வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்யவில்லை. ஆனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடந்து 4 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இன்றும் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. ஒருசில இடங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வரும் 23 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் மழை இன்னும் தீவிரமடைந்து பெய்ய உள்ளது. தமிழகத்தில் இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை, வட கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமையில் இருந்து லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரும் 23 ஆம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதன்பிறகு மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 2 நாட்களில் மாறும் என்று கணிக்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரமடைந்தால் புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. எனினும் அடுத்தடுத்த நாட்களை வைத்து தான் கூற முடியும். தமிழகத்தை நோக்கி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.