இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 28)

தொழிலாளர் நினைவு நாள் (Workers’ Memorial Day, International Workers’ Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் (International Commemoration Day (ICD) for Dead and Injured) ஆண்டுதோறும் ஏப்ரல் 28 ஆம் நாள் உலகெங்கும் தமது பணியின் போது கொல்லப்பட்டு, காயமடைந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர். இது வேலை தொடர்பான விபத்துகள், நோய்கள் என்பவற்றின் விளைவுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்; தொழில்சார்ந்த பாதுகாப்பு, நலம் ஆகியவை தொடர்பான விடயங்களை நாடுகள் மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் செயல்திட்டங்களில் இடம்பெறச் செய்வதற்காகவும்; தொழில்சார் பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுவதற்குமே இந்நாள் அறிவிக்கப்பட்டது.

தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர் மறைந்த நாளின்று: தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.! 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில் வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு! அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர், இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார்.அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது. இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார். அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன் சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் “சீவகசிந்தாமணி’. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான “பத்துப்பாட்டு’ என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் “சிலப்பதிகாரம்’, “மணிமேகலை’ போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அடுத்து “குறுந்தொகை’ என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். “சங்க நூல்கள்’, “பிற்கால நூல்கள்’, “இலக்கண நூல்கள்’, “திருவிளையாடற் புராணம்’ போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை. இவர் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் தனது 17 வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் தமிழ் கற்றார். பின்னர் கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி “மகா மகோ பாத்யாயர்’ என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு “தமிழ் இலக்கிய அறிஞர்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது. 1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, “இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது’ என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் “தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1940-ஆம் ஆண்டு “என் சரித்திரம்’ என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28-ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தி. வே. சுந்தரம் அய்யங்கார் T.V.S இறந்த தினம் ’எலே… தெரியுமா சேதி? புதுசா ஒரு வண்டி வந்திருக்காம். குதிரை, மாடு எதுவும் இழுக்கத் தேவையில்லையாம் தானாவே ஓடுமாம்’’ கிராமமெங்கும் பரவிய தகவலை யாருமே நம்பத்தயாராக இல்லை. ‘‘அதெப்படி எதுவுமே இழுக்காம ஒரு வண்டி ஓடும்?’’ என்று, செய்தி சொன்னவரை அனைவரும் கேலி செய்தார்கள். ஆனால், உண்மையிலேயே கண்ணெதிரே அந்த வாகனம் வந்தபோது ஆச்சர்யத்தில் திகைத்து நின்ற கிராம மக்கள், ‘இதென்ன ஸ்ரீ ராம பாணமோ? ஸ்ரீ கிருஷ்ண ரதமோ!’ என ஆச்சர்யத்தில் கண்கள் கலங்க, ஆனந்தக் கூத்தாடி அந்த வாகனத்தை விழுந்து வணங்கினார்கள்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து நடந்து தேய்ந்து போயிருந்த தமிழர்களின் கால்களுக்கு ஓய்வுகொடுத்து, பேருந்துகளில் பயணிக்கவைத்த பெருமை டி.