இன்றைய முக்கிய நிகழ்வுகள் (08.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (08.12.2024)

சார்க் அமைப்பு உருவான நாள்:

8-12-1985 இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2007-ல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14-வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

பூலியன் கணிதத்தைக் கண்டுபிடித்த இங்கிலாந்து கணிதவியலாளர்-ஜார்ஜ் பூல் மறைந்த தினம்.

கண்டுபிடிப்புகள்:- நுண்கணிதம், இயற்கணிதம், வகையீட்டு சமன்பாடுகள் ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய கோட்பாடுகளை வகுத்தார். தற்போது பூலன் அல்ஜீப்ரா எனப்படும் லாஜிக்கல் அல்ஜீப்ரா குறித்த ஆராய்ச்சியையும் தொடங்கினார்.இன்றைய டிஜிட்டல் கம்ப்யூட்டர் சர்க்யூட்களுக்கு அடிப்படை வடிவமைப்பு இவர் உருவாக்கிய பூலன் அல்ஜீப்ரா. அதனாலேயே அல்ஜீப்ராவின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிறார். பதவிகள்:- டப்ளின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவப் பட்டங்கள் வழங்கின. ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நூல்கள்:- கேம்பிரிட்ஜ் கணித இதழில் ‘அனலிடிகல் டிரான்ஸ்பர்மேஷன் தியரி’ குறித்த தொடர் கட்டுரைகளை 24-வது வயதில் எழுதினார். 1884-ம் ஆண்டு பிலாஸபிகல் டிரான்ஸாக் ஷன் ஆப் தி ராயல் சொசைட்டி என்ற ஆய்வுக் கட்டுரைக்காக ராயல் சொசைட்டியின் தங்கப் பதக்கம் பெற்றார். அதில் தான் அல்ஜீப்ரா – கால்குலஸ் இணைப்பு குறித்து விளக்கியிருந்தார்.

மாங்கனீசு தனிமத்தைக் கண்டுபிடித்த வேதியியலாளர் மற்றும் உலோகவியல் வல்லுநர் யோகான் கோட்லீப் கான் மறைந்த தினம் இன்று.

1770 இல் இவர் சுவீடனிலுள்ள பாலன் நகருக்கு குடியேறினார். இவ்வூரில், தாமிரம் உருக்குதலை மேம்படுத்தும் முறைகளை அறிமுகப்படுத்தினார். துத்தம், கந்தகம் மற்றும் அடர்சிவப்பு சாயம் தயாரிக்கும் பல தொழிற்சாலைகள் உருவாக்குவதில் இவர் பங்கேற்றார்.

சுவீடனின் அரசுத்துறை கனிம வாரியத்தில் வேதியியலாளராக 1773 முதல் 1817 வரை பணியாற்றினார். தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் இவர் மிகவும் தயக்கம் காட்டினார். ஆனால் பெர்க்மான் மற்றும் வில்லெம் சீலெவிடம் அவற்றைப்பற்றி தயக்கமின்றி உரையாடினார். மாங்கனீசு ஈராக்சைடை கரிமம் உபயோகித்து மாங்கனீசாக ஒடுக்கியது இவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இதுவே மாங்கனீசை தனிமமாக முதன்முதலில் தனிமைப்படுத்திய முறையுமாகும். கானைட்டு (ZnAl2O4) என்ற ஆக்சைடு தாதுப்பொருள் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

1962 – ஒன்பது செய்தித்தாள்களின் வெளியீட்டை 114 நாட்களுக்கு நிறுத்திய, நியூயார்க் நகர செய்தித்தாள் தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கிய நாள்.

வாரக்கூலியில் கேட்கப்பட்ட 38.82 டாலர் உயர்வினைத் தராததால் இந்தப் போராட்டத்தை, செய்தித்தாள் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தியது. நிறுவனங்கள் 8 டாலர் மட்டுமே (முதலாண்டில் 4.25 டாலரும், அடுத்த ஆண்டில் 3.75 டாலரும்) உயர்த்தித்தரத் தயாராக இருந்தன. நிருபர்கள், அச்சுக் கோப்பவர்கள், புகைப்படங்களைச் சேர்ப்பவர்கள், அச்சகத்தை இயக்குபவர்கள், லிஃப்ட் இயக்குபவர்கள், அலுவலக உதவியாளர்கள் என்று 17 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேறற்றனர். நிதிச் சிக்கல் இருந்த நிறுவனங்களைப் பாதிக்காவண்ணம், நல்ல லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த 4 செய்தித்தாள்களில் மட்டுமே வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், வெளியீட்டாளர்கள் தங்கள் ஒற்றுமையைக் காக்க, மேலும் 5 செய்தித்தாள்களிலும் கதவடைப்புச் செய்தனர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் வரவு, செய்தித்தாள்களின் விளம்பர வருவாயைப் பாதிக்கத் துவங்கியிருந்ததுடன், அச்சுக்கோப்பு முறைக்கு மாற்றாக கணிணி வரத்தொடங்கிய நேரம் அது. பழைய அச்சுக்கோப்பு முறைக்கு ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்ட நிலையில், நிறுவனங்களுக்குத் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அனுப்புபவையாகத் தொழிற்சங்கங்கள் இருந்தன. அவர்களது ஒப்பந்தக்காலம் முடிவடையவிருந்த நிலையில், புதிய தொழில்நுட்பத்தின் வரவு தொழிலாளர்களின் தேவையைக் குறைக்கும் என்பதே இப்போராட்டத்தின் பின்னணிக் காரணமாக இருந்தது. 114 நாட்களுக்குப்பின் 12.63 டாலர் கூலி உயர்வுடன், வேலை நேரத்தில் குறைப்பு, எல்லாவகைத் தொழிலாளர்களின் சங்கங்களுக்கும் ஒரே காலத்தில் ஒப்பந்தங்கள், புதிய தொழில் நுட்பத்தால் செலவு குறையுமென்பதால், அதன்மூலம் கிடைக்கும் லாபத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு முதலானவற்றை நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டபின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. இக்காலகட்டத்தில், புதிதாகச் சில செய்தித்தாள்கள் உருவாகி சந்தையைப் பிடித்திருந்தன. முன்னணியில் இருந்த பழைய செய்தித்தாள்களில் 4, வேலைநிறுத்தத்தால் மூடப்பட்டன அல்லது வேறொரு செய்தித்தாளுடன் இணைக்கப்பட்டன. மற்றவற்றின் விற்பனையும் (கென்னடி படுகொலைவரை) பழைய நிலைக்கு உயரவில்லை.

