைப்பை செய்ய முன்வரவில்லை. அப்போது ஜாப்ஸ் இவரது பணியில் அதிக ஆர்வம் காட்டினார். வோஸ்னியாக்கின் வடிவமைப்பு பிடித்து விடவே அவர்கள் இருவரும் சேர்ந்து பணி செய்ய ஒப்புக்கொண்டனர். அவர்கள் தங்களின் சொந்த நிறுவனத்தை உருவாக்கினார்கள். அதுதான் ஆப்பிள் கம்ப்யூட்டர். அவர்களின் ஆரம்பகால முதலீடு, ஜாபினுடைய ஆட்டோமொபைல்கள் மற்றும் வோஸ்னியாக்கின் ப்ரோகிராமபிள் கால்குலேட்டர்களை விற்பதில் கிடைத்தது. ஜாப்ஸின் குடும்பத்துக்கு சொந்மான ஒரு மோட்டார் வண்டிகள் பழுதுபார்க்கும் இடத்தில் இருந்து அவர்களின் தயாரிப்பு துவங்கியது. அவங்கு அவர்கள் மைக்ரோ கம்ப்யூட்டர் சர்க்யூட் போர்ட்களை தயாரித்தார்கள். விற்பனை அவர்களுக்கு திருப்தியளிக்கவே, அவர்கள் முடிக்கப்பட்ட பொருட்களை தயாரிக்க முடிவெடுத்து அப்படி வந்ததுதான் ஆப்பிள் – 2, அது 1977ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அதன் உள்ளேயே இருந்த ஒரு கீபோர்ட் இருந்தது. கலர் மானிட்டரும் இருந்தது. வோஸ்கியாக்கின் புத்திசாலித்தனமானஇன்ஜினியரிங் திறமையும், ஜாப்ஸின் அழகியல் திறனும் சேர்ந்து, பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அப்பால் ஈர்க்கப்பட்ட முதல் பர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பிள் 2 தான். பொது உலகுக்கு 1980ம் ஆண்டு வந்தது. அப்போது, அதன் சந்தை மதிப்பு 1 பில்லியன் டாலர் இருந்தது. அது கார்ப்பரேட் வரலாற்றில் அசுர வளர்ச்சியில் மைல்கல்லாக பார்க்கப்பட்டது. நிறுவனத்தில் வோஸ்னியாக்கின் பங்குகள் அவரை திடீர் மல்டிமில்லியனர் ஆக்கியது. இந்த ஆண்டுகளில் வோஸ்னியாக், புதிய ஹார்ட்வேரை வடிவமைத்தார். 3.5 இன்ச் பிஃளாப்பி டிஸ்க் டிரைவை ஆப்பிள் 2க்காக உருவாக்கினார். ஆப்பிள் ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கான பல்வேறு கூறுகள் சாப்ஃட்வேர் அப்பிளிகேஷன்ஸ் ஆகியவற்றை வடிவமைத்தார். இந்தப்பணிகள் 1981ம் ஆண்டு முடிவடைந்தது. பின்னர் ஒரு விமான விபத்தில் அவருக்கு அம்னீசியா ஏற்பட்டது. அது நினைவை இழந்துவிடும் மறதி நோய். எனவே அவர் ஓய்வு எடுக்க வற்புறுத்தப்பட்டார். எனவே பார்க்லே சென்று அவர் அவரது படிப்பை தொடர்ந்தார். இறுதியல் இவரது பணிகளை ஆப்பிள் அங்கீகரித்தது. அவருக்கு 1987ம் ஆண்டு இளம் அறிவியல் பட்டமும் வழங்கப்பட்டது.மீண்டும் 1982ம் ஆண்டு ஆப்பிளுக்கு திரும்பினார். மேலாண்மை துறையில் கவனம் செலுத்தினார். 1985ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரையும், ஜாப்ஸையும் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் தேசியளவிலான மெடல் கொடுத்து பாராட்டினார். வோஸ்னியாக், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுப்பதிலும், குழந்தைகளின் கல்விக்கும் உதவி செய்தார். வோஸ்னியாக், ஆப்பிளை விட்டுச் சென்றவுடன், பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு முதலீடு செய்தார். பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருந்தார். 2009ம் ஆண்டு இவர், ஸ்டோரேஜ் டிவைஸ் தயாரிக்கும் நிறுவனமான ஃபியூசன் லோ என்ற அமெரிக்க நிறுவனத்தின் முதன்மை அறிவியலாளர் ஆனார். நிறுவனத்தின் போர்ட் ஆஃப் டைரக்டர்களுள் இருந்தபோது முழுநேரம் வேலை செய்ய வந்தார். 2014ம் ஆண்டு ஃபியூசன் லோ சான்டிஸ்குக்கு விற்கப்பட்டது. அப்போது அவர் அந்நிறுவனத்தில் இருந்து விலகி, பிரைமரி டேட்டாவின் முதன்மை சயின்டிஸ்ட் ஆனார். அவர்கள் டேட்டா விர்சுவலைசேசனில் ஈடுபட்ட நிறுவனம். அந்த வர்த்தகமும் 2018ம் ஆண்டு நிறைவடைந்தது. 2006ம் ஆண்டில் வோஸ்னியாக்கின் ஐ வோஸ் – கம்ப்யூட்டர் கீக் முதல் கல்ட் ஐகான் வரை – நான் எவ்வாறு பர்சனல் கம்ப்யூட்டரை உருவாக்கினேன், ஆப்பிளின் இணை நிறுவனர் ஆனேன், அதை செய்வதில் மகிழ்ந்தேன் என்ற சுயசரிதை புத்தகம் வெளியானது.
