இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)

ஆழ்நிலைத் தியானத்தை உலகமெங்கும் பரவச் செய்த, உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலைவர் மகரிஷி மகேஷ் யோகி (Maharishi Mahesh Yogi) காலமான தினம்

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் அருகேயுள்ள சிச்லி என்ற கிராமத்தில் பிறந்தவர் (1917). மகேஷ் பிரசாத் வர்மா என்பது இவரது இயற்பெயர். பள்ளிப் படிப்புக்குப் பிறகு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலை, இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அறிவியல் பயின்றாலும் இவர் மனம் ஆன்மிகத்திலேயே மூழ்கியிருந்தது. 1939-ம் ஆண்டு பிரம்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீடரானார். தன் சீடருக்கு அவர் ‘பால் பிரம்மச்சாரி மகேஷ்’ என்று பெயர் சூட்டினார். 12 ஆண்டுகள் அவரிடம் தியானம், யோகம் உள்ளிட்டவற்றைக் கற்றார். 1953-ல் இமயமலைச் சாரலில் ஆசிரமம் அமைத்து, ஆழ்நிலைத் தியானத்தை போதித்து வந்தார். 1957-ல் சென்னையில் தியான மையம் தொடங்கினார்.

மன வலிமையாலும் பிரார்த்தனையாலும் எத்தகைய அற்புதங்களையும் சாதிக்க முடியும் என்பதை மக்களிடம் எடுத்துச்சொன்னார். ‘மகரிஷி’ என்று அழைக்கப்பட்டார். ரிஷிகேஷில் சர்வதேச ஆசிரியர் பயிற்சிப் பாடத் திட்டத்துக்கான அமைப்பைத் தொடங்கினார்.

1958-ல் அமெரிக்கா சென்றார். சாமானியர்கள் முதல் மிகவும் பிரபலமானவர்கள் வரை பலரும் இவரது சீடர்களானார்கள். இதனால் உலகம் முழுவதும் இவர் புகழ் பரவியது. அகில உலக தியான ஸ்தாபனம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அமெரிக்காவில் தனது ஆன்மிக மீளுருவாக்க இயக்கம் பிரபலமடைந்த பிறகு, ஐரோப்பா முழுவதும் இதைப் பரவச் செய்வதற்காக பயணம் மேற்கொண்டார். 1959-ல் லண்டனில் ஆன்மிக மீளுருவாக்க இயக்க மையத்தைத் தொடங்கினார். கனடா, டென்மார்க், ஜெர்மனி, பிரிட்டன், மலேயா, நார்வே, ஆஸ்திரேலியா, கிரேக்கம், இத்தாலி, கிழக்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இவரது தியான மையங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவிலும் நிறைய நிர்வாக மையங்களைத் தொடங்கி, ஆழ்நிலை தியான உத்திகளைக் கற்றுத் தந்தார்.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட ஏராளமான நாடுகளிலும் ஆழ்நிலை தியான மையங்கள் தொடங்கப்பட்டன. அமெரிக்காவில் மட்டும் 1998-ம் ஆண்டுக்குள் 1000 தியானப் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. உலகம் முழுவதும் சுமார் 70 வகையான தியான நிலைகளைப் போதித்தார். சிறந்த எழுத்தாளரும்கூட.

‘சயின்ஸ் ஆஃப் பீயிங் அன்ட் தி ஆர்ட் ஆஃப் லிவிங்: டிரான்சென்டென்டல் மெடிடேஷன்’, ‘மெடிடேஷன்ஸ் ஆஃப் மகரிஷி மகேஷ் யோகி’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். அன்றாட வாழ்வில் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாழ்க்கை முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

1971-ல் அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் ‘மகரிஷி யுனிவர்சிட்டி ஆஃப் மேனேஜ்மென்ட்’ என்ற உயர் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. இங்கு ஆழ்நிலை தியானம், யோகம் ஆகியவற்றுடன் பாடத் திட்டங்களும் இணைக்கப்பட்டன. 1990-ல் நெதர்லாந்து சென்ற இவர், அங்கேயும் ஆசிரமம் அமைத்து தியானம், யோகம், பிரார்த்தனை குறித்து போதித்து வந்தார்.

நவீன அறிவியலுடன் வேத அறிவியலை இணைப்பதற்கான பல கல்வி நிறுவனங்களைப் பல்வேறு நாடுகளில் தொடங்கினார். மனித குலத்தை அமைதி மற்றும் நல்லிணக்கம் நோக்கி வழிகாட்டும் குருவாகப் போற்றப்பட்ட மகரிஷி மகேஷ் யோகி 2008-ம் ஆண்டு, இதே பிப் 5இல் 91-வது வயதில் மறைந்தார்.

