கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) விவசாயிகளின் பயன்பாட்டிற்க்காக 19 புதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ளது. TNAU-ன் கீழ் செயல்படும் 18 கல்லூரிகள், 42 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15
வேளாண் அறிவியல் நிலையங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ற புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன.
இதன் விளைவாக, ஆண்டுதோறும் புதிய ரகங்கள் வெளியிடப்படுகின்றன. இதுவரை, 929 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ரகங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த ஆண்டு வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 19 புதிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் கோவை மலர்க்கண்காட்சி
மற்றும் இந்த ஆண்டுக்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய துணைவேந்தர் கீதாலட்சுமி,
வேளாண் பயிர்களில், நெல்லில் பி.பி.டி., ரகத்தை விட 15 சதவீதம் கூடுதல் மகசூல் தரும் கோ 59 ரகம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது ஹெக்டருக்கு 5,900 முதல் 6500 கிலோ வரை மகசூல் தரும் சன்ன ரகம். மேலும், ஏ.டி.டீ., 56; ஏ.டி.டீ., 60 ஆகிய நெல் ரகங்களும் அறிமுகம் செய்யப்படுகிறது.
மானாவாரி, இறவை என இரு வகைகளிலும் பயிர் செய்யும் கோஎச்(எம்) 12 மக்காச்சோளம். இது மானாவாரியில் ஹெக்டருக்கு 6,500 கிலோவும் மானாவாரியில் 8,200 கிலோவும் மகசூல் தரும். மேலும், வம்பன் 12 உளுந்து; சி.டி.டீ 1 நிலக்கடலை; வீரிய ஒட்டு ஆமணக்கு ஒய்ஆர்சிஎச் 3; கோ 4 தக்காளி; வீரிய ஒட்டுரக வெண்டை கோ(ஹெச்) 5;
அதீத காரத்தன்மை கொண்ட கோ 5 மிளகாய்; சாம்பல் பூசணி பி.எல்.ஆர்., 1; குட்டை ரகமான காவேரி வாமன் வாழை; அவகோடா டிகேடி 2; ஏற்றுமதிக்கு உகந்த எஸ்.என்கே.எல்.,1 எலுமிச்சை,; தோவாளை 1 அரளி; வெள்ளை ஈக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட ஏ.எல்.ஆர்.,4 தென்னை;
பி.பி.ஐ.,1 ஜாதிக்காய், சர்க்கரை நோய் மூலிகைச் செடி சிறுகுறிஞ்சான் கோ 1; கேகேஎம்1 சிப்பிக் காளான் ஆகிய 19 ரகங்களை வெளியிடுகிறோம். இவை அதிக மகசூல் தருவதோடு, அனைத்துப் பருவநிலைகளையும் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டவை.
தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் ஏழாவது மலர்கண்காட்சி, நாளையிலிருந்து பிப்.12ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. அனைவரும் கண்டிப்பாக இதில் கலந்து கொள்ள வேண்டும். இதில் பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் 150 ரூபாயும், குழந்தைகளுக்கு ஐம்பது
ரூபாயும் கட்டண வசூலிக்கப்படும். 25 ஏக்கரில் இந்த மலர் கண்காட்சி நடத்தப்படுவதால், ஒரே நேரத்தில் 20 ஆயிரம் மக்கள் இந்த கண்காட்சியை கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், மக்கள் இளைப்பாறுவதற்கான இடமும் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தகுந்த பாதுகாப்பு
ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.