பகல் 11 மணியளவில் ஓட்டலில் இருந்து அமித்ஷா காரில் புறப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த முறை தமிழகம் வந்தபோது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இருகட்சியினரும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த ஆயத்தமாகி வருகிறார்கள். தங்கள் கூட்டணிக்கு மேலும் கட்சிகளை கொண்டுவரவும், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியை களம் இறக்கவும் வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், மீண்டும் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. தி.மு.க. பொதுக்குழு மதுரையில் நடந்து முடிந்த ஒரு வாரத்துக்குள், மதுரைக்கு அமித்ஷாவும் வருகிறார் என்பது அரசியல் ஆர்வலர்களை உற்றுநோக்க வைத்துள்ளது.
மதுரையில் பா.ஜனதா நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் வரை பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில் அமித்ஷா பேச இருக்கிறார்.
விமான நிலையத்துக்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் திரண்டு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களுக்கு காரில் இருந்தபடியே வணக்கம் தெரிவித்த அமித்ஷா வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர், சிந்தாமணி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று இரவு தங்கினார்.உடன் கட்சியின் மூத்த தலைவர்கள் அந்த ஓட்டலுக்கு சென்று அமித்ஷாவுடன் ஆலோசனையில் நடத்தினர். இன்று பகல் 11 மணியளவில் ஓட்டலில் இருந்து அமித்ஷா காரில் புறப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனத்தை முடித்து விட்டு, மீண்டும் 12 மணிக்கு மீண்டும் ஓட்டலுக்கு வருகிறார்.
அங்கு சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அமித்ஷாவை சந்திக்கின்றனர். சில கட்சி தலைவர்களும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரத்தியேக அனுமதி கடிதமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பின்னர் இன்று மாலை 4 மணிக்கு ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார். அவரது வருகையையொட்டி, பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நேற்று முழுவீச்சில் நடந்தது.டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவும், அந்த பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெறும் இந்த கூட்டத்தை முடித்து விட்டு, மாலை 6 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்லும் அமித்ஷா அங்கிருந்து, தனி விமானத்தில் புறப்பட்டு டெல்லி செல்கிறார். அமித்ஷா வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.