சென்னையில் வருவாய் குறைவான பேருந்துகள் விடியல் பயணத்திற்கு மாற்றப்பட உள்ளன. சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 174 மாநகரப் பேருந்துகள் (( சிவப்பு நிற Express பேருந்துகள்)) விடியல் பயணத் திட்டப் பேருந்துகளாக மாற்றப்பட உள்ளன.
பயணியர் எண்ணிக்கையும், வருவாயும் குறைவாக உள்ள வழித்தட பேருந்துகள் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட உள்ளன. மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்றப்பட்ட பின்பு ஏற்கனவே இயங்கும் வழித்தடத்தில் இயக்காமல், கூட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில், தேவைக்கேற்ற வழித்தடங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நாள்தோறும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் உட்பட 3,232 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளாக 1500 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. சென்னை மாநகர் பேருந்துகளில் பெண் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விடியல் பயணத்திட்டப் பேருந்துகளின் பயணியர் எண்ணிக்கையில் பெண் பயணியர் எண்ணிக்கை சராசரியாக 63 விழுக்காடாக உள்ளது.