சர்வதேச பலூன் திருவிழா 10-ந் தேதி சென்னையிலும் தொடங்குகிறது..!
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, பொள்ளாச்சி, மதுரையில் சர்வதேச பலூன் திருவிழா 10-ந் தேதி தொடங்குகிறது.
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.
சென்னையை அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ஜனவரி 10 முதல் 12-ந் தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14 முதல் 16-ந் தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி கூறும்போது, ‘மதுரையில் முதன்முறையாக பலூன் திருவிழா நடக்க உள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளின் ஹாட் ஏர் (வெப்ப காற்று) பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஹாட் ஏர் பலூன் பைலட்டுகள் தமிழகம் வந்துள்ளனர். மேலும் மிக்கி மவுஸ், டைனோசர் உள்பட பல்வேறு வடிவங்களிலும், தனித்துவமான வண்ணங்களிலும் பலூன்கள் பறக்க விடப்படுகிறது’ என்றார்.