தைப்பூச திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

காலை 6 மணிக்கு மேல் 6.30-க்குள் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரமாகி, தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் சாலை வழியாக ஏராளமான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர் நகர் பகுதியில் பாதயாத்திரை பக்தர்கள் சிரமமின்றி செல்ல போக்குவரத்து போலீசார் நெரிசலை சரிசெய்யும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதயாத்திரை பக்தர்கள் நீண்ட நேரம் தரிசன வரிசையில் நிற்காமல், எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது நெல்லை சாலையிலும், தூத்துக்குடி சாலையிலும் நடந்து வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நகரின் எல்கை பகுதியில் வைத்து கையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள பாதயாத்திரை பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தவுடன் தனி பாதையில் சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *