சைக்கிள் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! லைசன்ஸ் எல்லாம் தேவையே கிடையாது ஓட்டுவதற்கு
நைண்டி ஒன் (Ninety One) நிறுவனத்தில் இருந்து புதியதாக ‘எக்ஸ்.இ சீரிஸ்’ (XE Series) என்கிற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்துவரும் நிலையில், அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக நைண்டி ஒன் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எக்ஸ்.இ சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவை சேர்ந்த ஆல்பாவெக்டர் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமாக நைண்டி ஒன் விளங்குகிறது. நைண்டி ஒன் நிறுவனத்திற்கு சொந்தமாக இந்தியாவில் 500 நகரங்களில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை விற்பனை மையங்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை உலகம் முழுக்க வழங்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள நிறுவனங்களுள் நைண்டி ஒன் ஒன்றாகும்.
இத்தகைய நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றுள் புதியதாக எக்ஸ்.இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பாதுகாப்பு சம்பந்தமான பல தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இருப்பினும், அவற்றை காட்டிலும் எக்ஸ்.இ ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமாக சுட்டிக் காட்டப்படுவது அதன் ரேஞ்ச் ஆகும். அதாவது, நைண்டி ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு கிமீ பயணம் செய்ய வெறும் 15 பைசா மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மற்ற சிறப்பம்சங்களாக, BLDC மோட்டார், அதி-திறன்மிக்க பேட்டரி ஆப்ஷன்கள், விரைவாக சார்ஜ் ஆகக்கூடிய தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றை சொல்லலாம். மேலும், பயணத்தை சவுகரியமாக்கும் வகையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிநவீன சஸ்பென்ஷன் செட்-அப் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம்-இரும்பு பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 80கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது நைண்டி ஒன் நிறுவனம்.
இது இல்லாமல், ஈய அமில பேட்டரி ஆப்ஷனிலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். லித்தியம்-இரும்பு பேட்டரிக்கு 3 வருட உத்தரவாதமும், ஈய அமில பேட்டரிக்கு 1 வருட உத்தரவாதமும் வழங்கப்படும் என நைண்டி ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது. எக்ஸ்.இ சீரிஸ் ஆனது ஓர் குறை-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். அதாவது, இதில் அதிகப்பட்சமாகவே மணிக்கு வெறும் 25கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும். புதிய நைண்டி ஒன் எக்ஸ்இ சீரிஸ் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.27 ஆயிரத்து 999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஷோரூம் ஹேண்ட்லிங் உள்ளிட்ட கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை. ஸ்கூட்டருடன் கிடைக்கும் 4 ஆம்பியர் சார்ஜரின் மூலமாக 7- 8 மணிநேரத்தில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி விடலாம். டிரைவ்ஸ்பார்க் கருத்து: நைண்டி ஒன் எக்ஸ்.இ சீரிஸ் போன்ற குறை-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையில்லை. இதனாலேயே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிக பேர் வாங்குவர் என எதிர்பார்க்கிறோம். நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் ஓட்டுவதற்கு எக்ஸ்.இ சீரிஸ் போன்ற விலை குறைவான மற்றும் எடை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரே போதுமானது ஆகும்.
