திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை பொன்னி ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (15.4.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான “சிறந்த திருநங்கை விருதினை” நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ரேவதி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பொன்னி ஆகியோருக்கு திருநங்கைகளின் நலனுக்காக அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி வழங்கினார்.
திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்கள்
பெண்களைப் போல மூன்றாம் பாலினத்தவரையும் சமுதாயம் மதிக்கும் வகையில், அவர்களை கண்ணியத்துடன் அழைக்க வேண்டும் என்னும் எண்ணத்தின் வெளிப்பாடாக “திருநங்கை” என்ற மரியாதைக்குரிய சொல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அங்கீகாரத்தை வழங்கி அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் நல வாரியம் 15.04.2008-ல் சமூக நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இந்நல வாரியமானது 2.04.2025 அன்று திருத்தியமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திருநங்கைகள் நல வாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, மருத்துவக் காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்து பயிற்சி அளித்தல், தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500/- வீதம் ஓய்வூதியத் தொகை, திருநங்கைகள் உயர்கல்வி பயின்றிட கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மற்றொரு முயற்சியாக, திருநங்கைகள் சமூகத்தின் கல்வி மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையிலும், உயர்கல்வி கற்கும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 ரூபாய் ஊக்கத் தொகை இனி திருநங்கையர்களுக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்யும் நோக்கில், முதற்கட்டமாக சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் திருநங்கையினரை பணியமர்த்த தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. இந்த முன்முயற்சிகள் திருநங்கைகளின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதிலும், அவர்களுக்கு சமூகத்தில் சமமான அங்கீகாரம் கிடைப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
சிறந்த திருநங்கை விருது – 2025
தமிழ்நாடு அரசு திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகவும், அவர்களை சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர்களாக அங்கீகரித்து சிறப்பிக்கும் விதமாகவும் 2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் “சிறந்த திருநங்கை விருது” வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதானது திருநங்கைகளின் நலனுக்காக அயராது பாடுபட்டு, சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவருக்கு வழங்கப்படுகிறது. மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவால் தேர்வு செய்யப்படும் இந்த விருதாளருக்கு, திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ஆம் நாளில் விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
இந்த விருதினைப் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலையும், அவர்களது சேவை மற்றும் சாதனைகளைப் பாராட்டும் விதமாக சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த விருதானது திருநங்கை சமூகத்தின் உன்னதமான சாதனைகளை அங்கீகரிப்பதோடு, அவர்களது சமூக முன்னேற்றப் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
அந்த வகையில் தனது சொந்த உழைப்பாலும், தனித் திறமையாலும் முன்னேறி, பல திருநங்கை மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ. ரேவதி என்பவரின் சிறந்த சமூக சேவையைப் பாராட்டியும், திருநங்கைகள் தங்களது அயராத முயற்சியால் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை க.பொன்னி என்பவரின் சிறந்த சமூக பங்களிப்பைப் பாராட்டியும், தமிழ்நாடு அரசின் 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் இன்று வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.