பிளாஸ்டிக் என்றழைக்கப்படும் நெகிழி கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட தினம். “பிளாஸ்டிகோஸ்” என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருட்கள் நெகிழிப் பொருள்கள் எனப்படும். அதற்கு முன்னரே பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டிருந்தாலும் பெல்ஜிய ரசாயன விஞ்ஞானி லியோ பேக்லேன்ட் என்பவர்தான் வர்த்தகப் பயன்பாட்டுக்குரிய வகையில் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தார். காலை பல்துலக்கும் துலப்பானிலிருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் பெரும்பாலானவை நெகிழிப் பொருள்கள் தான். பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன.

இங்கிலாந்துக் கடற்படையைச் சேர்ந்த ப்ளென்ஹீம், ஜாவா ஆகிய கப்பல்கள், இந்தியப் பெருங்கடலிலுள்ள ரோட்ரிக்ஸ் தீவுக்கருகில் மறைந்து போன நாள் இச்செய்தி இந்தக் கப்பல்களைப் பற்றியதல்ல. பொதுவாகக் கடலில் காணாமல் போகும் கப்பல்களைப் பற்றியது! கம்பியில்லாத் தந்தியின் வரவுக்குமுன், நடுக்கடலில் கப்பல்கள் மோதிக்கொள்ளுதல், மோசமான காலநிலை, திடீரென்று எழும் பேரலைகள் உள்ளிட்ட காரணங்களால் கப்பல்கள் காணாமற்போவது என்பது வழக்கமாக நடப்பதுதான். கப்பல்களை மூழ்கடிக்கும் அளவுக்குத் திடீரென்று எழும் பேரலைகள் போக்கிரி அலைகள்(ரோக் வேவ்ஸ்) எனறழைக்கப்படுகின்றன. காணாமற்போன கப்பல், நீண்ட காலத்திற்குக் கண்டுபிடிக்க முடியாமற்போனால், மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்படும். கப்பலில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் இறந்துபோவது, ‘லாஸ்ட் வித் ஆல் ஹேண்ட்ஸ்’ என்று குறிப்பிடப்படுகிறது. கப்பலில் இருந்து தப்பியவர்களோ, கப்பல் மூழ்கியதைப் பார்த்தவர்களோ இல்லாத நிலை, கப்பலின் மறைவுகுறித்த பல்வேறு கட்டுக்கதைகளுக்கு அடிப்படையாகி விடுகிறது. இவ்வாறு நிலவும் நம்பிக்கைகள் ‘மாலுமிகளின் மூடநம்பிக்கைகள்’ என்றழைக்கப்படுகின்றன. கப்பலில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது, சூரியன் சிவப்பாக உதித்தால் ஆபத்து என்று இத்தகைய மூடநம்பிக்கைகள் ஏராளமாக உள்ளன. அதைப் போலவே, குறிப்பிட்ட சில இடங்களில் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்படுவது, மனித அறிவிற்கு அப்பாற்பட்ட(அமானுஷ்ய!) சக்திகள் நிலவுவதாக அப்பகுதிகளைக் கருதி, அஞ்சவும் செய்தன. அவ்வாறானவற்றில் பெர்முடா முக்கோணம் பெரிதும் அறியப்பட்டதாகும். உலகம் முழுவதும் இவ்வாறு நம்பப்படும் 12 பகுதிகள் தொகுப்பாக ‘தீமையின் சுழல்கள்’ அல்லது ‘சாத்தானின் இடுகாடுகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. இவை, புவியில் சீரான அமைப்பில் அமைந்துள்ளதாகவும் நம்பப்படுகின்றன. கம்பியில்லாத் தந்தியின் வரவுக்குப்பின் ஆபத்துகளில் உதவி கோர முடிந்ததுடன், அடுத்தடுத்து ஏற்பட்ட தொலைத்தொடர்பு முன்னேற்றங்கள் காணாமல் போதல் விகிதத்தைக் குறைத்திருந்தாலும், இன்றுவரை காரணம்கூற முடியாத விபத்துகளும், விமானங்கள் கூட காணாமற்போவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக நீர்மூழ்களில் தகவல் தொடர்பு வசதிகள் குறைவு என்பதால், நீருக்கடியில் நிகழும் இடர்களில் அவை அதிகம் காணாமற்போகின்றன. தற்காலத்திய சோனார் முதலான தொழில்நுட்பங்கள், பெரும்பாலான மூழ்கிய கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்டறிவதைச் சாத்தியமாக்கினாலும், இன்னும் கண்டுபிடிக்க முடியாதவையும் ஏராளமாக உள்ளன. கண்டுபிடிக்கப்பட்டவற்றிலும், மதிப்புமிக்க பொருட்களைக் கொண்டவை மட்டும்தான் மீட்கப்படுகின்றன.

