விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை..!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பஞ்சபூத அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்வான மகா கார்த்திகை தீபத்திருவிழா நாளை (டிச.13) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான மகா கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை (டிச.13) அதிகாலை 4 மணியளவில் கோயில் மூலவர் சன்னிதியில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்திற்காக பயன்படுத்தப்படும் தீபக்கொப்பரைக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் தீபக்கொப்பரையை இன்று (டிச.12) மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.
இந்த கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கார்த்திகை தீபத் திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நகரின் 9 சாலைகளிலும் 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 3,408 சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. இதேபோல், சென்னை, விழுப்புரம் மார்க்கமாக நாளை 30 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அடிப்படை வசதிகளாக 105 இடங்களில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 95 இடங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கிரிவலப் பாதையில் 35 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. 21 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 500 மீட்டருக்கு 2 காவலர்கள் என பாதுகாப்பு பணியில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிரிவலப் பாதை மற்றும் நகர் முழுவதும் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கிரிவலப் பாதை மற்றும் நகரில் 50 கால் சென்டர்கள் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனுடன், 300 இடங்களில் சத்தம் எழுப்பும் அறிவிப்பு புணல்கள் வைக்கப்பட்டுள்ளன. 3,350 துப்புரவு பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். கிரிவல பாதையில் 240 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 85 இடங்களில் ‘My Help’ பூத் அமைக்கப்பட்டுள்ளது.