புதுச்சேரி: குடிநீர் பாதிக்கப்பட்டுள்ள நகரப்பகுதிகளில் வீடுதோறும் 20 லிட்டர் சுத்திகரிப்பட்ட குடிநீர் கேன் இலவசமாக தரும் திட்டம் தமிழ் புத்தாண்டில் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது இன்று சுயேட்சை எம்எல்ஏ நேரு, திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆகியோர், “நகரப்பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு பல மடங்கு உயர்ந்துள்ளதால் அந்த குடிநீர் உகந்ததாக இல்லை. ஆனால் அந்த நீரே மக்கள் குடிக்க விநியோகிக்கப்படுகிறது. ” என்று குற்றம் சாட்டி கேள்வி எழுப்பினர்.
அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பதிலளிக்கையில், “புதுச்சேரி குடிநீருக்கு நிலத்தடி நீரை நம்பியுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நீரில் உவர்ப்பு தன்மை அதிகரித்துள்ளது.
இதை போக்க உவர்ப்பு தன்மை அதிகம் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்படும் நீர், அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்படும் நீரையும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் கலந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.” என்றார்.
அதற்கு எம்எல்ஏ நேரு, “குடிநீர் குடிக்க உகந்ததாக இல்லை. அதனால் மக்கள் பல வியாதிகளால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பல நோய்களுக்கு குடிநீர் சரியாக இல்லாததும் காரணம்.” என்றார்.
இதையடுத்து அமைச்சர் லட்சுமி நாராயணன், “குடிநீர் பாதிக்கப்பட்டுள்ள நகரப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் வரும் தமிழ் புத்தாண்டில் தொடங்குகிறது, பட்டியல் தயார் செய்துள்ளோம். அதன் விவரத்தை தொகுதி எம்எல்ஏவிடம் தருவோம்.” என்று தெரிவித்தார்.