20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். விஜய்யும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு 20 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். அதாவது, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ளதால் நோயாளிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்பட கூடாது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர்வலமாகவோ, பேரணியாகவோ செல்லக்கூடாது.
போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறோ, பாதிப்போ ஏற்படக் கூடாது. பட்டாசுகள் வெடிக்க கூடாது. அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில் சரியாக ஆர்ப்பாட்டத்தை தொடங்கி முடித்து விடவேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து ஆர்ப்பாட்டத்தை நடத்து கூடாது உள்ளிட்ட 20 நிபந்தனைகள் இதில் அடங்கி உள்ளது.
இந்த நிபந்தனைகளை மீறினால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்ட நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
