சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு..!

சென்னையில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னையில் செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டு மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம். அந்தத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக, தற்போது வெளியான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.

2016-ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் அதிகமான தமிழ்நாட்டு மாணவர்கள் குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை மாறி 2021-ல் வெறும் 27 மாணவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதை கவனத்தில் வைத்து, நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டது.

குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராகக்கூடிய ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு வழங்கினோம். மேலும், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயாராகக்கூடிய மாணவர்களுக்கு ரொக்கமாக 25 ஆயிரம் ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கினோம். அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் ‘அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மையத்தின் மூலமாக இந்த மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கின்றன.

நாம் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளின் பலனாக, இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் பல்வேறு அகில இந்தியப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், இவர்களில் 50 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுப் பயனடைந்திருக்கக்கூடியவர்கள்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் போற்றத்தக்க இந்த வெற்றியினை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும். அதற்காக சென்னையில் இருக்கக்கூடிய செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை இந்த அவையிலே நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!