உலகில் இதுவரை கிடைத்தவற்றிலேயே மிகப்பெரியதான, வெல்கம் ஸ்ட்ரேஞ்சர் என்று பெயரிடப்பட்ட, தங்கக்கட்டி ஆஸ்திரேலியாவில், மொலியாகுல் என்ற இடத்தில் கிடைத்த நாள் சுமார் இரண்டடி நீளமும், ஓரடி அகலமும் கொண்ட, இந்த 97.14 கிலோ தங்கக்கட்டி, வண்டல்மண்ணுக்கடியில் வெறும் ஓரங்குல ஆழத்திலேயே கிடைத்தது. அக்காலத்தில் இவ்வளவு பெரிய தங்கக்கட்டியை எடைபோட கருவிகள் இல்லாததால், இதனை மூன்று துண்டுகளாக உடைத்து எடைபோட்டார்களாம். ஆஸ்திரேலிய மத்திய வங்கி இதற்கு 9 ஆயிரம் பவுண்டுகள் தரத்தயாராக இருந்தாலும், உருக்கி லண்டனுக்குக்குக் கொண்டு வந்த இதைக் கண்டெடுத்தவர்களுக்கு, அங்கு 9,381 பவுண்டுகள் (தற்போதைய மதிப்பில் ரூ.10.40 கோடி) கிடைத்தன. தங்கத்தின் மதிப்பில் கணக்கிட்டால் இதன் தற்போதைய மதிப்பு ரூ.28 கோடிக்கும் அதிகம். இந்தத் தங்கக்கட்டி கிடைத்த இடத்திற்கருகில், 1897இல் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டதுடன், கிடைத்தபோதிருந்த அதன் வடிவத்தின் மாதிரி ஒன்றும் உருவாக்கப்பட்டு, மெல்போர்ன் நகர அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் அவசியமின்றி, நேரடியாகத் தங்கமாகவே கிடைப்பவை நக்கெட் என்றழைக்கப்படுகின்றன. நீரில் அடித்து வரப்படும்போது, தங்கத்துகள்கள் ‘கோல்டு(குளிர்) வெல்டிங்’ என்ற முறையில் ஒன்றிணைந்து கட்டியாக உருவாவதால், பொதுவாக இவை வண்டல்மண் பகுதிகளில்தான் காணப்படுவதுடன், உராய்வினால் பளபளப்பாகவும் காணப்படுகின்றன. அரிதாக, உலோகத்தாது வண்டல்களிலும், பாறையிடுக்குகளிலும் தங்கம் தனியாகக் கிடைப்பதுமுண்டு. இயற்கையாகக் கிடைக்கும் தங்கக்கட்டிகள் பொதுவாக 20.5-22 காரட் தூய்மையுடன் கிடைத்தாலும், ஆஸ்திரேலியாவில் கிடைப்பவை பொதுவாக 23 காரட் தூய்மையுடன் கிடைக்கின்றன. இயற்கையாகக் கிடைத்த வடிவத்திலேயே இன்றும் பாதுகாக்கப்படுகிறவற்றில் மிகப்பெரியது, பிரேசிலில் 1983இல் கிடைத்த கனா நக்கெட் என்னும் 60.8 கிலோ எடையுள்ள தங்கக்கட்டியாகும். இதனுடன் மொத்தம் 165 கிலோ தங்கக்கட்டிகள் கிடைத்தன. எடுப்பதற்காகத் தோண்டும்போதுதான் உடைந்ததால், இதுதான் உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டி என்று கோரப்படுவதும் உண்டு. 1980இல் ஆஸ்திரேலியாவில் கிடைத்த 27.2 கிலோ தங்கக்கட்டியே மெட்டல் டிட்டெக்டர்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கக்கட்டியாகும்.

