தர்மபுரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் பல நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், தர்மபுரி அருகே பட்டாசு குடோனில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மல்லியம்பட்டி என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ள பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வெடித்து விபத்தில் 3 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த மூவரும் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.