பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்..!

அகமதாபாத்தில் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் 7-வது பரபரப்பான விமான நிலையமாக கருதப்படுகிறது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானியும் இருந்தார்.

இந்த விமானம் வானில் பறந்த ஒரு சில நிமிடங்களிலே அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மே டே அழைப்பு’ வந்தது. ‘மே டே அழைப்பு’ என்பது சர்வதேச அளவில் அபாயத்தை தெரிவிக்கவும் உடனடி உதவி வேண்டும் என்பதைக் குறிக்கும் ரேடார் சிக்னலாகும். இதனை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களால் விமானியை தொடர்பு கொள்ள இயலவில்லை.

இதற்கிடையே, சில நிமிடங்களில் அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் இருந்து எழுந்த தீப்பிழம்புகளும், கரும்புகையும் கிளம்பியது.  உடனடியாக இதுகுறித்து விமான நிலைய தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே அதாவது 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகரில் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில், குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். இதில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

இருப்பினும், இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விஷ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி பெரும் சேதமடைந்தது. இதனால் விடுதி அறையில் தங்கியிருந்த சில மாணவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார். இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட 265 உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி இன்று (ஜுன் 13) குஜராத் பயணம் மேற்கொள்கிறார். அங்கு விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரையும் சந்திப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!