அ.தி.மு.க.வில் மீண்டும் இணையத் தயார் – ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு..!

2026-ல் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வாழ்வு இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

2026-ல் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வாழ்வு.. இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வுதான். எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறோம்.

அமித்ஷா ஒன்றாக இருக்குமாறு எவ்வளவோ சொன்னார். எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாததன் விளைவு தான் இதெல்லாம். தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

செங்கோட்டையன் விசுவாசமானவர்… எந்த நிலையிலும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் அவர். செங்கோட்டையன் மீது எந்த அதிருப்தியும் எங்களுக்கு இல்லை.

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் உரிமை கோர முடியாது. மற்றபடி எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறாரா என்பதற்கு செங்கோட்டையன்தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்த இயக்கம் யாரால் நிறுவப்பட்டது, யாரால் உருவாக்கப்பட்டது. 50 ஆண்டுகாலம் இரண்டு தலைவர்களும் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய இயக்கம் இந்த இயக்கம். இதில் விதி 45ன் படி, அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் பொதுச்செயலாளார் பதவி தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதியை யாராலும், எந்த சூழ்நிலையாலும் மாற்ற முடியாது.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த விதியின் படிதான் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் ஆனார். ஆனால் இப்போது பொதுச்செயலாளர் தேர்வு எப்படி நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். பொதுக்குழு மூலமாக சட்டவிதியை திருத்தவோ, ரத்து செய்யவோ கூடாது என்ற அ.தி.மு.க. விதியை மீறி செயல்பட்டுள்ளனர்.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவரை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டதைத்தான் தவறு என்று நாங்கள் கோர்ட்டில் வழக்காடி கொண்டிருக்கிறோம். அதை தீர்வுக்கு கொண்டு வருகிற பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது என்று சொன்னோம்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னார். கோர்ட்டுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ. அதே அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கும் உள்ளது என்று ஒரு தீர்ப்பு உள்ளது’

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *