கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

கன்னியாகுமரியில் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம்.

இந்தநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு ஆர்வத்துடன் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பலர் தங்களது செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் படகில் உற்சாகத்துடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து விட்டு திரும்பினர்.

இதேபோல் விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!