‘பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்’!
‘டீ குடிக்கப் போன சேல்ஸ் மேன்’…. ‘ஸ்கூட்டர் மீது மோதி’… ‘30 அடி தூரம் இழுத்துச் சென்ற கார்’… ‘பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்’!
சென்னையில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதி, 30 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரில் வசித்து வந்தவர் லோகநாதன் (49). இவர் மருத்துவத்துறையில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை, வண்டலூரில் பணியை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். வண்டலூர்-மீஞ்சூர் சாலையில், குன்றத்தூர் அருகே சர்வீஸ் சாலையோரம் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக ஸ்கூட்டரை திருப்பினார்.
அப்போது குன்றத்தூர் நோக்கி வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதி, சுமார் 30 அடி தூரம் ஹெல்மெட் பறந்தநிலையில், ஸ்கூட்டருடன் லோகநாதனை கார் இழுத்துச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தை டீ கடையில், இருந்தவர்கள் பார்த்து அச்சமடைந்தனர்.
அதன்பின்னர், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லோகநாதன் உடலை மீட்டு பிரேதர் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்து காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.