இன்றைய முக்கிய நிகழ்வுகள் (29.11.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (29.11.2024)

டாட்டா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாட்டாவின் நினைவு நாளின்று!

1938 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று 5ஒ0 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்தியவர் JRD Tata, இந்தியாவின் முதல் விமான சேவையை வழங்கியது, இந்தியாவின் சிவில் விமானப் பயணத்திற்கான முதல் விமான சேவையை இயக்கியது என பல சாதனைகளை படைத்த ஜேஆர்டி டாடா, 34 வயதிலேயே டாடா சன்ஸ் வாரியத்தின் உறுப்பினராக பதவியேற்று, மிகவும் இளமையான உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வென்ற ஒரே தொழிலதிபர். தொழிலாளிகள் வீட்டை விட்டுக்கிளம்பும் பொழுதில் இருந்து அவர்கள் மீண்டும் வீடு போய் சேரும் வரும்வரை பணியில் இருப்பதாகவே கருதப்படுவார்கள் என்கிற நடைமுறையை கொண்டு வந்த பல தொழிலாளர்களின் வாழ்வில் ஸ்திரத்தன்மையை உண்டு செய்தவர். இன்றைக்கு கலக்கும் டி.சி.எஸ்.டைட்டன் ,டாடா மோட்டார்ஸ் எல்லாமும் இவரின் கனவுக்குழந்தைகளே.

இத்தாலி உயிரியலாளரும், மருத்துவருமான- மார்செல்லோ மால்பிகி மறைந்த நாள்

பூச்சிகள் சுவாசிப்பதற்கு உதவும் நுண்குழலுக்கு மூச்சுக்குழல் என்று பெயரிட்ட இத்தாலி உயிரியலாளரும், மருத்துவருமான- மார்செல்லோ மால்பிகி மறைந்த நாள். மார்ச்-10, 1628 ஆம் ஆண்டு, இத்தாலி,பொலோனியா அருகில் உள்ள க்ரிவால்கோர் என்ற ஊரில் பிறந்தார்.தனது பள்ளிக் கல்வி முடிந்த பின் பொலோனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1653 ஆம் ஆண்டு, தத்துவம், மருத்துவம் போன்றவற்றில் முனைவர் பட்டம் பெற்றார். பணிகள்:- 1655 ஆம் ஆண்டு பெலோனியா பல்கலைக்கழகத்தில் தர்க்கவியல் விரிவுரையாளராக சேர்ந்து பணியாற்றினார்.பிறகு பைசா நகரக் கல்லூரியில் கோட்பாட்டு மருத்துவத்தில் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு மெசினா (Messina) மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் துறை பேராசிரியராகப் பதவியேற்றார். கண்டுபிடிப்புகள்:- சுவை அரும்புகள், மூளையின் அமைப்பு, பார்வை நரம்பு, கொழுப்பு தங்கும் இடங்கள், ரத்தத்தில் ஏற்படும் நிறமாற்றங்கள், உடற்கூறியல், உடல் இயங்கியல் குறித்தும் ஆராய்ந்தார். மைக்ரோஸ்கோப்கள் மூலம் தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களின் உடல்கூறு கட்டமைப்புகளை ஆராய்ந்தார். பட்டுப்பூச்சியில் தான் செய்த ஆய்வுகளை 1669ஆம் ஆண்டு வெளியிட்டார். இவ்வகை பூச்சிகளுக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல் கிடையாது என்றும், இவைகள் உடலின் பக்க வாட்டுத் துளைகள் மூலமாக வாயுமண்டல காற்றை உள்ளிழுத்து, நுண்குழல்கள் வழியாக சுவாசிக்கின்றன என்று விளக்கினார். இந்த நுண்குழலுக்கு மூச்சுக்குழல் எனவும் பெயரிட்டார். நுரையீரல் செல்களை சோதனை செய்து பார்த்து அங்கு சிறிய மெல்லிய சுவர் கொண்ட ரத்த நுண் குழாய்கள் இருப்பதைக் கண்டார். இவைதான் தமனிகளையும் சிரைகளையும் இணைக்கின்றன என்பதையும் அவை ரத்தத்தை இதயத்தை நோக்கிச் செலுத்துகின்றன என்பதையும் அங்கு நடைபெறும் அனைத்து வேலைகளையும் இவைதான் நிகழ்த்துகின்றன என்பதையும் ஆராய்ந்தறிந்து கூறினார்.மேலும் இவர் கண்டறிந்த தகவல்கள் நுண்ணியல் உடற்கூறியல் (microscopic anotomy) அறிவியலுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. சுற்றோட்ட, நிணநீர் ஓட்டத்தோடு தொடர்புடைய மால்பிஜியன் துகள்கள், புறத்தோல் திசுவில் காணப்படும் மால்பிஜியன் அடுக்கு, பூச்சிகளில் காணப்படும் மால்பிஜியன் குழல்கள் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.பூச்சிகளில் மால்பிஜியன் குழல்கள் நைட்ரஜன் அடங்கிய கழிவுப் பொருள்களான யூரிக் அமிலம் மற்றும் நீரை மலத்திலிருந்து வெளியேற்றுகின்றன என்பதை மால்பிஜி கண்டறிந்தார். மறைவு:- இதே நவம்பர்-29, 1694 ஆம் ஆண்டு, இத்தாலி ரோம் நகரில் மரணமடைந்தார்.

