இகழ நினைக்காத இலக்கியவாதிகள்!
இகழ நினைக்காத இலக்கியவாதிகள்!
இரா. சம்பந்தன்
விலங்கு இனத்திலே நன்றிக்கு இலக்கணமாகக் கொள்ளப்படுவது நாய்! அது போல இழிபிறப்பாகக் கொள்ளப் படுவதும் நாய்தான்! படித்தவர்கள் முதற்கொண்டு பாமரர்கள் வரை நாய்களை நன்றிக்கு உதாரணம் காட்டிதை விட இகழ்ச்சிக்கே அதிகமாக எடுத்துப் பேசியிருக்கிறார்கள்!
திருவாசகத்திலே நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத் தாயில் சிறந்த தயவான தத்துவனே என்பார் மாணிக்கவாசகர்! நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை என்பார் இன்னோர் இடத்தில்! திருவாசகம் முழுவதும் நாய் என்ற பதம் பரவி வருகின்றது இழிவுப் பொருளில்!
இறைவன் பித்தா பிறை சூடி என்று அடியெடுத்துக் கொடுத்த பாடலைப் பாடி முடித்துக் கொண்டு இரண்டாவது பாட்டிலேயே நாயேன் பலநாள் நினைப்பின்றி மனத்துன்னை என்று தொடங்கி விடுகிறார் சுந்தரர்!
குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டிலே அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்வித் தாலும்
அக்குலம் வேறது ஆமோ அதனிடம் புனுகு உண்டாமோ
குக்கலே குக்கல் அல்லால் குலந்தனில் பெரியது ஆமோ
என்று பேசும் விவேக சிந்தாமணி! குக்கல் என்று அழைக்கப்படும் நாய்க் குலத்தை வாசனைத் திரவியமான புனுகைத் தருகின்ற நாவி என்று சொல்லப்படும் புனுகுப் பூனை வாழ்கின்ற கூட்டிலே அடைத்து வைத்து மஞ்சள் பூசி மணம் வீச வைத்து உயர்வு செய்தாலும் அதனிடம் இருந்து புனுகு வராது. எப்பவும் நாய் நாய்தான்! அந்தக் குலத்துக்கு உயர்வு வராது! என்று கடுமையாகப் பேசும் விவேக சிந்தாமணி!
இனிக் கம்பரும் நாயை விட்டு வைக்கவில்லை! இராவணன் முதல் நாள் போரிலே தோல்வி அடைந்து இருந்த போது தன்னைப் பார்க்க வந்த பாட்டன் மாலியவானுக்கு மனம் நொந்து ஒரு கருத்தைச் சொல்வதாக கம்பர் ஒரு பாடல் எழுதினார்.
போயினித் தெரிவதென்னே பொறையினால் உலகம் போற்றும்
வேயெனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கி
தீயெனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்
நாயெனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம்!
தாத்தா! இனி என்ன சொல்ல இருக்கிறது? நெருப்புப் போல களத்திலே பகைவரைச் சுட்டெரிக்கும் இராமனின் வீரத்தை நான் பார்த்தேன். அப்படிப்பட்ட வீரன் ஒருவனுக்கு மனைவியாக இருக்கும் சீதைக்கு மன்மதனும் நானும் நாய்க்குச் சமம். அவள் என்னை விரும்ப மாட்டாள் என்பதனை இன்று கண்டு கொண்டேன் என்று இராவணன் சொல்வான்! இஙகேயும் இழிவுக்கு கம்பர் எடுத்துக் கொண்டது நாய்!
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியார் பாண்டவர்களைச் சூதாட்த்திலே துரியோதனன் கூட்டம் வென்ற பொழுது பொறுக்க முடியாமல் விதுரன் கவலைப்பட்டதாக ஒரு கவிதை சொன்னார்.
அங்கம் நொந்து விட்டான் – விதுரன்
அவலம் எய்தி விட்டான்
சிங்கம் ஐந்தை நாய்கள் – கொல்லும்
செய்தி காணல் உற்றே!
சிங்கத்தை நாய் எப்படிக் கொல்லலாம்? என்ற இழிவு மனப்பான்மை பாரதிக்கும் வந்து விடுகின்றது. அதனால் நாய் இங்கும் இழிவுப் பொருள் பெற்று விடுகின்றது. கவிஞர் கண்ணதாசன் கூட சினிமாப் பாடல் ஒன்றிலே கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றிமிக்க நாய்கள் உள்ள நாடு என்று எழுதினார்! இவ்வாறு நாய் பல இடங்களில் பலராலும் இழித்துரைக்கப் பட சில இலக்கிய ஆசிரியர்கள் மட்டும் நாயை உயர்வாகவோ அன்றி இழிவாகவோ எந்த இடத்திலும் கையாளாமல் விட்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஒளவையார். மற்றவர் அவரோடு சம்பந்தமுடைய திருவள்ளுவர்!
நீதி நெறியைப் போதிக்க வந்த இருவரும் மிகவும் சுலமாக பயன்படுத்தியிருக்கக் கூடிய உதாரணம் நாய்! இருவருமே நன்றியைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்! அங்கே நாயைக் கொண்டுவந்தால் தவறு இருக்காது. ஆனால் பயன்படுத்தவில்லை! அது போல இழி மக்களைப் பற்றிக் கயவர் தீயார் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அங்கும் நாய் கொண்டுவரப்படவில்லை!
காள மேகப் புலவர் தன்னை எடி என்று சொன்னதற்காக ஒளவை அவரைத் திட்டி ஒரு பாடல் சொன்னாள்.
எட்டேகால் இலட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது
என்பது ஒளவையின் பாடல்! இதிலே எமனேறும் பரி எருமை! பெரியம்மை வாகனம் மாடு இராம தூதுவன் குரங்கு! எல்லாம் கோபத்தில் வந்து விடுகின்றன! ஆனால் நாய் என்ற வார்த்தை வரவில்லை! நிச்சயமாக வந்திருக்க வேண்டிய இடம் அது. கோபத்திலும் ஒளவை நாயைக் கொண்டு வரவில்லை!
திருவள்ளுவரை எடுத்துக் கொண்டால் கான முயல் எய்த அம்பு என்று முயலைக் கையாளுவார். ஆவுக்கு நீரென்று இரப்பினும் என்று பசுவைப் பயன்படுத்துவார்! புலி தாக்குறின் என்று புலியைப் பயன்படுத்துவார்! பொருதகர் என்று ஆட்டுக் கடாவைப் பற்றிப் பேசுவார் பரியது கூர்ங்கோடது என்று யானை பற்றிப் பேசுவார்! ஒலித்தக்கால் என்னாம் எலிப்பகை என்று எலியைக் குறளுக்கு கொண்டு வருவார் மயிர் நீர்ப்பின் வாழாக் கவரிமான் என்று மானைத் தொட்டுக் காட்டுவார்! மடல்மா என்று குதிரையின் குறிப்பும் வரும்! ஆனால் எந்த இடத்திலும் நாய் என்ற வார்த்தை திருக்குறளில் இல்லை!
ஏன்? இவர்கள் இருவரும் உற்ற நோய் நோற்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை ஆகிய தவ நெறியிலே வாழ்ந்தவர்கள்! நாயாக இருந்தாலும் அதை இகழ்ந்து பேச அந்தச் சான்றோர்கள் அறிவு இடம் தரவில்லை! அதைப் புகழவும் அவர்கள் முயலவில்லை! காரணம் சில ஈனத் தனங்கள் நாயிடமும் உண்டு. ஆனால் அதைச் சுட்டிக் காட்டவும் அவர்கள் விரும்பவில்லை. அப்படியே விட்டுவிட்டார்கள்! நாய் மட்டுமல்ல இழி வழிப் படரும் எந்த விலங்கும் ஒளவை வள்ளுவர் என்ற இரு புலவர் பெருமக்களாலும் எடுத்தாளப் படவில்லை!
முல்லைக்குத் தேரைக் கொடுத்தான் பாரி! புறாவுக்கு உடலைக் கொடுத்தான் சிபி! மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பேகன்! என்றெல்லாம் படிக்கின்றோம்! ஆனால் நாய்க்கு வள்ளுவரும் ஒளவையும் செய்த நன்றியும் இந்தக் கொடைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்பதே உண்மையாகும்!
by
இரா. சம்பந்தன்
நன்றி: நந்தவனம்