1963 – பான் அமெரிக்கன் வர்ல்ட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானமொன்று மின்னலால் தாக்கப்பட்டு வெடித்ததில் அதிலிருந்த 81 பேரும் பலியான நாள் மிகப்பெரிய அளவிலான மின்சாரத்தை புவிக்குக் கடத்துவதே மின்னலால் தாக்கப்படும் பொருட்களுக்கு ஆபத்து ஏற்படக்காரணமாகிறது. அவ்வாறு கடத்த முடியாது என்பதால் பொதுவாக மின்னலால் தாக்கப்படும் விமானங்கள் பாதிப்புக்குள்ளாவதில்லை. சராசரியாக ஒவ்வொரு விமானமும் ஆண்டுக்கு ஒருமுறையாவது மின்னலால் தாக்கப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதனால் அதுவரை அமெரிக்க வரலாற்றில் நடத்தப்பட்டவற்றிலேயே மிகப்பெரியதாக இந்த விபத்துக் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. சிவில் விமானத்துறையின் ஆய்வுச் செலவுகள் அதிகமாக பத்தாயிரம் டாலர்களைத் தாண்டும் என்ற நிலையில், இந்த ஆய்வுகளுக்கு ஒன்றேகால் லட்சம் டாலர்களுக்கும் மேல் செலவிடப்பட்டதாம். இத்துறை தவிர, கூட்டரசின் வான்பரப்பியல்துறை, விமானத்தை உருவாக்கிய போயிங், என்ஜினைஉருவாக்கிய ப்ராட் அண்ட் வைட்னி, பிற பாகங்களை உருவாக்கிய நிறுவனங்கள் என்று ஆய்வுக்குச் செலவிட்ட தொகை தனி! 16 லாரிகள் நிறைய விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் கொண்டுபரப்பட்டு, முடிந்தவரை இணைக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சேதமடைந்திருந்த கருப்புப்பெட்டியின் கிடைத்தவரையான தகவல்கள் சோதிக்கப்பட்டன. விமானத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு எரிபொருட்களில் ஒன்றின் புகை வெளியேறும் பகுதியில் மின்னல் தாக்கினால் தீப்பிடிக்கும் வாய்ப்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த எரிபொருளைத் தயாரிக்கும் நிறுவனம் தங்கள் எரிபொருள் பாதுகாப்பானது என்று வாதிட்டது. 1965 மார்ச் வரை நீடித்த ஆய்வில், அந்த எரிபொருள் நிரப்பப்பட்டிருந்த இறக்கைப்பகுதி வெடித்தபின்னரே விமானம் விழுந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டதால், மின்னலால் விபத்து ஏற்பட்டது உறுதியானது. அது வரை சில விமானங்களில் மட்டுமிருந்த, உராய்வினால் ஏற்படும் நிலைமின்சாரத்தை வெளியேற்றும் அமைப்பை அனைத்து விமானங்களிலும் பொருத்த உத்தரவிடப்பட்டது. இந்த விபத்து ஏற்பட்ட ஒரு மாதத்திலேயே கூட்டரசின் வான்பரப்பியல்துறை, விமானங்களின் பாதுகாப்புக்குறித்து ஆய்வுசெய்ய ஒரு தொழில்நுட்பக்குழுவை உருவாக்கியிருந்தது. இக்குழு மேற்கொண்ட மிகவிரிவான ஆய்வினையடுத்து, விமானங்கள் பறப்பதற்கான தகுதிகள் 1967இல் மாற்றியமைக்கப்பட்டதுடன், மின்னல் பாதுகாப்புக்கான அமைப்புகள் 1970இல் சட்டமாக்கப்பட்டன. இவை அமெரிக்க விமானங்களுக்கு மட்டும்தான் என்பதால், 1971இல் பெரு நாட்டின் விமானமொன்று மின்னலால் தாக்கப்பட்டு, 91 பேர் உயிரிழந்து, ஒருவர் மட்டும் பிழைத்ததே, மின்னலால் மிகஅதிக உயிரிழப்பு ஏற்பட்ட விபத்தாகியது!

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா கலவரம் ஏற்பட்ட தினம்

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில், குமாரவேலு (33) என்ற இந்தியத் தொழிலாளி ஒருவர் மீது தனியார் பேருந்து ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து 400 க்கும் மேற்பட்ட வங்கதேச மற்றும் இந்தியத் தொழிலாளர்கள் இணைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். தீவைப்பு சம்பவங்களில் காவல்துறையினரின் வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இக்கலவரத்தில் காவல்துறையினர் 10 பேர் உட்பட 18 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெற்காசியப் பிரஜைகள் 27 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் கடந்த1969 ஆம் ஆண்டில் சீனர்களுக்கும், மலேசிய பிரஜைகளுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பின்னர், அதாவது 40 ஆண்டுகால வரலாற்றில் இது போன்ற கலவரம் நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...