செல்வத்தை அள்ளித்தரும் குபேர கிரிவலம் நாளை: என்ன செய்யவேண்டும்?

 செல்வத்தை அள்ளித்தரும் குபேர கிரிவலம் நாளை: என்ன செய்யவேண்டும்?

செல்வத்தை அள்ளித்தரும் குபேர கிரிவலம் நாளை: என்ன செய்யவேண்டும்?

    கிரிவலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தான். பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள புண்ணிய பூமி. திருவண்ணாமலையில் கிரிவலம் தெரியும்.. அதென்ன குபேர கிரிவலம்? 

பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. 

   அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையில் உயரம் 2,688 அடியாகும். அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி  மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறிவந்துள்ளது.

   எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி  லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை  வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.

குபேர கிரிவலம்

   ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சிவராத்திரியன்று பிரதோஷ காலமான மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கத்துக்கு, குபேர பகவானே மறைமுகமாக வந்து பூஜை செய்வதாகவும், பூஜை முடிந்த பிறகு 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை குபேரா் வலம்  வருவதாகவும் நம்பப்படுகிறது.

   எனவே, அண்மைக்காலமாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள குபேர லிங்கத்துக்கு கார்த்திகை மாத சிவராத்திரி தினத்தன்று சிறப்புப் பூஜைகள், மகா  தீபாராதனை நடைபெறுகின்றன. மாலை 5 மணிக்கு லிங்கத்துக்கு குபேரரே செய்வதாக நம்பப்படும் சிறப்பு அபிஷேகம், ஆராதனையைக் காண ஏராளமானோர் குவிகின்றனர்.

       அதன்படி, நிகழாண்டுக்கான குபேர கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை (நவ.24)-ம் தேதி வருகிறது. அன்றைய தினம் கிரிவலப் பாதையில் உள்ள வீடுகள் முன்பு பெண்கள் அரிசி  மாவு கோலம் போட்டு, வெற்றிலை வைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபடுவர். மாதந்தோறும் பக்தா்கள் கிரிவலம் வருவதைப்போலவே குபேர கிரிவலத்துக்கும் பல ஆயிரம்  பக்தா்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  கிரிவலம் வரும்போது பக்தர்கள் ஒவ்வொரு வினாடியும் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டுமே தவிர தொலைபேசியில் பேசுவதோ, நண்பர்களுடன் அரட்டை அடிப்பதோ,  வாட்ஸ்ஆப் மூலம் சாட்டிங் செய்வதோ கூடாது. நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களை மனதில் சொல்லலாம். ஸ்லோகங்கள் எதுவும் தெரியவில்லை எனில், “ஓம் நமசிவாய”  என்றபடியே சொல்லி வலம் வரலாம். 

14 கி.மீ கிரிவலம் முடித்து கடைசியாக அருணாசலேஸ்வரரையும் உண்ணாமுலை அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு, நேராக அவரவர் ஊருக்குச் செல்லவேண்டும்.  அப்போது தான் கிரிவலம் செய்ததற்கான முழு பலன் நமக்குக் கிடைக்கும். 

குபேர கிரிவலம் செய்வதால் நோய் அகலும், செல்வம் பெருகும், பாவம் போக்கும். செல்வத்துக்கு அதிபதியான குபேரரின் அருளும், சிவபெருமானின் ஆசியையும்  பரிபூரணமாகக் கிடைக்கும். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...