கிழக்கு லடாக் எல்லையில் ‘சத்ரபதி சிவாஜி’ சிலை – இந்திய ராணுவம் திறப்பு..!

 கிழக்கு லடாக் எல்லையில் ‘சத்ரபதி சிவாஜி’ சிலை – இந்திய ராணுவம் திறப்பு..!

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு, பாங்காங் ஏரிக்கரையில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனர். இந்த மோதலில் தங்கள் வீரா்களின் மரணம் குறித்து சீனா அதிகாரபூர்வமாக ஏதும் தகவலளிக்கவில்லை. இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் போக்கு, பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அண்மையில் முடிவுக்கு வந்தது. டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த அக்டோபரில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது இரு நாட்டு உறவில் முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. லடாக்கின் லேவைத் தளமாகக் கொண்ட ‘14 கார்ப்ஸ்’ ராணுவப் படைப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா கடந்த டிச. 26-ம் தேதி இந்த சிலையை திறந்து வைத்தார்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வீரம், தொலைநோக்குப் பார்வை மற்றும் வலுவான நீதியின் உயர்ந்த சின்னமாக சத்ரபதி சிவாஜியின் சிலை திறக்கப்பட்டுள்ளது. நாங்கள் சத்ரபதி சிவாஜியின் அசைக்க முடியாத புகழைக் கொண்டாடுகிறோம். அவருடைய வீர பாரம்பரியம் பல தலைமுறைகளுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருந்துவருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...