சென்னை மெரினா கடற்கரையில் மேம்பாட்டுப் பணிகள் – உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

நீலக்கொடி என்பது சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத் துறைகளை ஒருங்கிணைக்க உதவும் ஒரு மதிப்புமிக்க சுற்றுச்சூழல் சின்னமாக வளர்ந்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.7.31 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மெரினா கடற்கரைப் பகுதியில் நீலக்கொடி சான்றிற்காக 7.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் சூழலியலை பேணும் மேம்பாட்டுப் பணிகளை இன்று(3.8.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

நீலக்கொடி கடற்கரைத் திட்டமானது நன்னீர் மற்றும் கடல் பகுதிகளில் நிலத்தின் தன்மையினை மேம்படுத்தும் சர்வதேச அளவிலான முயற்சியாகும். இத்திட்டம் டென்மார்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு ஆகிய நான்கு அம்சங்களின் வாயிலாக உயர்ந்த தரங்கள் நிலை நாட்டப்படுகிறது.

நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெறுவதால், உலக அளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து சுற்றுலா மேம்பாட்டிற்கும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகை ஏற்படுகிறது. உள்ளூரில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகங்களை ஆதரித்து கடற்கரை இடங்களை பாதுகாக்க ஊக்குவிக்கிறது. மேலும் நீலக்கொடி என்பது சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத் துறைகளை ஒருங்கிணைக்க உதவும் ஒரு மதிப்புமிக்க சுற்றுச்சூழல் சின்னமாக வளர்ந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவளம் கடற்கரை நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெற்ற தமிழ்நாட்டின் முதல் கடற்கரையாகத் திகழ்கின்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டினை மேலும் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சென்னை, கடலூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய கடற்கரைகளை நீலக்கொடி சான்று பெற்ற கடற்கரைகளாக விரிவுபடுத்தும் நோக்கில் சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் சூழலியலை பேணும் வகையிலான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மெரினா கடற்கரைப் பகுதியில் நீலக்கொடி சான்றிற்காக 20 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் 7.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையின் 20 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் மூங்கிலால் ஆன 20 நிழற்குடைகள், 40 சாய்வு நாற்காலிகள், 12 அமரும் நாற்காலிகள், 4 கண்காணிப்புக் கோபுரங்கள், 24 குப்பைத் தொட்டிகள், முகப்பு வளைவு, தியான மையம், வாசிக்கும் அறை மற்றும் தன்படம் எடுக்கும் 2 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தென்னை மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 12 எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள், 4 இடங்களில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, காட்சிப் பதிவு கண்காணிப்பு (CCTV) மற்றும் முதலுதவி அறை, இருப்பு அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே குளியல் அறைகள், கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, தானியங்கி இயந்திரம் மூலம் தூய்மையான குடிநீர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மு.மகேஷ்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!