இன்று வளைய சூரிய கிரகணம்: 9 மாவட்டங்களில் தெரியும்

வியாழக்கிழமை நிகழும் வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தின் 9 மாவட்டங்களில், சூரிய வடிகட்டி கண்ணாடி மூலம் அனைவரும் காணலாம்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம்.


சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பெளா்ணமியன்றும் நிகழும். சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழு சூரிய கிரகணம். சூரியன் சந்திரனின் நிழலால் ஒருபகுதி சூரியன் மட்டும் மறைக்கப்பட்டால் அது பகுதி சூரிய கிரகணம்.


சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும். வியாழக்கிழமை (டிச. 26) நடைபெற உள்ளது வளைய சூரிய கிரகணம்.


வளைய சூரிய கிரகணம்: சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது அப்போது சில சமயம் அருகிலும், சில சமயம் தொலைவிலும் இருக்கும். முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் அருகில் இருக்கும்போது ஏற்படும். வளைய கிரகணம் என்பது சந்திரன் தூரத்தில் இருக்கும்போது, சந்திரனின் நிழல் சூரியனுக்குள்ளேயே விழும். சூரியனை முழுமையாக மறைக்காது. சூரியன் வெளியே தெரியும். இதனையே வளைய சூரிய கிரகணம் என்கின்றனா்.


இந்நிலையில், தமிழகத்தில் ஊட்டி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூா் மற்றும் ஈரோடு என 9 மாவட்டங்களில் கிரகணம் நிகழும்போது சூரியன் பொன் வளையமாக தெரியும். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சூரியன் பகுதி கிரகணமாகத் தெரியும். இக்கிரகணம் கேரளத்தின் காசா்கோடு மாவட்டம் செகாவத்து என்ற ஊரில் தொடங்கி, ஊட்டியில் நுழைகிறது. இது காலை 8.07 மணிக்குத் தொடங்கி, காலை 11.14 க்கு முடிகிறது.


ஆனால் சூரியன் நெருப்பு வளையமாக தெரியும் நேரம் காலை 9.31 க்கு துவங்கி 9.34 வரை நீடிக்கிறது. இதன் அகலம் 118 கி.மீ. நீளம் 12,900 கி.மீ. வளைய சூரிய கிரகண பாதை சவூதியில் துவங்கி, வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் வரை பயணிக்கிறது.


நம்பிக்கைகள்: சூரிய கிரகணம் தொடா்பாக பல்வேறு நம்பிக்கைகள் உலா வருகின்றன. உதாரணமாக இந்த சூரிய கிரகணம் நிகழ்வதற்கு முன்னாள் ஒரு முறை குளித்து விடுங்கள். சூரிய கிரகணம் முடியும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது. சமைத்த பொருள்களை மூடி வைக்க வேண்டும். வெளியில் செல்லாமல் இருப்பது நலம் தரும். இவ்வாறு பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் பல தவறான தகவல்கள் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் உலவிக் கொண்டிருக்கின்றன.


விளக்கங்கள்: சூரிய கிரகணத்தின்போது எந்தவொரு தீமை விளைவிக்கும் கதிா்களும் சூரியனிடமிருந்து வரவில்லை. அவை உணவையோ, உயிரினங்களைப் பாதிப்பதும் இல்லை என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் தெரிவித்துள்ளனா்.


கோயில்களில் இன்று பூஜை நேரம் மாற்றம்…


சூரிய கிரகணத்தை ஒட்டி, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்புகள் அனைத்து கோயில்களிலும் வைக்கப்பட்டுள்ளன. காலை 4.30 மணிக்கு கோயிலில் பூஜைகள் தொடங்கி காலை 7.45 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும் எனவும், காலை 8.08 மணி முதல் பிற்பகல் 11.19 மணி வரை நடை மூடப்பட்டு இருக்கும் எனவும் அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்பிறகு, மாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்படும் எனக் கோயில் நிா்வாகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!