பஞ்சம் போக்கிய நெல் ரகம் IR 8 உருவான தினம் இன்று.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகெங்கும் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சத்துக்குத் தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்ட அருமருந்து இந்த ஐ.ஆர்.8 ரகம். அரிசியை வெறும் உணவு என்று மட்டும் கடந்து சென்றுவிடமுடியாது. அரிசியின் வரலாற்றில் அவல அரசியலும் சுயநலம் மிகுந்த துரோகமும் கறுப்பின அடிமைகளின் துயர் மிகுந்த வாழ்வும் ஒருங்கே இழையோடியுள்ளன. நாகரிகம் வளர வளர எதை உண்பது என்பதை மனிதன் தேர்ந்தெடுத்து உண்ணத் தொடங்கினான். காட்டிலும் மேட்டிலும் இயற்கையாக முளைத்ததைச் சாப்பிட்ட மனிதன், தனக்கு வேண்டியதைத் தான் வசிக்கும் இடத்திலேயே விளைவிக்கத் தொடங்கினான். உணவைச் சார்ந்து நாடோடியாகத் திரிந்த மனிதன், ஓர் இடத்தில் நிலைபெறத் தொடங்கினான். விவசாயம் அவனுக்கு வேண்டிய உணவை மட்டும் அளிக்கவில்லை, மனிதனின் உணவில் அரிசியைத் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியது. அரிசி ஒரு புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். ஈரநிலங்களில் வளரக்கூடிய இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள்வரை வளரக்கூடிய தாவரமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை இமயமலை அடிவாரத்தில் அரிசி தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஔவையார் போன்ற பல பழந்தமிழ் புலவர்களின் பாடல்களில் அரிசி பற்றிய குறிப்புகள் வருகின்றன. அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்புவரை, அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அக்காலத்தில் பஞ்சங்களால் கொத்துக் கொத்தாக மனித வாழ்வு உதிர்வது அன்று வாடிக்கையாக இருந்தது. 1876இல் சென்னையில்கூட ஒரு கடும் பஞ்சம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, ‘உணவுப் பற்றாக்குறை ஏராளமாகப் பெருகியது. உணவுப் பஞ்சம் பூதாகரமாக உருவெடுத்து மனிதனின் வாழ்வைப் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியது. வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியின் பலனாக, 1960களில் அதிக மகசூல் தரும் நெல் இனம் உருவாக்கப்பட்டது. இந்தோனேசிய அரிசி இனத்தையும் வியட்நாம் அரிசி இனத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட கலப்பின அரிசி அது. சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழகம் அதற்கு IR-8 என்று பெயரிட்டு, 1966, நவம்பர் 29 அன்று பிலிப்பைன்ஸ் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கியது. 