‘இரட்டை இலை’ விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு…!
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெல்லி ஐகோர்ட்டு முடித்து வைத்தது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி மனோஜ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவிற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக புகழேந்திக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி, அவரை வரும் 24-ந்தேதி விசாரணைக்கு அழைத்துள்ளோம் எனவும், அவரது கோரிக்கை மனுவும் அன்றைய தினம் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதே சமயம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்த பிறகே தேர்தல் ஆணையம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக புகழேந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, புகழேந்தியின் கோரிக்கை மனுவை விரைந்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். அதோடு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புகழேந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.