தமிழ்நாடு வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்பட்ட தர்மசாஸ்தா ஐயப்பனின் தங்க ஆபரணங்களுக்கு, தென்காசியில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் ‘மண்டல மகோற்சவ திருவிழா’, 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மண்டல மகோற்சவ திருவிழா நாளை தொடங்கப்பட உள்ளது.
இந்த திருவிழாவின் போது ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக, தங்கத்தால் ஆன அங்கிகள் மற்றும் ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு, இரண்டு மாநில போலீசார் பாதுகாப்புடன் தமிழகம் வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்படும்.
அவ்வகையில் இன்று புனலூரிலிருந்து எடுத்து செல்லப்பட்ட ஐயப்பனுடைய தங்க ஆபரணங்களுக்கு செங்கோட்டை, தென்காசி, பண்பொழி, கணக்கப்பிள்ளைவலசை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தென்காசி நகரப் பகுதிக்கு வருகை தந்த அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பனின் தங்க அங்கி மற்றும் ஆபரணத்திற்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்களின் தரிசனத்திற்காக தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டது.