88 கிலோ விதை நெல்லைப் பயிரிட்டு அவர்கள் 71 டன் அரிசியை மகசூல் செய்தனர். இந்த அற்புத அரிசியைப் பற்றிய பேச்சு உலகெங்கும் பரவியது. நார்மனின் முயற்சி: குறிப்பாக பிஹாரில் கடுமையான பஞ்சம் நிலவியது. உணவு உற்பத்தியை அதிகரிக்க, அப்போது வேளாண் துறை அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியன் கடுமையாக முயன்றார். நோபல் பரிசு பெற்ற வேளாண் விஞ்ஞானியான நார்மன் போர்லக்கை (Norman Borlaug) இந்தியாவுக்கு அழைத்து, விவசாய உற்பத்தியைப் பெருக்க உதவுமாறு கேட்டார். கோதுமை உற்பத்தியில் நார்மன் ஒரு பெரும் புரட்சியையே உருவாக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் பிரதான உணவு அரிசியாக இருந்த காரணத்தால், நார்மனின் முயற்சி இந்தியாவின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை. பாலைவனத்தில் பெய்த பெருமழை போன்று அப்போதுதான் இந்த ‘ஐ,ஆர்-8’ அரிசி இந்தியாவுக்கு வந்தது. மறுமலர்ச்சி ஏற்படுத்திய சுப்புராவ்: 29 வயது சுப்புராவுக்குத் தான் இந்தியாவின் உணவு உற்பத்தியில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறோம் என்று அப்போது தெரியாது. ஆம், இந்தியாபில் முதன் முதலில் ஐ.ஆர்.8 வகை அரிசியைப் பயிரிட்ட விவசாயி அவர்தான். 1967-ல் சர்வதேச நெல் ஆராய்ச்சி கழகத்திடமிருந்து ஐ.ஆர்.8 விதை அரிசியை வாங்கி, ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த தனது 2,000 ஹெக்டேர் நிலத்தில் பயிரிட்டார். பாரம்பரிய நெல் விதைகள் ஹெக்டேருக்கு இரண்டு டன் மட்டுமே மகசூல் தரும். இந்த ஐ.ஆர்.8 அவருக்கு ஹெக்டேருக்கு ஏழு டன் மகசூல் அளித்தது. சுப்புராவின் இந்த அபரிமித மகசூல், மற்ற விவசாயிகளையும் ஐ.ஆர்.8 நோக்கிப் படையெடுக்க வைத்தது. ஐ.ஆர்.8 இனத்தின் வெற்றிக்கு அதிக மகசூல் மட்டும் முக்கியக் காரணமல்ல. குறைந்த காலத்தில் அது அளித்த அதிக மகசூலும் முக்கியக் காரணம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் எனும் விவசாயி ஒரு ஹெக்டேரில் 16 டன் மகசூல் பார்த்தார்.அந்த நன்றியின் பலனாக, தனது மகனுக்கு ‘ஐ.ஆர்.எட்டு’ என்று அவர் பெயரிட்டது மிகுந்த பேசுபொருளாக அன்று இருந்தது. ஐ.ஆர்.8-ன் வெற்றி இந்திய வேளாண் விஞ்ஞானிகளுக்குப் புதிய பாதை அமைத்துக் கொடுத்தது. அவர்கள் அந்தப் பாதையில் சென்று ஐ.ஆர்.20, ஐ.ஆர்.36, ஐ.ஆர்.50 போன்ற பல புது அரிசி வகைகளை உருவாக்கினர். பழசு மறந்து போச்சு வாடன் சம்பா, முடு முழுங்கி, களர் சம்பா, குள்ளக்கார், நவரை, குழிவெடிச்சான், கார், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, கல்லுண்டை, கருடன் சம்பா, பனங்காட்டு குடவாழை, சீரக சம்பா, வாசனை சீரக சம்பா, விஷ்ணுபோகம், கைவரை சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார், காட்டு யானம், தேங்காய்ப்பூ சம்பா, கிச்சடி சம்பா, நெய் கிச்சிலி போன்ற நமது பாரம்பரிய அரிசி ரகங்கள் எல்லாம் விவசாயிகளுக்கு இன்று மறந்தேவிட்டன. வித விதமான பூச்சி, புழுக்கள் தாக்கும் புதிய ரகங்களை அதிக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அவர்கள் விளைவித்து வருகிறார்கள். பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை என்பதை நினைத்துப் பார்க்கக்கூட நேரமின்றி அவர்கள் வணிகப்பிடிக்குள் சுழன்று வருகின்றனர். எது எப்படியோ பஞ்சத்தால் உணவின்றி மனிதன் மடியும் அவலத்தை நிறுத்தியதில் ஐ.ஆர்.8 ரக அரிசிக்குப் பெரும் பங்குண்டு.

அம்ரித்லால் விட்டல்தாஸ் தக்கர் பாபா (Amritlal Vithaldas Thakkar Baba) பிறந்த தினம் இன்று.

தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த அம்ரித்லால் விட்டல்தாஸ் தக்கர் பாபா (Amritlal Vithaldas Thakkar Baba) பிறந்த தினம் இன்று. # குஜராத் மாநிலம் பாவ்நகரில் ராஜ பரம்பரையை சேர்ந்த லோஹனா சமுதாயத்தில் (1869) பிறந்தார். ஏழைகளுக்கு சேவை செய்வதை தெய்வத் தொண்டாக கருதி செய்தவர்கள் தாய், தந்தையர். அதனால், பிறர் துயர் துடைக்கும் ஆர்வம் குழந்தைப் பருவத்திலேயே இவரிடம் குடிகொண்டது. # நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும், புனேயில் சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமோ படிக்க ஏற்பாடு செய்தார் தந்தை. குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து படித்தவர், 1890-ல் டிப்ளமோ பட்டம் பெற்றார். # ஷோலாப்பூர், பாவ்நகர், போர்பந்தர் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே பொறியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். நேர்மையாக இருந்ததால், வேலையில் நீடிக்க முடியவில்லை. 3 ஆண்டு ஒப்பந்தத்தில் 1900-ல் உகாண்டா நாட்டுக்கு சென்றார். அங்கு முதன்முதலில் இருப்புப் பாதை அமைக்கும் திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். # தாயகம் திரும்பியதும், சாங்லி நகரில் ரயில்வே தலைமைப் பொறியாளர் வேலை கிடைத்தது. அப்போது கோபாலகிருஷ்ண கோகலேவை சந்தித்தார். அவர் மூலம் மகாத்மா காந்தியின் அறிமுகமும் கிடைத்தது. # பின்னர் பம்பாய் நகராட்சியில் வேலைக்கு சேர்ந்தார். ரயில் பெட்டிகளில் அள்ளிவரப்படும் குப்பைகளை தொழிலாளர்கள் அகற்றுவர். அவர்களை மேற்பார்வையிடுவது இவரது பணி. நரகமாக இருந்த குடிசைப் பகுதியில் காலம் தள்ளிய தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் விடிவெள்ளியாக செயல்பட்டார். கந்துவட்டி தாதாக்களிடம் இருந்து அவர்களை மீட்டார். அவர்களது குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார். # வங்காளம், ஒரிஸா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் 1942-ல் வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்தன. ஒரிஸாவில் ஒன்றரை ஆண்டு முகாமிட்டு புனரமைப்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். 74 வயதிலும்கூட தினமும் 20 மணி நேரம் சளைக்காமல் பாடுபடுவார். # குஜராத்தின் பஞ்சமஹால் பகுதியை சேர்ந்த ‘பில்’ ஆதிவாசிகளின் வாழ்வில் ஒளியேற்ற, ‘ஆதிம் சேவா சங்’ என்ற அமைப்பை உருவாக்கினார். கூட்டுறவு சங்கங்கள் அமைத்து அவர்களுக்கு கடன் உதவி வழங்கினார். நூல் நூற்க கற்றுக்கொடுத்து நெசவுத் தொழிலில் ஈடுபட வைத்தார். ஆறே மாதங்களில் ஒரு உறைவிடப் பள்ளி, 4 பள்ளிகள், ஒரு விடுதி, ஒரு மருத்துவ நிலையம், பல கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டன. # காந்திஜி தொடங்கிய ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளராக 1932-ல் பொறுப்பேற்றார். இவரது வேண்டுகோளின்பேரில், தீண்டாமை ஒழிப்புக்காக காந்திஜி 9 மாத சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் திரட்டப்பட்ட நிதி முழுவதையும் ஹரிஜன மக்கள் மேம்பாட்டுக்காக செலவழித்தார். # ‘தாழ்த்தப்பட்ட, ஆதிவாசி மக்களுக்காக பாபா சேவையாற்றியதுபோல என்னால்கூட தொண்டு செய்ய முடியவில்லை. பாபாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் காந்திஜி. # சென்னை தி.நகரில் ஹரிஜன மாணவர்களுக்காக கட்டப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 1946-ல் அடிக்கல் நாட்டி, ‘தக்கர் பாபா வித்யாலயா’ என்று பெயர் சூட்டினார் காந்திஜி. தீண்டாமையை ஒழிக்க வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட தக்கர் பாபா 82ஆவது வயதில் (1951) காலமானார்.

முதல் வீடியோ கேம்-ஆன பாங் வெளியிட்ட நாள்

வணிக அடிப்படையில் வெற்றிபெற்ற முதல் வீடியோ கேம்-ஆன பாங் என்பதை, அமெரிக்க நிறுவனமான அட்டாரி வெளியிட்ட நாள் நவம்பர் 29. மேசைப் பந்தாட்டத்தை(டேபிள் டென்னிஸ்) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, நாணயம் போட்டு விளையாடும்(ஆர்க்கேட்), இருபரிமாண விளையாட்டான இதன் வெற்றியே, வீடியோ கேம் என்ற வணிகத்துறை உருவாவதற்கே காரணமாக அமைந்தது. உண்மையில் இதற்கு முன்னரே, கணினியுடன் ஊடாடி(இண்ட்டராக்ட்) விளையாடும் விளையாட்டுகள் உருவாக்கப்பட்டிருந்தன. 1940இலேயே நிம் என்ற கணிதவியல் விளையாட்டை, மின்காந்த இடைமாற்றி(ரிலே) பயன்படுத்தி விளையாடும் நிமேட்ரான் என்ற விளையாட்டு உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட விளையாட்டுகளில், உண்மையில் வீடியோ என்பதே இல்லை. படக்குழாய்(பிக்ச்சர் ட்யூப்) என்றழைக்கப்படும் கேத்தோட் ரே ட்யூப்(சிஆர்டி) கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, உண்மையிலேயே வீடியோவைக் கொண்ட விளையாட்டுகள் உருவாகின. 1947இல் உருவாக்கப்பட்ட கேத்தோட் ரே ட்யூப் அம்யூஸ்மெண்ட் டிவைஸ் என்ற முதல் வீடியோ கேம் கருவிபற்றி இத்தொடரிலேயே 2018 ஜனவரி 25இல் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமையான ‘பின்பால்’ விளையாட்டு, வீடியோ கேமாக இல்லாவிட்டாலும், நாணயம் போட்டு விளையாடும் விளையாட்டாக 1933இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே, நாணயம் போட்டு விளையாடும் ஆர்க்கேட் விளையாட்டுகளின் வரலாறு தொடங்கிவிட்டது. 1950-60களில், கல்லூரி வளாகங்களில் மெய்ன்ஃப்ரேம் கணினிகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், மாணவர்கள்(ஆசிரியர்களும்தான்!) நிரல்கள்மூலம் இயங்கும் விளையாட்டுகளை உருவாக்கத் தொடங்கினர். அவ்வாறு உருவாக்கப்பட்டவற்றில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், மாசாச்சூசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியவற்றின் ஊழியர்களால் 1962இல் உருவாக்கப்பட்ட ‘விண்வெளிப் போர்(ஸ்பேஸ்வார்)’ என்பதுதான், முதன்முதலில் பரவலாக அறியப்பட்ட கணினி வீடியோ கேம். கணினிகள் பரவலானதும், எளிமையாக நிரல்களை எழுத உதவிய மொழிகளின் வரவும், அதிக வீடியோ கேம்கள் உருவாகக் காரணமாயின. 1971இல் “கம்ப்யூட்டர் ஸ்பேஸ்” என்ற கேமை, அட்டாரி நிறுவனமே வெளியிட்டிருந்தாலும்கூட, இந்த பாங்-தான் வீடியோ கேம் புரட்சியைத் தொடங்கிவைத்தது. ஏராளமான ஆர்டர்கள் குவிய, உள்ளூர் வேலையின்மை அலுவலகத்தின்மூலம் புதிய ஊழியர்களை நியமித்த அட்டாரி, 1973இல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. ‘கேமிங் கணினி’ என்பது கணினிகளின் உயர்ந்த திறனைக் குறிக்குமளவுக்கு இன்று மிகப்பெரிய துறையாகிவிட்ட வீடியோ கேமிங் துறையின் தற்போதைய ஆண்டு வருவாய் சுமார் ரூ.18 லட்சம் கோடி

