இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 03)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 03)

முதன் முதலில் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த யோகான்னசு கூட்டன்பர்கு நினைவு தினம்.

இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது. இவர் கண்டறிந்த அச்சு இயந்திரம் மறுமலர்ச்சிக்கும், கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் பரவலுக்கும், அறிவொளிக் காலம் வளர்ச்சிக்கும், அறிவியல் புரட்சிக்கும், இயந்திரம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கும், பேரளவில் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி பரவவும் உதவியது. அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் அச்சிடப்படும் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டது. அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.

1509 – ஆசியக் கடற்பகுதியில் ஐரோப்பிய ஆதிக்கத்தைத் தொடங்கிவைத்ததால், உலக வரலாற்றின் மிகமுக்கியக் கடற்போர்களில் ஒன்றாக் கருதப்படுகிற, டையூ சண்டை நடைபெற்ற நாள் வெனிஸ் குடியரசின் உதவியுடன் போரிட்ட, குஜராத் சுல்தான், கோழிக்கோடு சாமூத்திரி, எகிப்து மாம்லுக் சுல்தான் ஆகியோரின் கூட்டணிப்படைகளை, போர்த்துகீசியப் படைகள் தோற்கடித்தன. மேற்கு ஆஃப்ரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட வணிகம்போல, இந்தியாவுடனான வணிகம் போர்த்துகீசியர்களுக்கு எளிதாக இல்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திவந்த அராபிய வணகர்களால் போர்த்துகீசியர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதுடன், கோழிக்கோட்டில் 50-70 போர்த்துகீசியர்கள் படுகொலையும் செய்யப்பட்டனர். கொச்சி குறுநில அரசரின் அழைப்பின்பேரில், இம்மானுவேல் கோட்டையை அமைத்துக்கொண்ட போர்த்துகீசியர்கள், ஐரோப்பிய ஏற்றுமதிக்காக மணமூட்டிகளை விளைவிக்கும் கோழிக்கோட்டின் தோட்டங்களையும், இந்தச் சரக்குகளுடன் சாமூத்திரியின் கப்பல் ஒன்றையும் அழித்தனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட டையூ சண்டையில் வெற்றியடைந்ததால், இந்தியாவுடனான வணிகத்தில் போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய ஆதிக்கம், அடுத்த நூறாண்டுகளுக்கு நீடித்தது. ஐரோப்பாவிலிருந்து இந்தியா, சீனாவை நிலவழியாக அடையும் பண்டைய பட்டுப்பாதை, கிரேக்க-ரோம உலகினர் பயன்படுத்திய நறுமணப்பாதை, பின்னர் உருவான மணமூட்டிகள் பாதை ஆகியவை, ஒட்டோமான் பேரரசினால் முடக்கப்பட்ட நிலையில், வாஸ்கோடகாமா கண்டுபிடித்த, நன்னம்பிக்கைமுனை வழியான கடற்பாதை குறித்த தகவல்களைப் போர்த்துகீசியர்கள் ரகசியமாகப் பாதுகாத்து, இந்தியாவுடனான வணிகத்தில் தனியுரிமையுடன் விளங்கினர். 1583-88இல் கோவாவிலிருந்த போர்த்துகீசிய ஆளுனருக்குச் செயலாளராகப் பணிபுரிந்த, லின்ஸ்சோட்டன் என்ற டச்சுக்காரர் இந்தத் தகவல்களைத் திருடிச் சென்றார். இதைத் தொடர்ந்து 1605இல் டச்சுக்காரர்களும், தொடர்ந்து ஆங்கிலேயர்களும் இந்தியாவிற்கு வந்தனர். 1612 நவம்பர் 29-30இல், குஜராத்தின் சூரத்துக்கு அருகிலுள்ள சுவாலி கிராமத்தில் நடந்த போரில் ஆங்கிலேயர்களிடம் போர்த்துகீசியர்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவுடனான வணிகத்தில் போர்த்துகீசியர்களின் தனியுரிமை நிலை முடிவுக்குவந்தது. சுவாலி போரைத் தொடர்ந்து, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்கிய சிறிய கடற்படையே, இன்றைய இந்தியக் கடற்படையின் தொடக்கமாகக் குறிப்பிடப்படுகிறது.

சந்திரனில் சோவியத் ரஷ்யாவின் ‘லூனா-9″ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய தினம் இன்று லூனா திட்டம் (Luna programme) என்பது சோவியத் ஒன்றியத்தினால் 1959 இலிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். அவற்றுள் லூனா 2 சந்திரனில் விழுந்த போதிலும் அது மேற்கொண்டு இயங்கவில்லை. 1966 ஜனவரி 31ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட லூனா 9 பிப்ரவரி 3ம் தேதி சந்திரனில் பத்திரமாக தரையிறங்கி வெற்றிகரமாக செயல்படத்துவங்கியது. சந்திரனின் மேற்பரப்பு குறித்தான பல்வேறு தகவல்களையும் புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியது. நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் சோதனை முயற்சிகளில் அமெரிக்காவும் போட்டியிட்ட போதிலும் ரஷ்யாவே இம்முயற்சியில் முதலில் வெற்றி பெற்றது. அதே ஆண்டு மே மாதம் அமெரிக்காவும் தனது சர்வேயர் 3 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் மீது இறக்கியது.

உட்ரோ வில்சன் நினைவு தினம் இன்று. 1856-ம் ஆண்டு முதல் 1924-ம் ஆண்டு வரை வாழ்ந்த உட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28-வது அதிபர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர், தத்துவவாதி மேலும், நியூ ஜெர்ஸியின் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். தனது உயர்ந்த சிந்தனையிலான கருத்தியல் மற்றும் சீர்திருத்த செயல்பாடுகளுக்காக பெரிதும் அறியப்படுகிறார். உலக நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர். சமாதான முயற்சிகளை மேற்கொண்டமைக்காக 1919-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார். சிறந்த அமெரிக்க அதிபர்களில் ஒருவராக, அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறார்.

வில்லியம் டி கூலிட்ஜ் நினைவு தினம்

மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய டங்ஸ்டனாலான கம்பியினைப் பயன்படுத்தி X-கதிர் கூலிட்ஜ் குழாய் அமைத்த வில்லியம் டி கூலிட்ஜ் நினைவு தினம் வில்லியம் டி கூலிட்ஜ் (Willaim D. Coolidge) அக்டோபர் 23, 1873ல் மாசாசூசெட்சிஸின், ஹட்சனுக்கு எனும் ஊருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் பிறந்தார். 1891 முதல் 1896 வரை மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்.ஐ.டி) மின் பொறியியல் பயின்றார். இரு ஆண்டுகள் அங்கு ஆய்வகத் துணைவராகப் பணிபரிந்தார். ஒரு வருடம் கழித்து, மேலதிக படிப்புக்காக ஜெர்மனிக்குச் சென்று லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நாடு திரும்பி 1899 முதல் 1905 வரை எம்ஐடியில் வேதியியல் துறையின் ஆர்தர் ஏ. நொயஸின் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தார். கூலிட்ஜ் 1905ல் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக வேலைக்குச் சென்றார். அங்கு அவர் சோதனைகளை மேற்கொண்டார். இழை மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய டங்ஸ்டனாலான மெல்லிய கம்பியினைப் பயன்படுத்தினார். டங்ஸ்டன் ஆக்சைடை சுத்திகரிப்பதன் மூலம், இழைகளாக எளிதில் இழுக்கக்கூடிய ‘டக்டைல் டங்ஸ்டன்’ ஐ உருவாக்கினார். 1911 ஆம் ஆண்டு தொடங்கி, ஜெனரல் எலக்ட்ரிக் புதிய உலோகத்தைப் பயன்படுத்தி விளக்குகளை சந்தைப்படுத்தியது, அவை விரைவில் GE இன் முக்கியமான வருமான ஆதாரமாக மாறியது. அவர் 1913 ஆம் ஆண்டில் இந்த ‘கண்டுபிடிப்புக்கு’ காப்புரிமைக்கு (அமெரிக்க # 1,082,933) விண்ணப்பித்துப் பெற்றார். இருப்பினும், 1928 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க நீதிமன்றம் தனது 1913 காப்புரிமை ஒரு கண்டுபிடிப்பாக செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்தது. 1913 ஆம் ஆண்டில் அவர் கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தார். எக்ஸ்ரே இயந்திரங்களில் பயன்படுத்த மேம்பட்ட கேத்தோடு கொண்ட எக்ஸ்ரே குழாய். இது ஆழமான அமர்ந்த உடற்கூறியல் மற்றும் கட்டிகளை இன்னும் தீவிரமாக காட்சிப்படுத்த அனுமதித்தது. கூலிட்ஜ் குழாய், டங்ஸ்டன் இழைகளைப் பயன்படுத்தியது. அப்போதைய புதிய மருத்துவ சிறப்பு கதிரியக்கவியலில் ஒரு பெரிய வளர்ச்சியாக இருந்தது. அமெரிக்க காப்புரிமை 1913 இல் தாக்கல் செய்யப்பட்டது மற்றும் 1916 இல் அமெரிக்க காப்புரிமையாக 1,203,495 வழங்கப்பட்டது. அதன் அடிப்படை வடிவமைப்பு இன்னும் பயன்பாட்டில் உள்ளது. முதல் சுழலும் அனோட் எக்ஸ்ரே குழாயையும் கண்டுபிடித்தார். அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் 1914 ல் கூலிட்ஜுக்கு தி ரம்ஃபோர்ட் பரிசை வழங்கியது. கூலிட்ஜுக்கு 1927 ஆம் ஆண்டில் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிகல் இன்ஜினியர்ஸ் எடிசன் பதக்கம் வழங்கப்பட்டது. 1926 ஆம் ஆண்டில் இந்த மதிப்புமிக்க விருதை அவர் நிராகரித்தார். அவருக்கு 1926ல் ஹோவர்ட் என். பாட்ஸ் பதக்கமும், 1927ல் லூயிஸ் ஈ.லெவி பதக்கமும் வழங்கப்பட்டது. கூலிட்ஜுக்கு 1939ல் ஃபாரடே பதக்கம் வழங்கப்பட்டது. அவருக்கு 1944ல் பிராங்க்ளின் பதக்கம் வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் சூடான கேத்தோடு எக்ஸ்ரே குழாயைக் கண்டுபிடித்ததற்காக ரெம்ஷெய்ட் நகரம் அவருக்கு ரோன்ட்ஜென் பதக்கத்தை வழங்கியது. தேசிய புகழ்பெற்றக் கண்டுபிடிப்பாளர் அரங்கிற்கும் தேர்ந்து எடுக்கப்பட்டார். மெல்லிய டங்ஸ்டனாலான கம்பியினைப் பயன்படுத்தி X-கதிர் கூலிட்ஜ் குழாய் அமைத்த வில்லியம் டி கூலிட்ஜ் பிப்ரவரி 3, 1975ல் தனது 101வது அகவையில் நியூயார்க், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1975 ஆம் ஆண்டில் அவர் நியூயார்க்கின் ஷெனெக்டேடியில் 101 வயதில் இறப்பதற்கு சற்று முன்னர் தேசிய கண்டுபிடிப்பாளர்கள் ஹால் ஆஃப் ஃபேமில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை, தமிழகக் கிறித்தவத் தமிழ்ப் புலவர் காலமான நாள் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியதில் ஐரோப்பியக் கிறித்துவச் சமயத் தொண்டர்களுக்குப் பெரும் பங்குண்டு. ஐரோப்பியக் கிறித்துவத் தமிழ்த் தொண்டர்களைப் போல, தமிழ்க் கிறித்துவத் தொண்டர்களும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஆவார் ஒரு சூழலில் இயேசு பெருமானின் அறக்கருத்துகளினால் ஈர்க்கப்பெற்றுக் கிறித்துவராக மாறினார். தமது முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள தூய தாமசு ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்றார். அது முதல் ஹென்றி ஆல்பிரடு கிருஷ்ணபிள்ளை என வழங்கப்பட்டார். சென்னையில் தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராகவும், மாநில உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். பின்னர், பாளையங்கோட்டை சி.எம்.எஸ்.கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், திருவனந்தபுரம் மகாராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி செய்தார். மேலும் கிறித்தவ இலக்கியச் சங்கத்தின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இரட்சணிய யாத்திரிகம் என்னும் காப்பியத்தை இயற்றிப் பெரும் புகழ் கொண்டவர் கிருஷ்ண பிள்ளை. இவர் இரட்சணிய யாத்திரிகம் மட்டுமன்றி வேறு பல அரிய நூல்களையும் இயற்றியுள்ளார். இறைவனைப் புகழும் இனிய தேவாரப் பாடல்கள் அடங்கிய இரட்சணிய மனோகரம் என்னும் நூலையும், போற்றித் திரு அகவல், இரட்சணிய சரிதம் என்னும் செய்யுள் நூல்களையும் இயற்றியுள்ளார். அவ்வாறே இலக்கண சூடாமணி என்னும் இலக்கண நூல், பாளையங்கோட்டை எச்.ஏ.கிருட்டிணபிள்ளை கிறித்துவரான வரலாறு என்ற தன் வரலாற்று நூல் ஆகியவற்றை உரைநடையில் படைத்துள்ளார். காவிய தரும சங்கிரகம் என்ற இலக்கியத் தொகுப்பு நூலையும் உருவாக்கியுள்ளார். வேதப்பொருள் அம்மானை, பரத கண்ட புராதனம் ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவர் எழுதியதாகக் கூறப்படும் இரட்சணிய குறள், இரட்சணிய பால போதனை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கவில்லை.

முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை மறைந்த தினமின்று: 1969 ஜனவரி 31:- முதல்வர் அண்ணாதுரைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சற்று நேரத்தில், மூச்சு விட இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் இதயத்துடிப்பு நின்று விட்டது. உடனே, அவருக்கு செயற்கை முறையில் மூச்சு வரும்படி செய்தார்கள். அதைத் தொடர்ந்து, அவருக்கு மீண்டும் இதயத் துடிப்பு ஏற்பட்டது. நாடித் துடிப்பும், ரத்த அழுத்தமும் மீண்டும் பழைய நிலையை அடைந்தன. எனினும் “உணர்வு” முழு அளவில் திரும்பவில்லை. கவர்னர் உஜ்ஜல்சிங், திராவிடர் கழகத்தலைவர் ஈ.வெ.ரா.பெரியார், காமராஜர், சி.சுப்பிரமணியம், முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் மற்றும் அமைச்சர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று அண்ணாவைப் பார்த்தனர். பிப்ரவரி 1:- “அண்ணாவின் கழுத்துக்கு அருகே மூச்சுக்குழாயில் டாக்டர்கள் ஒரு துளை போட்டு, அதில் குழாய் ஒன்றை அமைத்தனர். அந்தக் குழாய் மூலம் அண்ணா சுவாசிக்கத் தொடங்கவே, ஒரு நிமிடம் நின்று போயிருந்த இதயம் மீண்டும் இயங்கத் தொடங்கியது” என்று டாக்டர்கள் தெரிவித்தனர். “அண்ணாவுக்கு வயிற்றில் ஆபரேஷன் நடந்தபோது, இரைப்பை அருகில் வளர்ந்திருந்த கட்டியில் ரேடியம் ஊசிகள் வைக்கப்பட்டன. அந்த ஊசிகள் அதிகம் சக்தி வாய்ந்தவை. நோயை குணப் படுத்துவதற்காக, அந்த ஊசிகள் ரேடிய கதிர்களைப் பாய்ச்சிக்கொண்டு இருக்கின்றன. இதன் விளைவாகவே அவருடைய உடல் நிலை அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. ரேடியம் ஊசிகளின் வேலை முடிந்ததும், அவை சக்தியற்றவை ஆகிவிடும். அதன்பின், அண்ணா நன்கு தேறிவிடுவார்” என்று ஒரு டாக்டர் கூறினார். கவர்னர் உஜ்ஜல்சிங், காலையிலும், மாலையிலும் வந்து அண்ணாவைப் பார்த்தார். மாலை 6 மணிக்கு சுதந்திராக் கட்சித்தலைவர் ராஜாஜி வந்தார். ஐந்து நிமிடம் அண்ணா அருகில் இருந்தார். ஐ.