இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளின் ரெப்போ ரேட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின் ரெப்போ விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக ரெப்போ ரேட் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா வெளியிட்டுள்ளார்.
ரெப்போ ரேட் குறைவால், வங்கிகளில் வாங்கிய வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடுத்த நிதி ஆண்டில் 6.7 சதவிகிதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். அந்த வகையில் ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் இன்று வெளியிட்டு இருக்கிறார்.
பொதுவாக ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். அதேபோல குறையும் போது, வட்டி விகிதமும் குறையும். நீண்ட காலத்திற்கு பிறகு வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து இருப்பது, மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.