உதகையில் ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர் மாநாடு இன்று தொடங்கியது. குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பெரும் சர்ச்சைக்கு இடையே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் நடைபெறுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாடு உதகையில் இன்று தொடங்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி நடத்தி வருகிறார். நான்காவது ஆண்டாக, உதகை ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த 2 நாள் மாநாட்டை குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள 19 அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 9 தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மூன்று மத்திய பல்கலை துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில், துணைவேந்தர்கள் நியமன சட்டமசோதா விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சூழலில் உதகையில் துணைவேந்தர் மாநாட்டை ஆளுநர் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு ஆளுநர் மாளிகை தரப்பு, இது அதிகாரப் போட்டியில் நடக்கும் கூட்டம் அல்ல என்றும் ஜனவரி மாதத்தில் இருந்தே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாகவும் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆளுநர் ரவி நேற்றிரவு உதகை வந்தடைந்தார். தமிழக அரசுக்கு போட்டியாக மாநாட்டை நடத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து உதகையில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தை சார்ந்தவர்கள் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