வி.சுந்தரம் ஐயங்காரையே சேரும். இன்றைக்கு 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொண்ட மகா விருட்சமாய், ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கும் மேல் வியாபாரம் செய்யும் வர்த்தகக் குழுமமாய் பரந்து விரிந்திருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தைச் சேர்க்காமல் ஆசிய ஆட்டோமொபைல் வரலாற்றை எழுதமுடியாது. சுந்தரம் அய்யங்கார் முற்போக்குச் சிந்தனை கொண்டவர். இளம்வயதில் கைம்பெண்ணான தன் மகள் தி. சு. சௌந்தரத்துக்கு மகாத்மா காந்தியின் ஆசியுடன் மறுமணம் செய்து வைத்தார் . தி. சு. சௌந்தரம் இந்திய விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய அரசு தி.சு. சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை பெருமைப்படுத்தியது . வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர்கலைகளையும் ஆதரித்தார் . தான் ஓய்வு பெற்று வணிகத்தை தன் மகன்களிடம் ஒப்படைத்ததைக் கண்டு இராசகோபாலாச்சாரி இவரைப் பாராட்டினார் . ஏப்ரல் 28, 1955 இல் அதிகாலையில் கொடைக்கானலில் உள்ள தன் வீட்டில் இறந்த போது இவரது வயது 78. இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வெண்கலமும் பளிங்கும் கொண்ட இவரின் மார்பளவு உருவச்சிலை மதுரையில் ஆகஸ்டு 7, 1957 இல் அந்நாள் மத்திய வணிக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இத்தாலியின் பாசிச சர்வாதிகாரி முசோலினி கொல்லப்பட்ட தினம் இராண்டாம் உலகப் போரில் விரிவடைந்த இத்தாலியப் பேரரசை’ ஏற்படுத்த விரும்பிய முசோலினி, 1923-ல் கோர்ஃபு என்ற கிரேக்கத் தீவின் மீது குண்டுமாரி பொழிந்து அதைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இத்தாலியின் காலனியான லிபியாவில் அரசியல் கைதிகளுக்கு உடலுழைப்பு முகாம்களைத் திறந்து வைத்தார். கைதிகளை விஷ வாயுவைச் செலுத்திக் கொல்லுமாறும் கட்டளையிட்டார். 1935, 1936-ல் அபிசீனி யாவைக் கைப்பற்றியபோதும் விஷவாயு முகாம்களில் பலர் கொல்லப்பட்டனர். இத்தாலிக்கு எதிராக நேச நாடுகள் போர் பிரகடனம் அறிவித்தன லிபியாவையும் அபிசீனியாவையும் மீட்ட நேச நாடுகள், 1943-ல் இத்தாலி மீது படையெடுத்தன. ரோம் நகரின் மீது குண்டுகளை வீசின. அந்த ஆண்டு ஜூலை 25-ல் மன்னர் விக்டர் இம்மானுவேல், முசோலினியைக் கைது செய்து பல்வேறு ஊர்களில் சிறை வைத்தார். ஜெர்மானிய கமாண்டோக்கள் அவரை மீட்டுத் தங்கள் ஆக்கிரமிப்பில் இருந்த வடக்கு இத்தாலியில் தங்க வைத்தனர். அங்கிருந்துகொண்டு பொம்மை (இத்தாலிய) அரசின் அதிபராகத் தன்னைக் காட்டிக்கொண்டார் முசோலினி. 1945 ஏப்ரல் 27-ல் ஜெர்மானிய ராணுவ அதிகாரியைப் போல மாறுவேடமிட்டு, சுவிட்சர்லாந்துக்குச் செல்ல முயன்றபோது, இத்தாலியைச் சேர்ந்த அரசு எதிர்ப்புப் படை வீரர் ஒருவரால் அடையாளம் காணப்பட்டார். அடுத்த நாளே மிலன் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மக்கள் கூடும் சதுக்கத்தில் பெரிய கம்பத்தில் தலைகீழாக கட்டித் தொங்க விடப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி கிளாரா பெட்டாசி, அவளுடைய தம்பி மார்செலோ பெட்டாசியும் அதேபோல அவருடன் சேர்த்து கட்டிவிடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரது அமைச்சர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. முசோலினிக்கு ஏற்பட்ட இந்தக் கதி ஹிட்லரின் காதுகளை எட்டியது. பெர்லின் நகருக்குள் சோவியத் துருப்புகள் நுழைந்துவிட்டன என்று கேள்விப்பட்டதும் மனைவி இவா பிரௌனைச் சுட்டுக்கொன்றுவிட்டு, விஷம் குடித்ததுடன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார் ஹிட்லர். இரு சர்வாதிகாரிகளின் வாழ்வும் இப்படியாக பரிதாபமாக முடிவுக்கு வந்தது.

1945 – இத்தாலிய எதிர்ப்பியக்கத்தால், பெனிட்டோ முசோலினி உள்ளிட்ட 18 ஃபாசிஸ்ட்டுகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதுடன், முசோலினி, அவர் காதலி கிளாரா உள்ளிட்ட 15 பேரின் உடல்கள், மிலன் நகரிலுள்ள பியாஸேல் லோரெட்டோ சதுக்கத்தில், பொதுமக்கள் பார்வைக்காகத் தலைகீழாகக் கட்டித்தொங்கவிடப்பட்ட நாள் முசோலினியின் ஃபாசிச அரசு உருவான 1920களில், அதற்கெதிராக எழுந்த பல இயக்கங்களின் கூட்டமைப்பே இத்தாலிய எதிர்ப்பியக்கம். 1943இல் ஜெர்மெனியின் கட்டுப்பாட்டில் ஒரு கைப்பாவை அரசை முசோலினி அமைத்தபின்னரே, இது தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போரில் இத்தாலிக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகள், இத்தாலியின் ஆஃப்ரிக்கக் குடியேற்றங்களை இழக்க நேரிட்டது, சிசிலித் தீவிலும், இத்தாலியத் தீபகற்பத்தின் தென்பகுதியிலும் நேசநாடுகளின் படைகள் நுழைந்தது ஆகியவற்றைத் தொடர்ந்து, அரசர் மூன்றாம் விக்டர் இம்மானுவேல், முசோலினியின் அரசைக் கலைத்து, அவரைக் கைதும் செய்தார். புதிய அரசு நேசநாடுகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ய முயற்சித்தது. போர்நிறுத்தமாகக் கூறிக்கொள்ளப்பட்டாலும், முழுமையான சரணாகதியாக இருந்த இம்முயற்சியைத் தொடக்கத்திலிருந்தே அறிந்திருத் ஹிட்லர், ஜெர்மன் படைகளை அனுப்பி, இத்தாலியின் மத்திய, வடக்கு பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டார். ஏற்கெனவே ஜெர்மெனியுடனான அணியில்தான் இத்தாலி இருந்தது என்பதால் எதிர்த்துப்போரிட வேண்டுமா இல்லையா என்றே புரியாத இத்தாலியப் படையினரின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து, ஜெர்மன் படைகள் எடுத்துக்கொண்டன. ஆட்சிக் கலைப்புக்குப்பின் மாற்றி மாற்றி பல இடங்களில் சிறைவைக்கப்பட்டிருந்த முசோலினியை விடுவித்த ஹிட்லர், புதிய ஃபாசிச அரசொன்றை இத்தாலியில் உருவாக்கச்சொன்னார். உடல்நலம் குன்றியிருந்த முசோலினி, ஓய்வுபெற விரும்பியதால் மறுத்தார். மிலன், ஜெனோவா, ட்யூரின் நகரங்களை அழித்துவிடுவதாக ஹிட்லர் மிரட்டியதால், எஞ்சியிருந்த மக்கள் செல்வாக்கு, போரின்போது அரசர் தப்பியோடியது ஆகியவற்றைப் பயன்படுத்தி, கைப்பாவை அரசை அமைத்தாலும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் எதிர்ப்பியக்கத்தால் கொல்லப்பட்டார். இதே சதுக்கத்தில் ஏராளமான ஃபாசிச எதிர்ப்பாளர்களைக் கொன்று தொங்கவிட்டதற்குப் பழிவாங்கும்விதமாக, தொடங்கவிடப்பட்டிருந்த உடல்கள்மீது பொதுமக்கள் கற்களை வீசித் தாக்கினர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில், ரோஸ்வில்லி என்னுமிடத்திலுள்ள தொடர்வண்டி சரக்குகள் கையாளுமிடத்தில், கப்பற்படைக்கு வெடிப்பொருட்களை எடுத்துச் சென்ற தொடர்வண்டி வெடித்த நாள் தென்கிழக்கு ஆசியாவிற்கு எடுத்துச் செல்வதற்காக (அதாவது, வியட்னாம்மீது வீசுவதற்காக) 21 ரயில்பெட்டிகளில், சுமார் 113 கிலோ (250 பவுண்டுகள்) எடையுள்ள 7056 குண்டுகள் (சுமார் 800 டன்) ஏற்றப்பட்டிருந்தன. ரோஸ்வில்லி யார்டில் நிறுத்தமுடியாத அளவுக்கு இந்த வண்டியின் நீளம் அதிகமாக இருந்ததால், 3 பெட்டிகள் மட்டும் யார்டுக்கு வெளியே தனியே நிறுத்தப்பட்டிருந்தன. மீதமுள்ள 18 பெட்டிகளில் இருந்த 6000க்கும் அதிகமான குண்டுகள் இவ்விபத்தில் வெடித்தன. சக்கரங்களின் உராய்வினால் ஏற்பட்ட வெப்பம், ஒரு ரயில் பெட்டியின் மரத்தாலான தரைப்பகுதியில் தீப்பற்றச்செய்ததில் விபத்து ஏற்பட்டது என்று அறிவித்த அமெரிக்க அரசு இதுகுறித்த செய்திகள் அதிகம் வெளியில் வராமல் பார்த்துக்கொண்டது. 3 2 மணி நேரத்துக்குக் குண்டுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்ததில், 23 தண்டவாளங்கள் கொண்ட அந்த ரயில் யார்ட் கிட்டத்தட்ட முழுவதுமே நாசமானது. 65 கி.மீ. தொலைவுக்கு வெடிச்சத்தம் கேட்டது. 8 கி.மீ. தொலைவுவரை கட்டிடங்களின் சன்னல்கள், கதவுகள் பறந்து சென்றன. சுமார் 5,500 கட்டிடங்கள் சேதமாயின. தற்போதைய மதிப்பில் சுமார் ரூ.740 கோடி அளவுக்கு சேதமேற்பட்டது. ரயில் பெட்டிகளும், ஊழியர்களும் 100 அடி உயரம்வரை தூக்கிவீசப்பட்டாலும், ‘350 பேர் காயமடைந்தனர், யாருமே இறக்கவில்லை’ என்று அமெரிக்கா கூறியது. விபத்தைத் தொடர்ந்து, ரயில் பெட்டிகளில் தீப்பொறி ஏற்படாத பிரேக்குகள், பெட்டிகளின் தளங்களில் தீப்பொறி எதிர்ப்பு அமைப்புக்கள் ஆகியவை உடனடியாக நிறுவப்பட்டன. ஆபத்தான சரக்குகளை எடுத்துச் செல்லும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புக்கள் குறித்த ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது நிறைவேற்றப்படவில்லை. விபத்துப் பகுதியில் குண்டுகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டும், 24 ஆண்டுகள் கழித்து 1997இல் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு மீண்டும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாம் உலகப்போரில், ‘எக்சர்சைஸ் டைகர்’ என்னும் பயிற்சி நடவடிக்கையின்போது, ஜெர்மெனியின் இ-போட்கள் தாக்கியதில், இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன், 749 அமெரிக்க வீரர்களும் பலியான நாள் ஜெர்மெனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கு ஐரோப்பியப் பகுதிகளை மீட்பதற்காக நடைபெற்ற நோர்மண்டி யுத்தம், ‘ஆப்பரேஷன் ஓவர்லார்ட்’ என்று குறிப்பிடப்படுகிறது. இதற்காக, நேச நாடுகளின் படைகள், நோர்மண்டியில் தரையிறங்கிய நிகழ்வு, ‘ஆப்பரேஷன் நெப்ட்யூன்’, ‘டி-டே’ என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. டி-டே என்பதில் டி என்பது டே-யைத்தான் குறிக்கும். ராணுவ நடவடிக்கைகளில், ஒரு நடவடிக்கைக்குத் திட்டமிடப்பட்ட நாளை டி-டே என்றும், திட்டமிடப்பட்ட நேரத்தை ‘எச்-அவர்’ என்றும் குறிப்பிடுவது வழக்கம். இந்த நடவடிக்கைக்காக, மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகைதான் ‘எக்சர்சைஸ் டைகர்’. இதுகுறித்த தெளிவான தகவல்கல் பரிமாற்றிக் கொள்ளப்படாததால், இந்த ஒத்திகைக்காக சுட்ட நிகழ்வுகளில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கே சேதங்களும் ஏற்பட்டன. 1940இல் டன்க்கிர்க் துறைமுகத்தில் மாட்டிக்கொண்ட வீரர்களை மீட்ட ‘ஆப்பரேஷன் டைனமோ’-வின்போது ஏற்பட்ட கடும் சிரமம், கடலிலிருந்து நிலத்திற்குள் நுழைவதற்தான வசதிகள் தேவையென்பதை உணர்த்தியிருந்தது. இதனால், கவச வண்டிகளைக் கடல்வழியாக் கொண்டுசென்று, துறைமுகம் அல்லாத எல்லாவித கடற்கரைகளிலும் இறக்க, எல்எஸ்டி(லேண்டிங் ஷிப் – டேங்க்) என்னும் கப்பல்களை அமெரிக்காவும், இங்கிலாந்தும் உருவாக்கியிருந்தன. நோர்மண்டியில் கவச வண்டிகளை இறக்கவேண்டும் என்பதால், அவ்வாறான நான்கு கப்பல்களும், துணைக்கு அஸேலியா என்னும் பெரிய(ஃப்ளவர் க்ளாஸ் கார்வெட்) போர்க்கப்பலும் இந்த ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. இவர்களின்மீது, ஜெர்மெனியின் 9 இ-போட்கள் தாக்குதல் நடத்தின. இ-போட் என்பது, மிகவேகமாக(90 கி.மீ.வரை!) செல்லக்கூடிய சிறிய வகைப் போர்க்கப்பலாகும். இதில் டார்ப்பீடோக்கள், பீரங்கிகள், எந்திரத்துப்பாக்கிகள், விமானங்களையும், கவச வண்டிகளையும் தாக்கும் ஃப்ளாக் பீரங்கிகள் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். இவற்றின் தாக்குதல் குறித்த செய்தி அஸேலியாவுக்குக் கிடைத்தாலும், எல்எஸ்டிகளுக்குக் கிடைக்கவில்லை. இரண்டு எல்எஸ்டிகள் மூழ்கடிக்கப்பட்டன, மற்றும் இரண்டு சேதமுற்றன. 749 வீரர்கள் பலியாகி, மேலும் 200 பேர் காயமுற்றனர். இறந்தவர்களின் விபரங்கள் மறைக்கப்பட்டு, டி-டே யுத்தம் முடிந்தபின், அதில் இறந்தவர்களுடன் சேர்த்து வெளியிடப்பட்டன. விளக்க முடியாததான, அவ்வளவு வீரர்களின் உயிரிழப்பு குறித்து ஏராளமான நூல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச வானியல் அறிஞரும், பால்வெளி குறித்த புரிதலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஜான் ஹென்ரிக் ஊர்ட் பிறந்த தினம் இன்று. நெதர்லாந்தின் ஃபிநேகர் என்ற கிராமத்தில் பிறந்தார். உயர்-திசை வேகம் கொண்ட நட்சத்திரங்களின் பண்புகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரை எழுதி 1926-ல் முனைவர் பட்டம் பெற்றார். பால்வெளி ஒரு அசுரச் சக்கரம் போல சுழல்கிறது. அண்டவெளியில் நட்சத்திரக்கூட்டங்கள் தனித்தனியாக பயணிக்கின்றன. அண்டவெளி மையத்துக்கு நெருக்கமாக உள்ளவை தொலைவில் உள்ளவற்றைவிட வேகமாக சுழல்கின்றன என்பதையெல்லாம் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். இவரும் இவரது சகாக்களும் இணைந்து மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை உருவாக்கினார்கள். அதைக்கொண்டு நட்சத்திரங்கள் ஒரு குழுவாகப் பால்வழியை முதன்மை வட்டத்தின் வெளியே சுற்றி வருகின்றன என்றார். சூரியக் குடும்பத்தின் வட்டத்திலிருந்து வால்நட்சத்திரங்கள் வருவதை 1950-ல் கண்டறிந்து கூறினார். ஊர்ட் சிறுகோள், ஊர்ட் முகில், பால்வெளிக் கட்டமைப்பின் ஊர்ட் மாறிலிகள் என பல வானியல் கண்டுபிடிப்புகளுக்கும்.இவரது பெயர் சூட்டப்பட்டது. வானியலில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் ஹென்ரிக் ஊர்ட் 92ஆவது வயதில் (1992) காலமானார்.

பால்வெளியின் கட்டமைப்பையும் படிமலர்ச்சியையும் பற்றிய ஆய்வுக்காகவும் போக் உருண்டைகளின் கண்டுபிப்புக்காகவும் பெயர்பெற்ற டச்சு-அமெரிக்க வானியலாளர் பார்தோலோமியசு ஜான் பார்ட் போக் பிறந்த நாள்

மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தினம் இன்று (1932). இக்காய்ச்சலில் உடல்வெப்பநிலை மிகையாகுவதுடன் குமட்டுதல், தலைவலி, நடுக்கம், முதுகுவலி போன்ற அறிகுறிகளும் தென்படும். சில நோயாளிகளில் இதன் விளைவு பாரதூரமாக இருக்கும், அவர்களில் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் இழைய இறப்பு ஏற்படும், இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும், இதுவே இந்நோய்க்குரிய பெயர்க்காரணம். இந்நோயில் கடுமையாக குருதிப்போக்கு ஏற்படுவதால் குருதிப்போக்குக் காய்ச்சல் வகைக்குள் இந்நோய் அடங்குகின்றது.

ஜெர்மன் தொழிலதிபரும் நாஜிக்களிடம் இருந்து ஏராளமான யூதர்களின் உயிரைக் காப்பாற்றியவருமான ஆஸ்கர் ஷிண்ட்லர் (Oskar Shindler) பிறந்த தினம் இன்று. * ஜெர்மனியில் இருந்த ஸ்விட்டாவ் (தற்போது செக் குடியரசில் உள்ளது) பகுதியில் 1908இல் பிறந்தவர். கல்லூரியில் தொழில்நுட்பக் கல்வி பயின்ற பிறகு, தந்தையின் விவசாயக் கருவிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றினார். * அப்போது ஜெர்மனியில் அதிரடியான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வந்தது. தன் வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் அக்கட்சியில் சேர்ந்தார். * போலந்து மீது ஹிட்லர் 1939-ல் படையெடுத்தார். ஒரே வாரத்தில் ஷிண்ட்லரும் அங்கு போய்ச் சேர்ந்தார். அங்கு நலிவடைந்திருந்த சமையல் பாத்திரங்கள் உற்பத்தி தொழிற்சாலையை விலைக்கு வாங்கினார். ராணுவத்துக்கு சமையல் பாத்திரம் சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை லஞ்சம் கொடுத்து பெற்றார். தன் தொழிற்சாலையில் சொற்ப சம்பளத்தில் யூதர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டார். * போலந்தில் யூதர்கள் இழிவாக நடத்தப்படுவதையும் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுவதையும் கண்டு இவரது மனம் இளகியது. தன்னிடம் வேலை செய்பவர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று உறுதிபூண்டார். * யூதர்கள் அடைக்கப்பட்டிருந்த முகாம்கள் மற்றும் இவரது தொழிற்சாலையை மூட 1943-ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஷிண்ட்லர் சுதாரித்துக்கொண்டார். தனக்குத் தெரிந்த அதிகாரியிடம் லஞ்சம் கொடுத்து, ராணுவத் தளவாட தொழிற்சாலையாக மாறிவிட்ட தன் தொழிற்சாலையை செக்கோஸ்லேவியாவுக்கு மாற்றவும் தனக்குத் தேவையான தொழிலாளிகளைத் தெரிவுசெய்து அழைத்துச் செல்லவும் அனுமதி பெற்றார். * யூதத் தொழிலாளர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்தார். ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ என வரலாற்றில் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் சுமார் 1,200 பேர் இருந்தனர். உயிரைப் பணயம் வைத்து அவர்களை செக்கோஸ்லேவியாவுக்கு அழைத்துச் சென்றார். அவரது தொழிற்சாலையில் ஒரு ஆயுதம்கூட தயாரிக்கப்படவில்லை. யூதர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவே ராணுவ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதை நடத்திவந்தார். * இரண்டாம் உலகப்போர் 1945-ல் முடிவுக்கு வந்தது. ஜெர்மனி சரணடைந்தது. ரஷ்யப் படையினரால் பிடிபடுவோம் என்ற பயத்தில் குடும்பத்துடன் ஜெர்மனிக்கு தப்பினார் ஷிண்ட்லர். ‘ஷிண்ட்லரின் யூதர்கள்’ 1,200 பேரும் ரஷ்ய ராணுவ அதிகாரி உதவியுடன் தப்பினர். * போருக்குப் பின் திவாலான இவருக்கு யூதர்கள் இறுதி வரை உதவி செய்துவந்தனர். 1968-ல் இவருக்கு இஸ்ரேலில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. * இவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. * அதிக லாபம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும் அப்பாவிகளை நேசிக்கும் மனிதநேயம் கொண்டவர். ஏராளமான யூதர்களின் உயிர்களைக் காப்பாற்றி உலக வரலாற்றிலும், யூதர்களின் மனங்களிலும் நீங்காத இடம்பிடித்த ஆஸ்கர் ஷிண்ட்லர் 66ஆவது வயதில் (1974) காலமானார். அவரது விருப்பப்படி இஸ்ரேலில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!