கிறிஸ்டியன் ஆந்திரேயாசு டாப்ளர் (Christian Andreas Doppler, நவம்பர் 29, பிறந்த நாள் 

1803 – மார்ச் 17, 1853) ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் ஆவார் 1842 ஆம் ஆண்டு இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வின் மூலம் டாப்ளர் விளைவைக் கண்டுபிடித்தார். ஒலிமூலம் இயக்கத்தில் உள்ளபோது, அது உருவாக்கும் ஒலியின் சுருதியில் தோற்ற மாற்றம் ஏற்படும் என்ற கருத்தினை வெளியிட்டார். இவரது இக்கருத்து திசைவேகம் மற்றும் பொருட்களின் தொலைவு கண்டறியும் முறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது. கிறிஸ்டியன் டாப்ளர் ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி ஆவார். இயற்கையிலேயே உடலால் மிகவும் பலகீனமாக இருந்தமையால் இவர் தன் தந்தையின் தொழிலை மேற்கொள்ளவில்லை. இவர் தனது உயர்கல்வியை முடித்ததும் வியன்னா மற்றும் சல்ஸ்பெர்கில் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்று முடித்தார். பிராகா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் (தற்போதைய செக் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்) பணியாற்றினார்.

டாப்ளர் தனது 39 ஆம் வயதில் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வினை வெளியிட்டார். இது அவரை 1845 -ல் டாப்ளர் விளைவைக் கண்டறியத் தூண்டுகோலாய் இருந்தது. டாப்ளர் செக்கோசுலவாக்கியாவில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது கணிதம், இயற்பியல், இயந்திரவியல் மற்றும் வானியல் சார்ந்த 50 -க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார். 1848-ல் வியன்னாவுக்கு குடிபெயர்ந்த டாப்ளர் வியன்னா பல்கலைகழகத்தில் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். மரபியலின் தந்தை எனப்படும் கிரிகொர் மென்டல் வியன்னாவில் 1851 முதல் 1853 இவரது மாணவராக இருந்தார்.

டாப்ளரின் முழுப்பெயரில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. டாப்ளர் தனது பெயரை கிறிஸ்டியன் டாப்ளர் எனக் கூறிக்கொண்டார். அவருடைய பிறப்பு ஆவணங்கள் அவரை கிறிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர் எனக் குறிப்பிடுகின்றன. வானியல் அறிஞரான ஜூலியஸ் சைனர் இவர் பெயரை ஜோகான் கிறிஸ்டியன் டாப்ளர் எனத் தவறுதலாக அறிமுகம் செய்தார். அன்றிலிருந்து இவருடைய பெயரைப் பலர் அவ்வாறே தொடருகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...