தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் தேர்வை எழுத இருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.
அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப்-4 பணிகளில் 3,935 காலி இடங்கள் இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.
இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு சமீபத்தில் ஹால்டிக்கெட்டையும் வெளியிட்டது. அதன்படி, 5,26,553 ஆண்கள், 8,63,068 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13,89,738 பேர் இன்று (சனிக்கிழமை) இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் எழுத இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 94,848 பேர் எழுதுகிறார்கள்.
இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு தொடர்பான மந்தணப் பொருட்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசு கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் (Videograph) செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.![]()
விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது .
