தமிழ்நாட்டில் தொடங்கியது சர்வதேச பலூன் திருவிழா..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் கடந்த 9 ஆண்டுகளாக பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பத்தாவது சர்வதேச பலூன் திருவிழா கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் துவங்கியது.
பலூன் திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா பிரான்ச், பிரேசில் வியட்நாம் மற்றும் பெல்ஜியம் ஆகிய 7 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 11 வகையான பலூன்களில் வெப்பக்காற்று நிரப்பப்பட்டு வானில் பறக்க விடப்பட்டது. இன்று துவங்கப்பட்ட சர்வதேச பலூன் திருவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.
இந்த தொடக்க விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூன் வானில் மூன்று கிலோ மீட்டர் தூரம் பறந்து தரையிறக்கப்படும். வானில் பறப்பதற்கு விளம்பரதாரர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் மாலை நேரங்களில் 50 மீட்டர் மேல்நோக்கி மட்டும் ஏற்றி இறக்கப்படும். இதில் பறப்பதற்கு பொதுமக்களுக்கு கட்டணத்துடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.