அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பதிலடி..!

இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இதனால் இந்தியா மீதான வரிவிகிதம், 50 சதவீதமாக உயர்ந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஏப்ரல் 2-ந்தேதி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். அந்த நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் வரிக்கு சமமாக வரி விதிக்கும் நோக்கத்தில், இந்த கூடுதல் வரியை அறிவித்தார்.

பின்னர், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள கால அவகாசம் அளிக்கும்வகையில், கூடுதல் வரியை ஜூலை 9-ந்தேதிவரை அமெரிக்கா நிறுத்தி வைத்தது. பிறகு அந்த கால அவகாசம், ஆகஸ்டு 1-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

ஆகஸ்டு 1-ந்தேதி, 68 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருட்கள் மீது கூடுதல் வரி அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். ஒவ்வொரு நாட்டுக்கும் எவ்வளவு வரிவிகிதம் என்பதை அவர் அறிவித்தார். அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 25 சதவீத வரி விதித்தார். அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தார்.

இந்தியா உள்ளிட்ட 68 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் மீதான கூடுதல் வரி, இன்று (வியாழக்கிழமை) அமலுக்கு வரும்நிலையில், இந்தியா மீதான வரிவிகிதத்தை மேலும் உயர்த்தப்போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதை அதற்கு காரணமாக தெரிவித்தார்.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா நிதியுதவி செய்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டினார்.

அதற்கு இந்தியா முதல்முறையாக பகிரங்கமாக பதிலடி கொடுத்தது. ரஷியாவிடம் இருந்து அமெரிக்கா யுரேனியம், பல்லேடியம், உரங்கள், ரசாயனங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்து வருவதாக அம்பலப்படுத்தியது. ஆனால், ரஷியாவிடம் இந்த பொருட்களை அமெரிக்கா வாங்குவது பற்றி தனக்கு தெரியாது என்று டிரம்ப் மழுப்பலாக பதில் அளித்தார்.

24 மணி நேரத்துக்குள், இந்தியா மீதான வரியை மேலும் அதிகரிக்கப் போவதாக டிரம்ப் நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்த பின்னணியில், நேற்று இந்தியா மீது அமெரிக்கா மேலும் 25 சதவீத வரி விதித்தது. இதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதம் என்ற வகையில், கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா கூறி இருந்தது. கடந்த 1-ந்தேதி அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி அமலுக்கு வர 14 மணி நேரங்கள் இருந்த நிலையில், கூடுதல் வரி அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதில், கடந்த 1-ந்தேதி அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி, இன்று அமலுக்கு வருகிறது. நேற்று அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி, ஆகஸ்டு 27-ந்தேதி அமலுக்கு வரும் என்று உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மறைந்த புகழ்பெற்ற விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் மூன்று நாள் உலகளாவிய மாநாட்டில் உரையாற்றிய அவர், “இந்தியாவை பொறுத்தவரை, இந்திய விவசாயிகளின் நலனுக்கே முதன்மையான முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!