ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் சிந்து‘ என்ற நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13-ந்தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து இன்று 6-வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் சிந்து’ என்ற நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையின் மூலம் ஈரானில் இருந்து இதுவரை 1,713 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேலில் இருந்து சுமார் 160 இந்தியர்கள் பேருந்துகள் மூலமாக ஜோர்டான் நாட்டு எல்லைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை அம்மான் விமான நிலையத்திற்கு அழைத்து வருவதற்கான பணிகளை ஜோர்டான் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது. மீட்கப்பட்ட 160 இந்தியரகள் விரைவில் அம்மான் விமான நிலையத்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
