டெல்லியில் நாளை வாக்கு எண்ணிக்கை..!
டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. நாளை பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவந்துவிடும்
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை வென்றது. பா.ஜனதா கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. 2020-ம் ஆண்டு தேர்தலைப் போலவே 2025-ம் ஆண்டு தேர்தலிலும் மேற்கண்ட 3 கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது. கடந்த ஒரு மாதகாலமாக அந்த கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டன.
இதனைத்தொடர்ந்து நேற்று முன் தினம் வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. நண்பகல் 12 மணிக்குள் வெற்றி முன்னணி நிலவரம் ஏறத்தாழ உறுதி செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு கட்டுப்பாட்டு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஏறத்தாழ அனைத்து கருத்துக்கணிப்புகளும் பா.ஜனதா கூட்டணியே 36 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளன. கருத்துக்கணிப்புகளின் படி டெல்லியில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும? அல்லது கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஆம் ஆத்மியே மீண்டும் வெற்றியை ருசிக்குமா? என நாளை பிற்பகலுக்குள் தெரியவந்துவிடும்.