டைபீ தீவு நடுவாண் மோதல் என்று குறிப்பிடப்படும் விபத்து நிகழ்ந்து, ஓர் அணுக்குண்டு காணாமல் போன நாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படை விமானங்கள் இரண்டு, நடுவானில் மோதிக்கொண்டன. இவற்றில் ஒரு விமானத்தில், 12 அடி நீளமும், மூன்றரை டன் எடையும் கொண்ட அணுக்குண்டு இருந்தது. இந்த குண்டு 400 கிலோ மிகுந்த செறிவூட்டப்பட்ட யுரேனியமும், பிற மரபுசார் வெடிமருந்துகளும் கொண்டதாகும். மோதலில் இது பொருத்தப்பட்டிருந்த விமானம் பாதிப்படைந்ததால், விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக குண்டு கழற்றிவிடப்பட்டது. குண்டு கடலில் விழுந்துவிட, விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. மறுநாள் குண்டைத் தேடும் பணியில், 100 கடற்படை வீரர்கள், தனித்தனி சோனார் கருவிகளுடன் ஈடுபடுத்தப்பட்டனர். 70 நாட்களுக்குப்பின், ஏப்ரல் 16 அன்று, குண்டைத் தேடுதல் பணி தோல்வியில் முடிந்ததாக ராணுவம் அறிவித்துவிட்டது. இந்த நிகழ்வு மட்டுமின்றி, பலமுறை அணுக்குண்டுகளையும், பிற ஆயுதங்களையும் அமெரிக்கா தொலைத்திருக்கிறது. அணுக்குண்டுகளைத் தொலைத்த நிகழ்வுகள் ‘உடைந்த அம்பு’ (ப்ரோக்கன் ஏரோ) என்று குறிப்பிடப்படுகின்றன. 2013வரை இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளவை 32 நிகழ்வுகளாகும். அதாவது, 32 முறை அணுக்குண்டுகளை அமெரிக்க ராணுவம் தொலைத்திருக்கிறது. அமெரிக்கக் கடற்பகுதியிலேயே காணாமல்போன இந்த குண்டு மட்டுமின்றி, ஜப்பான் கடற்பகுதியில் 1965 டிசம்பர் 5 அன்று காணாமல்போன ஒரு மெகாடன் குண்டும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. அப்படி ஒரு குண்டு காணாமல்போன செய்தியையே 1989வரை பெண்ட்டகன் மறைத்துவிட்டது. 1956 மார்ச் 10 அன்று காணாமல்போன அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்றில் இருந்த இரு அணுக்குண்டுகள் குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை. மற்ற நாடுகள் (இன்று வடகொரியா) அணு ஆயுதங்கள் உருவாக்கினால் ஆபத்து என்று அலறுகிற அமெரிக்கா, தான் தொலைத்த அணு ஆயுதங்களால் உலகிற்கு ஏற்படுத்தியுள்ள ஆபத்துதான் உண்மையில் மிக அதிகம்!

ரொனால்டோ பிறந்த தினம் இன்று. 1985 பிப்ரவரி 5 ஆம் தேதி பிறந்த இவர் கால்பந்து ஆட்டத்தில் இப்போது அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். அவர் ஏழை, ஊனமுற்ற, அனாதை குழந்தைகளுக்காக நிறைய உதவிகள் செய்து வருகிறார் .. save the nation, UNICEF, World Vision போன்ற அமைப்புகளுக்கு Ambassador ஆக இருக்கும் இவர், அதன் மூலம் வரும் வருவாய் அனைத்தையும் ஏழை குழந்தைகள் உதவிக்காக கொடுக்கிறார் .. ஆஸ்கார்க்கு இணையாக கால்பந்தில் ஒரு விருது கொடுக்கப்படும். அதை ரொனால்டோ 5 முறை வாங்கி உள்ளார். அவை அனைத்தையும் ஏலத்தில் விட்டு அதன் மூலம் வந்த பணத்தையும் அந்த குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். ரொனால்டோ வாங்கிய தங்க காலணியையும் ஏலத்தில் விட்டு அந்த பணத்தையும் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.

ஹில்டன் சகோதரிகள் பிறந்த தினம் இன்று. டெய்சி மற்றும் வயலெட் ஹில்டன் (Daisy Hilton and Violet Hilton, 5 பிப்ரவரி 1908 – 4 ஜனவரி 1969) பிறப்பிலேயே உடல்ரீதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையராவர். இருவருக்கும் ஒரே குருதிச் சுற்றோட்டத் தொகுதியும், நரம்புத் தொகுதியும் இருந்தது. இதன் காரணமாக, வேதனைகளையும் சந்தோசங்களையும் அவர்கள் ஒன்றாகவே உணர்ந்து கொண்டனர். தாயாரின் பொருளாதார நிலைமை காரணமாக, இவர்கள் இருவரும் இளவயதிலேயே வேறொரு பெண்ணுக்கு விற்கப்பட்டனர். அப்பெண் இவர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நிகழ்த்திப் பணம் ஈட்டினர்.

அப்பல்லோ 14 விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய நாள் -பிப்.5- 1971 அப்பல்லோ 14 விண்கலம்,அமெரிக்காவால் சந்திரனில் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் 1971-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி அலன் ஷெப்பர்ட், ரூசா, எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது. அமெரிக்காவால் சந்திரனில் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் 1971-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி அலன் ஷெப்பர்ட், ரூசா, எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...