தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று ஊட்டி பயணம்..!

மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று நலத்திட்ட பணிகளை களஆய்வு செய்து வருகிறார். மேலும் முடிவுற்ற வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்

இதன்படி நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் களஆய்வு பயணமாக அவர் இன்று (சனிக்கிழமை) செல்கிறார். முன்னதாக நீலகிரி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஊட்டி அருகே உள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரியும், மருத்துவமனையும் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் மருத்துவக்கல்லூரி ஏற்கனவே திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.

இதையொட்டி இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம் வந்து மதிய உணவு சாப்பிடுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு மாலை 6 மணிக்கு வரும் அவர், தமிழக விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். இதற்காக பிரமாண்ட மேடை அமைத்து அலங்கரிக்கப்பட்டு உள்ளது. திறப்பு விழாவையொட்டி நீலகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வண்ண விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விழா நடைபெறும் 2 இடங்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நடந்து முடிந்த பணிகளை திறந்து வைக்க உள்ளார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என்றார்.

போலீஸ் சூப்பிரண்டு நிஷா கூறுகையில், முதல்-அமைச்சர் வருகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நகரில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் முதல்-அமைச்சர் வருகையை அடுத்து, நீலகிரி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!