கவிஞர் பி.கே.முத்துசாமி நினைவு நாளின்று உலகத் திரைப்படங்களில் இருந்து இந்திய திரைப்படங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுபவை பாடல்கள்தான். இந்திய திரைப்படங்கள் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருந்தாலும், இன்றைக்கும் மாறாமல் இருப்பது பாடல்களே. பல திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள், காலங்களைக் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.. பாடல்களை உருவாக்குவதில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என பலரின் பங்களிப்பும் உண்டு. சில பாடலாசிரியர்களே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்து காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்களை இயற்றிய மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கவிஞர் சுரதா உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனினும், பல வெற்றிப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள் சிலர், பொதுவெளியில் அடையாளம் காணப்படாதவர்களாக உள்ளனர். இவர்களில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்த முதுபெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமியும் ஒருவர். `வெண்பா கவிஞர்’ எனப் போற்றப்படும் இவர், 1958-ல் வெளியான `தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?’ என்ற பாடலை எழுதியவராக்கும். மேலும் மருதநாடு இளவரசி படத்தின் கதையை… மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தன்னிடம் இருந்து திருடிவிட்டதாக குற்றம் சாட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அக்காலத்தில் இந்தப் பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை எனும் அளவுக்கு, பட்டிதொட்டி எங்கும் இப்பாடல் வெகு பிரபலம். காலத்தைக் கடந்தும் இப்பாடல் சில இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதேபோல, `காவிரியின் கணவன்’ என்ற படத்தில் `சின்ன சின்ன நடைநடந்து, செம்பவள வாய் திறந்து’ என்ற பாடல், `பொன்னித் திருநாள்’ படத்தில் `கண்ணும் கண்ணும் கதை பேசி, ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து’ போன்ற பல வெற்றிப் பாடல்களை இயற்றியுள்ளார் இவர். ஏ.கே.வேலன் இயக்கிய பொன்னித் திருநாள் திரைப் படத்தில் கவிஞர்கள் மருதகாசி, கண்ணதாசன், சுரதா ஆகியோருடன் இணைந்து, கவிஞர் பி.கே.முத்துசாமியும் பாடல் எழுதியுள்ளார். பாடலாசிரியர் பெயர்ப் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. இதேபோல, இவர் எழுதிய ஒரு நாடகத்தில், நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்ற திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். கவிஞர் சுரதா வார இதழ் ஒன்றில், ‘குடத்துக்குள் ஒளிரும் குத்துவிளக்கு, வறுமை வளாகத்தில் உலாவும் பெரியார், கொள்கைச் சிங்கம் கவிஞர் பி.கே.முத்துசாமி. இவரது பாடலுக்கு நான் அந்த நாள் ரசிகன்’ என்று குறிப்பிட்டுள்ளார். வெண்பா வேந்தர், இந்த நுாற்றாண்டின் புகழேந்தி போன்ற விருதுகளும் கவிஞருக்கு வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் கவிஞர் பாரதிதாசனுக்கு பரிச்சயமானவராக இருந்துள்ளார். பிற்காலத்தில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட பி.கே.முத்துசாமி, சிறிய வாடகை வீட்டில், வறுமையில் வாடுவதையறிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு ரூ.5 லட்சம் வழங்கி உதவியுள்ளார். இந்த தொகைக்கான காசோலையை தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2015-ல் நேரில் வந்து வழங்கினார். இந்த தொகையை வங்கியில் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டி மற்றும் முதியோர் ஓய்வூதியத்தைக் கொண்டு வாழ்ந்து வரும் பி.கே.முத்துசாமி, தற்போதும் யார் உதவியுமின்றி தனியாகவே தனது தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்க்கையை ஓட்டி வண்த இக்கவிஞர் 102 வயசில் இதே ஆகஸ்ட் 11(2020) இல் காலமானார்.