நா.சபையின் பழைய இந்திய தூதர் ஜி.பார்த்தசாரதி, குன்றக்குடி அடிகளார் ஆகியோரும் அண்ணாவைப் பார்த்தார்கள். மத்திய அரசு உணவு மந்திரி ஜெகஜீவன்ராம், டெலிபோன் மூலம் அண்ணாவின் உடல் நிலை பற்றி விசாரித்தார். அமைச்சர்கள் இரவு பகலாக ஆஸ்பத்திரியில் இருந்து வந்தார்கள். அண்ணா குணம் அடைய தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் விசேஷ பிரார்த்தனைகள் நடந்தன. பிப்ரவரி 2 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில், அண்ணாவின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. அதனால் டாக்டர்களும், அமைச்சர்களும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஆனால் இரவு 11.30க்கு பிறகு அவர் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தும் பயன் இல்லை. நாடித்துடிப்பு திடீர் என்று அதிகரித்தது. நள்ளிரவு 12.20 மணிக்கு (அதாவது 3 ந்தேதி அதிகாலை) உயிர் பிரிந்தது. அப்போது, அண்ணாவின் மனைவி ராணி அம்மாள் மற்றும் குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். அங்கு இருந்தனர். “அண்ணா நம்மைப் பிரிந்து விட்டார்” என்று டாக்டர்கள் அறிவித்த போது, அவர்கள் கதறி அழுதனர். அண்ணா இறந்த ஐந்து நிமிடத்திற்கெல்லாம், ஆஸ்பத்திரிக்கு ஈ.வெ.ரா.பெரியார் வந்தார். அவருடன் மணியம்மையும் வந்தார். அண்ணா உடலைப்பார்த்து, பெரியார் கண்ணீர் விட்டார். அண்ணாவின் மரணச் செய்தியை, வெளியே கூடியிருந்த நிருபர்களிடம் அமைச்சர் நெடுஞ்செழியன் வந்து அறிவித்தார். அப்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அண்ணாவின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து, அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக, வெளியே எடுத்து வரப்பட்டது. அமைச்சர்கள் அழுதுகொண்டே உடன் வந்தனர். அண்ணாவின் உடல் `ஆம்புலன்ஸ்’ காரில் ஏற்றப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அண்ணாவின் உடல் ஒரு கட்டிலில் வைக்கப்பட்டது. நெடுஞ்செழியன், கருணாநிதி மற்ற அமைச்சர்கள், எம்.ஜி.ஆர். ஆகியோர் கண்ணீர் வடித்தபடி அருகில் அமர்ந்து இருந்தனர். சிவாஜிகணேசன், மனைவி கமலாவுடன் வந்தார். அண்ணா உடலைப் பார்த்து கதறி அழுதார். காமராஜர், சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம், சி.பா.ஆதித்தனார், ம.பொ.சிவ ஞானம் மற்றும் பல தலைவர்களும், பிரமுகர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். கவர்னர் உஜ்ஜல்சிங், மனைவியுடன் வந்தார். அண்ணா உடலைப் பார்த்ததும், கவர்னர் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. கவர்னரின் மனைவி கதறி அழுதார். அண்ணாவின் உடல், அவர் வீட்டில் அரை மணி நேரம் வைக்கப்பட்டு இருந்தது. பிறகு, ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அண்ணா மரணம் அடைந்ததால், அமைச்சரவையில் அவருக்கு அடுத்த இடத்தை வகித்த நெடுஞ்செழியனை தற்காலிக முதல் அமைச்சராக கவர்னர் நியமித்தார். அண்ணா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த எல்லா அமைச்சர்களும் அதே இலாகாக்களுடன் பதவியில் நீடித்தனர். அண்ணா இறுதி ஊர்வலத்தில் பங்கு கொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர், ரெயில்களிலும், பஸ்களிலும் சென்னைக்கு விரைந்தனர். மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட ஜனதா எக்ஸ்பிரசில், கூட்டம் அலைமோதியது. ரெயில் பெட்டிகளில் இடம் இல்லாததால், பலர் ரெயில் பெட்டிகளின் கூரை மீது உட்கார்ந்து கொண்டனர். சிதம்பரத்துக்கு முன்னதாக உள்ள கொள்ளிடம் நிலையத்தை அதிகாலை நேரத்தில் அந்த ரெயில் அடைந்தபோது, கூட்டம் நிரம்பி வழிந்தது. “இந்தப் பகுதியில் உள்ள பாலங்கள் ஆபத்தானவை. கீழே இறங்கி விடுங்கள்” என்று சொல்லி ரெயில் பெட்டி உச்சி மீது இருந்தவர்களை இறக்கினார்கள். ஆனால், ரெயில் புறப்பட்டதும், எல்லோரும் மீண்டும் மேலே ஏறிக்கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் கொள்ளிடம் ஆற்று இரும்புப் பாலம் வந்தது. அதன் மீது இரும்புச் சட்டங்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதை, ரெயில் பெட்டி உச்சியில் இருந்தவர்கள் கவனித்தார்கள். பாலத்திற்குள் ரெயில் நுழைந்தபோது, தலையை குனிந்து கொண்டும், படுத்துக் கொண்டும் தப்பிவிட்டார்கள். ஆனால் சற்று தூரத்தில் வல்லம்படுகை என்ற இடத்தில், இதேபோன்ற இன்னொரு ஆற்றுப்பாலம் இருந்ததை அவர்கள் கவனிக்க வில்லை. அந்த பாலத்துக்குள் ரெயில் நுழைந்தபோது உச்சி மீதும், படிக்கட்டுகளிலும், தொத்திக்கொண்டும் இருந்தவர்கள் இரும்புச் சட்டங்களில் பயங்கரமாக மோதி நசுங்கினார்கள். வேறு சிலர் பயந்து போய் ஆற்றில் குதித்தார்கள். இந்த விபத்தில் அந்த இடத்திலேயே 24 பேர் பலியானார்கள். 48 பேர் காயம் அடைந்தார்கள். காயம் அடைந்தவர்கள் சிதம்பரம் ஆஸ்பத்திரியிலும், கடலூர் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார்கள். அவர்களில் 8 பேர் இறந்து போனார்கள். எனவே, சாவு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. அண்ணா மறைந்தபோது, அவருடைய தாயார் பங்காரு அம்மாள் (வயது 80) காஞ்சீபுரத்தில் இருந்தார். கண் பார்வை மங்கிப்போயிருந்தது. காதும் சரியாகக் கேட்காது. அண்ணா மறைந்த சிறிது நேரத்தில், தமிழ்நாடு மேல் சபை உறுப்பினர் அலமேலு அப்பாதுரை, காரில் காஞ்சீபுரத்துக்கு விரைந்தார். பங்காரு அம்மாளிடம் மகன் இறந்த செய்தியை தெரிவிக்காமல் “உங்கள் மகன் உங்களை பார்க்க விரும்புகிறார். வாருங்கள்” என்று கூறி சென்னைக்கு அழைத்து வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அண்ணாவின் இல்லத்தில், உடல் வைக்கப்பட்டு இருந்த அறைக்குள் பங்காரு அம்மாளை அழைத்து வந்து அருகில் உட்கார வைத்தனர். மகன் ஏன் பேசவில்லை என்று நினைத்த பங்காரு அம்மாள், இரு கைகளையும் நீட்டி “எங்கேயடா இருக்கிறாய் என் ராஜா” என்று கேட்டார். அங்கு அழுது கொண்டு இருந்த அண்ணாவின் மனைவி ராணி அம்மாள், மாமியாரின் கையைப் பிடித்து அண்ணாவின் உடல் மீது வைத்தார். பங்காரு அம்மாள் கைகளால் தடவிப்பார்த்துவிட்டு, “ஏன் ஜில் என்று இருக்கிறது” என்று பலமுறை கேட்டார். ஆனால் யாரும் பதில் சொல்லவில்லை. பிறகு ராஜாஜி மண்டபத்துக்கு உடலை எடுத்துச் செல்லும்போது, பங்காரு அம்மாளை மாடிக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அண்ணா இறந்து போன செய்தி அப்போதும் அவரிடம் தெரிவிக்கப்படவில்லை.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...