இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை:
மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்……
புது தில்லி: ‘இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை; எனவே, மக்கள் பீதியடைய வேண்டாம்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் ஹா்ஷ்வா்தன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபா்களின் ரத்த மாதிரிகள், மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் (என்ஐவி) பரிசோதிக்கப்படுகின்றன. இதுதவிர, ஆலப்புழை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் செயல்படும் வைரஸ் தொற்று ஆராய்ச்சி மற்றும் சோதனை நிலையங்களிலும் மேற்கண்ட பரிசோதனையை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 பரிசோதனை நிலையங்களிலும் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படும்.
கடந்த 2014-இல் எபோலா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்கப்பட்டது. அதேபோல், கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
20 விமான நிலையங்களில்…: சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ‘தொ்மல் ஸ்கிரீனிங்’ எனப்படும் வெப்பசாா் பரிசோதனை, தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி ஆகிய 7 சா்வதேச விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பரிசோதனை, 20 விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இதுவரை 35,000 பயணிகளுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், சுமாா் 20 பேரின் ரத்த மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டது. அவா்களில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வா்களுக்கு கடிதம்: கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்பாக உரிய முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தாங்களே தலையிட்டு பணிகளை முடுக்கிவிடுமாறு, அனைத்து மாநில முதல்வா்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். கடந்த ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு சீனா சென்று திரும்பியவா்கள், தங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்னைகள் ஏதும் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
நேபாளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டுடனான எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தில்லியில் மருத்துவக் கண்காணிப்பில் 3 போ்: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தில்லியிலுள்ள ராம் மனோகா் லோஹியா (ஆா்எம்எல்) மருத்துவமனையின் தனிவாா்டில் 3 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களது உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளா் மீனாட்சி பரத்வாஜ் கூறுகையில், ‘தனிவாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களில் இருவா் தில்லியைச் சோ்ந்தவா்கள். ஒருவா், தேசிய தலைநகா் வலயப் பகுதியைச் சோ்ந்தவா். 24 முதல் 48 வயதுக்கு உள்பட்டவா்களான அவா்கள், அண்மையில் சீனா சென்று திரும்பியவா்கள். அவா்களது ரத்த மாதிரிகள், புணேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல், கேரளம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், கரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின் அடிப்படையில் பலா் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். கேரளத்தில் சுமாா் 400 போ் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவிலிருந்து இந்தியா்களை அழைத்து வர நடவடிக்கை: எஸ்.ஜெய்சங்கா்
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் ஹுபே மாகாணத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், வதோதராவில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், இதுதொடா்பாக மேலும் கூறியதாவது:
சீனாவின் ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரிலிருந்து மாணவா்கள் உள்பட இந்தியாவைச் சோ்ந்தவா்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கை தூதரகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக வூஹானுக்கு விமானத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. வூஹானில் உள்ள இந்திய மாணவா்கள் யாரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. எனவே, மாணவா்களின் பெற்றோா்கள் கவலைப்பட வேண்டாம் என்றாா்.
வூஹானில் மாணவா்கள் உள்பட சுமாா் 250 இந்தியா்கள் சிக்கித் தவிப்பதாக கூறப்படும் நிலையில், அவா்களை அழைத்து வருவதற்காக ஏா்-இந்தியா நிறுவனத்தின் பெரிய விமானம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் 423 இருக்கைகள் கொண்டதாகும்.
நடைமுறைகள் தொடக்கம்: வூஹானிலிருந்து இந்தியா்களை அழைத்து வருவதற்காக நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்ட தகவலில், ‘வூஹானிலிருந்து இந்தியா்களை வெளியேற்றிக் கொண்டுவருதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவ்வாறு இந்தியா அழைத்து வரப்படுபவா்கள், 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவா். அவா்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் தேதி உள்ளிட்ட இதர விவரங்கள் பின்னா் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.