பிரதமர் மோடியுடன் ஆலோசிக்க எலான் மஸ்க் திட்டம்..!

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை தொடங்கும் திட்டம் பற்றி பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் பேசக்கூடும் என கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் இணை தலைமையேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதன்பின்னர், பாரீஸ் நகரில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில், அந்நாட்டு அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி ஒன்றாக பங்கேற்றார்.

இந்த உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் ஓட்டலுக்கு திரும்பிய பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசினார். இதேபோன்று, பிரதமர் மோடி பாரீஸ் நகரில் நடந்த தலைமை செயல் அதிகாரிகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பிரான்ஸ் உடனான வலுவான நட்புறவு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தி இருப்பது பற்றி பேசினார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதன்படி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையையும் சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சுந்தர் பிச்சை, இந்தியாவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டு வர கூடிய வியக்கத்தக்க வாய்ப்புகளை பற்றியும் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றத்திற்காக நாம் நெருங்கி பணியாற்றுவதற்கான வழிகளை பற்றியும் விவாதித்தோம் என கூறினார்.

பிரான்ஸ் சுற்றுப்பயணம் முடிந்ததும், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். இன்று காலை அந்நாட்டுக்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடியை, எக்ஸ் வலைதளம் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் இன்று நேரில் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில், தெற்காசியாவில், குறிப்பிடும்படியாக இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை தொடங்கும் திட்டம் பற்றி பேசப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் தடம் பதிக்க விரும்புகிறது. அலைக்கற்றை ஏலம் விடுவதற்கு பதிலாக அவற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மஸ்க் யோசனை தெரிவித்து உள்ளார். இதனை இந்திய அரசும் ஏற்று கொண்டுள்ளது என தெரிகிறது.

எனினும், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் உரிமத்திற்கான விண்ணப்பம் இன்னும் மறுஆய்வு செய்யப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. இதேபோன்று, பிரதமர் மோடி மற்றும் மஸ்கிற்கு இடையே, இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் வருவதற்கான ஆலோசனை நடைபெறுவது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எனினும், இந்தியாவில் இருந்து மின்சார வாகனங்களுக்கான பொருட்களை வாங்குவது அதிகரித்து உள்ள சூழலில், இந்த சந்திப்பில் அதுபற்றி விவாதிக்கப்படலாம் என்றும் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *