நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது..!

போராட்டம் அறிவிக்கப்பட்டநிலையில், பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் இன்று இயக்கப்படாது என தெரிகிறது.

அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது. எனவே அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். எனவே குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஆட்டோக்கள் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

வங்கிகள் செயல்படாது

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையத்தின், ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு எங்களது கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதோடு, கலந்து கொள்ளவும் முடிவு செய்துள்ளது’ என்று கூறி உள்ளார்.

சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. அரசு ஊழியர்மற்றும் வங்கி ஊழியர்கள்சங்கங்களும் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் வங்கிகள் இயங்காது.

விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம், அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் சில அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்களால் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டம் அல்லது வேறு எந்த வகையான போராட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் சாதாரண செயல்பாட்டை பாதிக்கும். இது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973-ஐ மீறுவதாகும். அதனை மீறுவர்களுக்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இன்று பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் வழங்கப்படாது. அதாவது ‘வேலை இல்லை சம்பளம் இல்லை’. மேலும் அலுவலகத்திற்கு வராத ஊழியர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் வேலை நிறுத்ததில் ஈடுபடும் பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியம் பெறுபவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். எனவே அனைத்து துறை தலைவர்கள், கலெக்டர்கள் ஆகியோர் பணிக்கு வராத ஊழியர்கள் குறித்து காலை 10.15 மணிக்குள் அரசுக்கு அறிக்கை தரவேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இன்று காலை 10 மணிக்கு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலாளர்களுக்கு அந்தந்த தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனவே தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் இன்று தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டு உள்ளனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது. எனவே வழக்கம் போல் பணிக்கு வந்து பஸ்களை இயக்க வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகளிடம் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனவே 50 சதவீத பஸ்கள் இன்று இயக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதேசமயம் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பங்கேற்காது என்றும், இதனால் தமிழகத்தில் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அதன் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!