ஐ.பி.எல்2025 : சிறப்பு கியூ.ஆர். கோடு – சென்னை காவல்துறையில் அறிமுகம்..!

சேப்பாக் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டியில் சென்னை – மும்பை அணிகள் விளையாடுகின்றன.

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 4 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதனையடுத்து இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதில் சென்னையில் நடைபெற உள்ள இந்த போட்டியை காண ரசிகர்கள் பெருமளவில் படையெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ளூரில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதுபோக சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனிக்கு சென்னை மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் ரசிகர்கள் உண்டு. இதனால் இந்த போட்டியை காண பல மாநில ரசிகர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ரசிகர்களுக்கு ஏற்கனவே சென்னை மாநகரம் பல சலுகைகளை வழங்கியுள்ளது. போட்டியை நேரில் காண செல்லும் ரசிகர்கள் ஸ்பான்சர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை பெருநகர காவல் துறை, ‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு’ என்ற நவீன வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 23.03.2025 முதல் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு’ என்ற நவீன வசதி சென்னை பெருநகர காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் பொதுமக்கள் கிரிக்கெட் போட்டியை காணவரும்போது, தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இந்த QR குறியீடு மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம். காவல்துறை உடனடியாக பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுப்பார்கள்” என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!