திரைப்பயணமா?, அரசியல் பயணமா? இதில் எதை நடிகர் வடிவேலு கையில் எடுக்கப்போகிறார்.
‘வைகைப்புயல்’ என்ற அடைமொழியுடன் சினிமாவில் உச்ச காமெடி நடிகராக வலம்வந்த வடிவேலு, தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தி.மு.க.வில் அவர் இணையவில்லை என்றாலும், நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த அவர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
குறிப்பாக, தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்தை பற்றி மேடைக்கு மேடை வசைபாடினார். ஆனால், அந்த தேர்தல் முடிவு வடிவேலுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்தது. அதுவரை ஆட்சியில் இருந்த தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட வர முடியாத நிலைக்கு படுதோல்வியை சந்தித்தது. அ.தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவராக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பொறுப்பேற்றார்.
தேர்தல் முடிவால் கதிகலங்கிப்போன நடிகர் வடிவேலு, 10 ஆண்டு காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கிக்கிடந்தார். இந்த இடைப்பட்ட நேரத்தில், சினிமாவில் காமெடிக்கான அவரது இடத்தை பல இளம் காமெடியர்கள் பங்கு போட்டுக்கொண்டனர்.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த ‘மாமன்னன்’ படத்தில் மூலம் வடிவேலு மீண்டும் சினிமாவில் நுழைந்தார். அதன்பிறகு, கடந்த ஆண்டு (2024) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் வடிவேலுவை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள தி.மு.க. முயற்சி மேற்கொண்டது. ஆனால், அவர் பின்வாங்கி விட்டார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 27-ந் தேதி சென்னை யானைக்கவுனியில் நடைபெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வடிவேலு, “2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார்” என்று கூறினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் அழைப்பின்பேரில் நடிகர் வடிவேலு இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிகிறது.
வருகின்ற சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் இறங்குவதால், விஜய்க்கு எதிரான தேர்தல் பிரசாரத்திற்கு வடிவேலுவை பயன்படுத்தலாமா? என்று தி.மு.க. யோசித்து வருவதாக தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் சென்னை பொதுக்கூட்டத்தில் வடிவேலு மேடையேற்றப்பட்டார் என்று தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. திரைப்பயணமா?, அரசியல் பயணமா? இதில் எதை நடிகர் வடிவேலு கையில் எடுக்கப்போகிறார் என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.